-தமிழாகரன்-
“கொரோனா உலக ஒழுங்கை நிரந்தரமாக மாற்றப் போகின்றது. குறிப்பாக கொரோனா ஏற்படுத்திய சுகாதாரத் தீங்குகள் தற்காலிகமானவையாக இருக்கலாம். ஆயினும் கொரோனா தோற்றுவித்துள்ள அரசியல் மற்றும் பொருளா தாரக் கொந்தளிப்புகள் இன்னும் பல சந்ததிகளுக்கு நீடிக்கக்கூடும்.” -ஹென்றி கிஸிங்கர்-
உலகம் கொரோனாத் தாக்குதலில் இருந்து எப்படியும் மீளத்தான் போகின்றது. ஆனால் அந்த உலகம் இன்றைய உலகத்தைப் போல இருக்கப் போவது இல்லை. அதாவது கொரோனாத் தொற்றுநோய் நெருக்கடிக்குப் பின்னரான நிலைமைகள் முன்பிருந்ததைப் போன்று இனி இருக்கப் போவது இல்லை.
குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இரு உலகப்போர்களிற்குப் பின்னர் நிலவிய சூழ்நிலைமைகளை ஒத்ததாகவே இருக்கப் போகின்றது. ஆனாலும் கொரோனாவிற்குப் பின்னரான நிலைமைகள் முன்னைய போர்களிற்குப் பின்னரான நிலைமைகளை விட இன்னும் இன்னும் மோசமானதாகவே இருக்கப் போகின்றது.
கடந்த ஏப்பிரல் மாதம் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹென்றி கிஸிங்கர், “கொரோனா உலக ஒழுங்கை நிரந்தரமாக மாற்றப் போகின்றது. குறிப்பாக கொரோனா ஏற்படுத்திய சுகாதாரத் தீங்குகள் தற்காலிகமானவையாக இருக்கலாம். ஆயினும் கொரோனா தோற்றுவித்துள்ள அரசியல் மற்றும் பொருளா தாரக் கொந்தளிப்புகள் இன்னும் பல சந்ததிகளுக்கு நீடிக்கக்கூடும்.” எனக் குறிப்பிட்டிருந்தார். ஹென்றி கிஸிங்கர் மட்டுமல்ல உலகளவில் இருக்கும் வலதுசாரி, இடதுசாரி என்ற நிலைகளுக்கு அப்பால் கொரானாவிற்குப் பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், நெருக்கடிகள் தொடர்பில் பலரும் கருத்துரைத்து வருகின்றனர்.
கொரோனாத் தாக்குதல் அமெரிக்காவில் ஒரு பெரும் ஆபத்தாக மாற்றிய அந்தக் கணத்தில் “பினான்சியல் ரைம்ஸ்” இதழ் இப்படி எழுதியது. அதாவது “கடந்த நாற்பது ஆண்டுகளாக இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையை தலைகீழாக மாற்றி அமைப்பதற்கான தருணம் வந்துவிட்டது. பொருளாதாரத்தில் அரசு ஒதுங்கி இருந்த நிலையை மாற்றி அதிகம் பங்கெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அது மட்டுமல்ல தொழிலாளிகளின் பணிச்சூழல் பாதுகாப்பானதாக ஆக்கப்பட வேண்டும். எந்த நிமிடமும் வேலை போய்விடுமோ என்ற அச்சம் கொள்வதாக இன்றைய பல பணிச்சூழல் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.”
மக்களுக்கு பயன்பெறும் பொதுப்பணிகளை முதலீடு எனக் கொள்ள வேண்டுமேயொழிய அதைத் தேவையற்ற செலவு எனக் கருதும் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மறுபகிர்வு என்பது நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், சொத்துடைமைக்கு கூடுதல் வரி என்பன சமீப காலங்களில் அபத்தம் எனக் கருதப்பட்டன. இந்த நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தக் கருத்துகள் ஏதோ ஒரு இடதுசாரி முழக்கம் அல்ல. வலது சார்புள்ள முதலாளித் துவ ஆதரவுப் பத்திரிகை தான் சொன்னது. அதாவது சுரண்டுவதற்குக் கூட முதலில் மக்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை உறுதிபடக் கூறுகிறது.
பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகையின் இத்திடீர் மாற்றத்தின் பின்னணியை நாம் எப்படிப் புரிந்து கொள்வது. முதலாளி த்துவப் பொருளாதாரமே எல்லாவற்றிற்கும் விடிவு எனச் சொல்லி வந்த இந்தப் பத்திரிகை திடீரென இப்படிச் சொல்லத் தொடங்கியுள்ளதன் பொருள் என்ன?
சந்தை மற்றும் முதலாளிகளின் நடவடிக்கைகளில் தலையிடாத 'சின்ன அரசு' குறைந்த வரிவிதிப்பு என்பவற்றோடு சமூகப் பாதுகாப்பு என்பது அரசின் முக்கிய வேலை அல்ல என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தவர்கள் இன்று இப்படிப் பேசுவதற்குக் காரணம் கொரோனா தான்.
கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தை குறித்து கடந்த எழுபது ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்தவர்கள் இதற்கு மாறாகப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றப் பின்புலங்களையும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும்
2001 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்குான நோபல் பரிசு பெற்றவர் ஜோசப் ஸ்டிக்லிக்ஸ். இவர் இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார ஆலோசனைக் குழுவொன்றின் தலைவராக உள்ளார். இவர் தற்போது சந்தைப் பொருளாதாரத்திற்கும் புதிய தாராளவாதப் பொருளாதாரத்திற்கும் எதிராக கருத்துக்களை முன்வை க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தத் தருணம் முதலாளியப்பொருளாதாரம், புதிய தாராளவாதம் ஆகியன மறுசிந்தனைகளுக்கு உள்ளாகி வருகின்றது. ஸ்டிக்லிக்ஸ் போன்றோர் வெளிப்படையாக மீண்டும் திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிய திருப்பத்தை பரிந்துரைக்கின்றனர்.
