Skærmbillede 39
அகில இலங்கை சைவ மகா சபையின் மார்கழி திருவெம்பாவை பாத யாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த சிவதொண்டர்கள், சிவ மங்கையர்கள், சிவனடியார்கள் என ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.
திருவெம்பாவை விரத காலத்தில் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறும் இந்த பாத யாத்திரையில் இன்றைய தினம் அதிகளவான அடியார்கள் கலந்துகொண்டமை பெரும் ஆன்மீக எழுச்சியாக அமைந்தது.
இன்று காலை 8 மணியளவில் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் இருந்து சிவபெருமானின் திருவுருவம், சிவலிங்கம் மற்றும் சமய குரவர்களின் திருவுருவம் ஆகியவற்றைத் தாங்கியவாறு நமசிவாய பாராயணத்துடன் பாத யாத்திரை ஆரம்பித்தது.
இந்த யாத்திரை பல்வேறு ஆலயங்களையும் தரிசித்துக்கொண்டு மூளாய் - காரைநகர் வீதியூடாக மதியம் 2 மணியளவில் பொன்னாலை சந்தியிலுள்ள நாராயணன் தாகசாந்தி நிலையத்தை சென்றடைந்தது.
அங்கு இடம்பெற்ற மகேசுர பூசையைத் தொடர்ந்;து பிற்பகல் 3 மணியளவில் காரைநகர் நோக்கி புறப்பட்ட பாத யாத்திரை மாலை 6 மணியளவில் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது.
சம்பில்துறையில் ஆரம்பித்த பாத யாத்திரை ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் சென்ற வீதிகள்தோறும் பொதுமக்கள் தமது வீடுகளுக்கு முன்பாகவும் வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் என்பன தங்கள் நிலையங்களுக்கு முன்பாகவும் வாழை, தோரணம் கட்டி அலங்கரித்து, பூரண கும்பம் வைத்து பாத யாத்திரையை வரவேற்றனர்.
யாத்திரை முடிவில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கு சைவ மகா சபை கடந்த மூன்று தினங்களாக நடத்திய ஆன்மீக, சமூக பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கு காரைநகர் மணிவாசகர் மடாலயத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 
 
 
 
 Skærmbillede 41
 
 
 
 
X

Right Click

No right click