
இது எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. உள்ளத்திலிருந்து சில வார்த்தைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.அக உணர்வுகளின் உந்துதலிலிருந்தும் சமூகப் புறச்சூழல்களின் தாக்கத்திலிருந்தும் வெவ்வேறு தருணங்களில் கருக்கொண்டவையே இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். கவிதை தோன்றுகின்ற அக-புறத் தூண்டுதல்கள் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவை அந்தந்தத் தருணங்களின் மனநிலைகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. இதைத்தான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டு இக்கவிதைகள் எழுதப்படவில்லை. அப்படி எழுதும் கவிதைகள் உயிர்ப்புடையனவாக வந்துவிடுவதுமில்லை. மனநிலை, மனிதர்கள், அனுபவங்கள், சம்பவங்கள், தாக்கங்கள், சமூகம், அரசியல், இயற்கை, ஆழ்மனதைத் துழாவும் நினைவுகள், அலைக்கழிக்கின்றதும் உந்துதலுமான கனவுகள், காலம், தூரம் கவிதைகளின் பேசுபொருளைத் தீர்மானித்திருக்கின்றன.
என் கவிதை ஆர்வத்திற்குரிய ஆரம்பம் அல்லது அடித்தளமாக இலக்கிய இதழ்கள், கவிதைத் தொகுப்புகள் மீதான வாசிப்பு இருந்துள்ளது. கவிதை மீதான ஈர்ப்பும் விருப்பும் ஈடுபாடும் பதின்ம வயதில் ஏற்பட்டிருந்தாலும், கவிதைகளை எழுதுவதற்கான முயற்சிக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வப்போது நாடக, அரங்க, நடன நாடகங்களுக்கான பல பாடல்களையும் தன்னார்வ உந்துதலால் தனிப்பாடல்களையும் எழுதிவந்திருக்கின்றேன்.
2014 - 2019 வரையான ஐந்து ஆண்டுகளுக்குள் எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியிலேயே வெளிப்பாட்டிலும், நடையிலும் உத்தியிலும் எனக்கான ஒரு கவிதைமொழியையும் வடிவத்தையும் ஓரளவு கண்டடைந்திருப்பதாகக் கருதுகின்றேன். என்னளவில் ஓரளவு திருப்தி கொள்கின்ற இந்த அடைவிற்கு உந்துதலாக இருந்தவர்கள் கவிஞர்கள் க.ஆதவன், கவிதா லட்சுமி, அறிவுமதி, மற்றும் கி.பி அரவிந்தன் ஆகியோர். கவிதைகள் சார்ந்து அவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களும், அவர்களின் காத்திரமான விமர்சனங்களும் உரிமையுடனான சுட்டிக்காட்டல்களும் அதற்குத் துணைநின்றமையை இங்கு பதிவுசெய்வது பொருத்தமானது.
கவிதை என்பது சொல்விளையாட்டு அன்று. மொழிக்கு அலங்காரம் பூசும் கலையுமன்று. அதனைத் தாண்டிய உணர்வும் உயிரும் வடிவமும் உத்தியும் உள்ளடக்கமும் சொல்முறையும் பார்வையும் பிரதிபலிப்பும் அதற்குள் இருக்கவேண்டும் என்பது கவிதை பற்றிய எனது புரிதல். இந்தப் புரிதலும் நாட்டமும் புதுக்கவிதைகளைத் தேடிச்செல்ல வழி கோலியது. தவிர நோர்வேஜிய மற்றும் ஆங்கிலக் கவிதைகள் மீதான ஈடுபாடும் அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்க்கின்ற செயற்பாடும் கவிதை பற்றிய தேடலுக்கும் புரிதலுக்குமான மற்றொரு வெளியைத் தந்திருப்பதாக உணர்கிறேன்.
கவிதை உணர்வுகளால் ஆனது எனும்போதும் வாசக மனதிற்கு எதனைக் கடத்துகிறது, எதனை உணர வைக்கிறது என்பதில்தான் அதன் உள்ளார்ந்த பெறுமதி உள்ளது. தனக்கான அனுபவமாக அல்லது தனக்கு அறியக்கிடைத்த ஒர் அனுபவமாக வாசக மனதை உணரச் செய்கின்றபோது தன்னுணர்வுக் கவிதை பொதுத்தன்மையை பெறுகின்றது. பொது அனுபவமாக மாறுகின்றது.
சமூக உறவு, மனித இருப்பின் முரண், மனம், வாழ்வின் எதிர்கொள்ளல்கள், கொண்டாட்டங்களை இத்தொகுப்பின் கவிதைகள் பேசுகின்றன. என்னைத் துயரப்படுத்துகின்ற, என்னை கோபப்படுத்துகின்ற, எனக்கு ஏமாற்றமளிக்கின்ற, நான் விமர்சனம் கொண்டுள்ளவைகளும் கவிதைகளாகியுள்ளன. காதலின் வாழ்தல்-நினைவுகள்-ஏக்கங்கள், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலான உறவும் முரணும், பிறந்த தேசம், வாழும் தேசம், உலகம், போர் அவலம், தகவல்யுக வாழ்வும் பிரதிபலிப்புகளும், அரசியல் எனப் பல்பரிமாணத்தன்மையுடைய பேசுபொருட்களை கவிதைகள் காவி வருகின்றன.
என் சமூக, அரசியல் விமர்சனக் கவிதைகளுடன் உங்களில் யாருக்காவது கருத்தியல் முரண்பாடுகள் வரலாம். எனினும் என் கருத்தியல் நிலைப்பாட்டிற்கு நான் உண்மையாய் இருப்பதனை வெளிப்படுத்தும் கவிதைகள் அவை.
இத்தொகுப்பிற்கு விரிவான அறிமுக-விமர்சனக் குறிப்பினை எழுதியுள்ள அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பேராசிரியர் ந.சண்முகரத்தினம், அணிந்துரை எழுதியுள்ள என் மீது பேரன்பும் அக்கறையும் கொண்ட அண்ணன் கவிஞர் அறிவுமதி, இத்தொகுப்பிற்கான ஓவியங்களை வரைந்த துசி, தொகுப்பினை வெளியிடும் ‘Dicovery Book Palace’ பதிப்பக நிறுவனர் நண்பர் வேடியப்பன் ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும்.
என் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவரவேண்டுமென்று விரும்பி உற்சாகம் தந்த நண்பர்கள் கேமச்சந்திரன் மார்க்கண்டு, சர்வேந்திரா தர்மலிங்கம், கவிதா லட்சுமி ஆகியோரையும் தோழமையுடன் நினைவு கொள்கிறேன்.
கவிதைகளுக்கு அப்பால், கட்டுரைகளைத் தொடர்ச்சியாக நான் எழுதி வருகின்றமை அறிந்ததே. வேலை, குடும்பத்திற்கான நேரத்திற்கு அப்பால், எழுதுவதற்கும் சமூகப் பணிகளுக்குமான நேரமும் சூழமைவும் இலகுவில் அமைந்துவிடக்கூடியதல்ல. அதனைச் சாத்தியப்படுத்தும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் புரிதலும் குறிப்பிடப்பட வேண்டியது.
இதிலுள்ள கவிதைகளிற் பல காக்கைச் சிறகினிலே, பொங்குதமிழ் இணையம், தை, தமிழர்தளம் ஆகியவற்றில் வெளிவந்தவை. அந்த இதழ்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைப் பகிர்ந்துகொள்கிறேன்.
வாசிப்பனுபவங்களையும் கருத்துகளையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
தோழமையுடன்
ரூபன் சிவராஜா