இதனை கொரோனாவின் பின்னணியில் உருவான ஒரு எளிய நன்மை என்றே கூறவேண்டும். இன்று கட்டுப்பாடற்ற சந்தைகள் தான் எல்லோருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான ஒரே வழி என்கின்ற புதிய தாராளவாத நம்பிக்கை கேள்விக்குள்ளாகி இருக்கி ன்றது. மூச்சுத்திணறி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றது.
தொடர்ந்து சனநாயகப் பொறிமுறை மீதும் பல் வேறு சந்தேகங்களை முன்வைக்கின்றது. அதாவது ஒரேநேரத்தில் புதிய தாராளவாதத்தின் மீதும் சனநாயகத்தின் மீதும் நம்பி க்கை சிதைவது எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல. மாறாகப் புதிய தாராளவாதம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் சனநாயக வேர்களையே அறுத்துள்ளது.
கொரோனா உலகப் பொருளாதாரம் பற்றிய மீள்சிந்தனை க்கும் சனநாயகப் போராட்ட வடிவங்கள் தொடர்பிலும் பன்மையான ஆழ்ந்த நுண்ணியதான மாற்றுச் சிந்தனை களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.அமெரிக்கரான நோம்சோம்ஸ்கி “கொரேனா வைரஸால் ஏற்பட்ட ஒரே நன்மை என்னவென்றால் எது மாதிரியான உலகம் நமக்குத் தேவையென மக்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது இந்த வைரஸ்.” எனக் குறிப்பிடுவதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நோம்சொம்ஸ்கி கூறுகின்றார், “இந்த நெருக்க டியின் தோற்றுவாய் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தற்பொழுது ஏன் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டது என்பது குறித்தும் நாம் இன்னும் சிந்திக்க வேண்டும். இதனைச் சந்தையின் தோல்வியாகவும் புரிந்து கொள்ள வேண்டும் . ஏற்கனவே கண்மூடித்தனமான புதிய தாராளவாதக் கொள்கைகளால் சிதைக்கப்பட்ட சமூகப் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் படுமோசமாகவே இன்னும் எதிரொலிக்கும்” எனவும் எச்சரிக்கை செய்கின்றார்.
மேலும் “பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் எப்போதும் இருந்திருக்கின்றது. ஆனால் அதனைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் பரவி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னும் கொரோனா பரவுவதற்கான அச்சுறுத்தல் இருந்தது.
அதன் பின்னராவது கொரோனா பரவுவதை தடுப்பதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தை செலவிட்டிருக் கலாம். ஆனால் இவர்கள் அப்படிச் செய்யவில்லை . ஏன் செய்யவில்லை? சந்தை இதனைக் கோரவில்லை. சந்தை தவறான சமிக்ஞைகளை காட்டியது. இதனை நாம் நமக்கான மருந்து தயாரிக்கும் பணிகளை பெரும் தனியார் நிறுவன ங்களிடம் அளித்து விட்டதன் விளைவு எனக் கூறலாம்
இவர்கள் சருமத்திற்கான கிரீம்களை தயாரிக்க நேரம் செலவிட்டார்கள். மக்களை கொல்லும் பெரும் தொற்றலுக்கு மருந்து தயாரிப்பதை விட, சருமப் பொலிவுக்கான கிரீம் தயாரிப்பு அதிக இலாபம் தரக்கூ டியது எனக் கருதினார்கள். அதனால்தான் நாம் இப்போது இந்த இடத்தில் நிற்கின்றோம் என்கின்றார் ” நோம் சோம்ஸ்கி. டேவிட் ஹார்வி, நோம்சோம்ஸ்கி, அமர்த்தியா சென் போன்றோரும் மற்றும் யுவா நோவா ஹராரி, ஜோசப் ஸ்டிக்லிக்ஸ், தோமஸ் பிக்கெற்றி உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் கருத்துரைத்து வருகின்றனர். இவர்களது விளக்கம், விசாரணை, விமர்சனம் மற்றும் இவை சார்ந்த உரையாடல்கள் எமக்கு உடனடியாக அவசியப்படுகின்றது
“சமகால மாறிவரும் உலகம்” பற்றிய புதிய நோக்குநிலை அவசியப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில் தான் நாம் நமக்கான கல்வி ஏற்பாடுகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக இன்று கல்விப்புலத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், நெருக்கடிகள் இன்னும் ஆழமான கருத்து நிலை சார்ந்த உரையாடலகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரிய சமூகம் தமது கடந்த கால சிந்தனைகள், மரபு வழியான தேர்ச்சி நிலைகள் யாவற்றிலிருந்தும் முதலில் விடுபடவேண்டும். மாற்றுக்கல்வி, மாற்று ஆசிரியம், மாற்று உளவியல், மாற்றுக்கல்வி நுட்பவியல் என விரியும் பல்வேறு களங்களிலும் அறிவுத்துறைகளிலும் மாற்றங்களை இற்றைப்படுத்த வேண்டும். இந்த வெளிச்சத்தில் எங்களை நாம் சுய விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும்.
நன்றி.- ஆசிரியம்