கடல் கடந்த பறவைகள் நாம்
தினம் கண்ணீர் விடும் பறவைகள் நாம்
தாய்த் தேசம் தள்ளி வந்து
தினம் தவிக்கின்ற பறவைகள் நாம்
புலம் பெயர்ந்தோர் எனும் பெயரில்
புலத்தை விட்டு வந்தவர் நாம்
தாயிழந்த பிஞ்சுகள் போல்
மொழியிழந்து வாடுகின்றோம்.
வந்துவிடு சோதரியே
நம் தேசம் சென்றிடலாம்…
எம் ஊரின் வனப்பை இங்கு
எங்கு சென்று தேடிடுவாய்
கொட்டிலோ குடிசையோ
திண்ணையிலே படுத்துறங்கி
தென்னையிடை தாலாட்டி வந்திடும்
தென்றல் காற்றின் சுகம்
கிடைத்திடுமோ உனக்கிங்கே
வந்துவிடு சோதரியே
நம் தேசம் சென்றிடலாம்…
வானுயர்ந்த கட்டிடம் தான்
வனப்பென்று நினைத்தாயோ?
பூட்டிய வீட்டினுள்ளே
மூச்சடக்கி வாழும் வாழ்வை
ஏற்க நீயும் மறுப்பதேனோ?
வீதி வரை வந்த காற்று இங்கு
வீட்டு வாசல் ஏகலையே
கொட்டும் பனியும் கொடூரக் குளிரும்
வாட்டி வதைத்திடவே
வாழுமிந்த சிறை வாசம் போது மிங்கே
சுதந்திரமாய் பறந்திடவே
வந்துவிடு சோதரியே
எம் தேசம் சென்றிடலாம்….
ஒற்றையடிப் பாதையும்
ஊர் எல்லை வரவேற்றுப் பதாதையும்
நாற்புறத்து கோவிலும்
நாதஸ்வரக் கச்சேரியும்
சந்தியடி ஆலமரமும்
மதவடி இருக்கையும்
வயலும் வனப்பும்
குளமும் அல்லியும்
சிட்டுக் குருவிச் சத்தமும்
அந்தி சாயும் அழகும்
மார்கழிக் கோலமும் மணமணக்கும்
மண் பானைச் சமையலும்
கிடைத்திடுமா உனக்கிங்கே
வந்து விடு சோதரியே
நம் தேசம் சென்றிடலாம்.
தமணிகை பிரதாபன்