- புவனேந்திரன் தட்ஷணாமூர்த்தி -
எக்ஸ்-கதிர்ப்பரிசோதனைக் கட்டிலிலிருந்து அவரைத்தூக்கி அவரது கட்டிலுக்கு மாறியதும்
அவர் என்னை நோக்கித் தன் இரு கைகளையும் நீட்டினார்
உடனேயே பின்னிழுத்தும் கொண்டார்.
கண்ணுக்குப் புலப்படாத சீவன்களுடன் கொண்டிருந்த கனவான் ஒப்பந்தத்தை
மனிதன் மீறிய அன்றும் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கும்.
நன்றி மகனே!
துளித்தடுப்பு மூக்குவாயுறைக்குள்ளிருந்து
அவர் ஈனக்குரல் குரல் கேட்டது.
அவ்விரண்டு சொற்களுக்கான காற்றை இழுக்க
அவருக்குத் தேவைப்பட்ட நேரத்துள்
என்னால் ஒரு கவிதையை அவருக்காக வாசித்து விட முடியும்.
அவரது நுரையீரற்பைகள் அடைத்துக்கொண்டு வருகின்றன.
இன்றிரவே அவர் வாயில் இருந்து வார்த்தைகள் வரமுடியாதபடி
காற்றூட்டும் இயந்திரத்தின் குழாய்கள் அவரது சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடக்கூடும்.
தீவிர சிகிஸ்சைப்பிரிவில் குப்புறக்கிடக்கும் அவருக்கு
வெளியே இலைதுளிர் காலம் பிறப்பது தெரியாமலேயே போய்விடக்கூடும்.
காற்றூட்டும் நுரையீரல் இயந்திரங்களின் மென்னொலி கூட்டாகிப்பெருகி
வசந்தகாலக் குருவிகளைக் கலைத்து விடுகிறது.
கையுறையூடு அவர் கைகளைப் பற்றி விரைவிற் குணமடையுங்கள் என்றேன்
ஓளியிழந்த கண்களினூடு அவர் சிரித்தார்
அது கொரோனாவின் சிரிப்பு.