தேவ அபிரா
திரும்பும் வழியில் அன்றைய தினசரியை வாங்கிக் கொண்டேன்.
எழுதுபொருட்களும் அலைவின் சேகரங்களும் இருந்த எனது தோட்பை கனத்தது.
நான் ஓய்ந்தமரும் பூங்காவில் இருந்த பெரும் கல் மேசையிற் பையை வைத்தேன்.
கற்கதிரையில் அமர்ந்து தினசரியை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.
தினசரியை விலக்கிப் பார்த்தேன்.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை தேநீர் நிரம்பிய குளங்கள் எதுவும் தென்படவில்லை.
எச்சிலை விழுங்கியபடி தினசரிக்குள் மூழ்கினேன்.
காகம் ஒன்று கரையும் குரல் கேட்டது.
வாசிப்புக்குள்ளிருந்து வெளியே வந்தேன்.
காகம் எங்கிருந்து அச்சிறுவாயுள்ள மண்குடத்தைக் கொண்டுவந்தது?
அதனுட் சிறிதளவு தேநீர் இருந்தது.
காகம், பூங்காவில் இருந்த சிறுகூழாங்கற்களை எடுத்து வந்து அதனுள் இட்டு நிரப்பத் தொடங்கியது.
மண்குடத்துள் மேலெழுந்து வந்த தேநீரை நான் அருந்தினேன்.
காகம் என் முன்னிருந்த பெருமரத்தில் அமர்ந்து கொண்டது.
நன்றியுடன் காகத்துக்கு எதனைத் திருப்பிக்கொடுக்க முடியும்?
நான் எனது எழுது தாளை எடுத்து அன்றைய கவிதையை எழுதத்தொடங்கினேன்.
அப்பாவும் இடுப்பிற்பிள்ளையைச் சுமந்த அம்மாவும் வந்து கற்கதிரைகளிற் காலாற அமர்ந்தனர்.
இடுப்பிலிருந்த குழந்தையை இறக்கி அம்மா எழுது மேசையில் வைத்தாள்.
குழந்தை எனது எழுது தாளைப் பார்த்தது; பின் என்னைப் பார்த்தது.
அப்பாவும் அம்மாவும் கூடத் தாளைப் பார்த்தனர்.
அப்பா என் அனுமதி இல்லாமற் தாளிலிருந்து ஒன்றை எடுத்தான்.
அருகிலிருந்த தினசரியைக் கிழித்து, எடுத்ததை அதிற் சுற்றி நன்கு பிழிந்தான்.
தினசரியில் இருந்த சொற்கள் அதிலொட்டிக் கொண்டன.
பின் அதனை வாயிலிட்டு மெல்லத் தொடங்கினான்.
அவன் வாயில் இருந்து எண்ணை வழிந்தது.
பூங்கா முழுவதும் எண்ணை வாசம் அல்லது தினசரி வாசம்.
குழந்தை கண்கள் கலங்கியபடி அப்பா எனக்குத் தராமல் வடை சாப்பிடுகிறாரென அம்மாவிடம் முறையிட்டது.
அம்மாவின் கண்கள் கோபமுற்றன.
“ நீ வாடி! செல்லம்!! நான் உனக்கு வீட்டில் வடை சுட்டுத் தருகிறேன்” என்றாள் அம்மா
எனக்குக் காகத்தின் நினைவு வந்தது.
அதனைப் பார்த்தேன்;அதன் முகம் இருண்டு இருந்தது.
அம்மா குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்தார்.
காகம் இப்பொழுது அவர்களுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் தின்று தீர்த்தபின் அப்பா இப்பொழுது நரியாக மாறி அம்மாவையும் பிள்ளையையும் தொடரத் தொடங்கியிருந்தான்.
நான் எனது எழுதுதாளைப் பார்த்தேன்.
எண்ணைக்கறை மட்டும் இருந்தது.
எல்லாவற்றையும்
காகம் இருந்த பெரு மரத்தின் கீழ் இருந்து
தனது கஞ்சா வளையங்களினூடு பார்த்துக்கொண்டிருந்த
எப்பொழுதோ இறந்துபோன முதுகவி
என்னைப்பார்த்துக் கெக்கெட்டம் விட்டுச் சிரிக்கத்தொடங்கினான்|ள்.
27-3-2021 .