எஸ்.சுஜாதா
‘நான் மருத்துவ உதவி தேவைப்படுபவளாக இருந்தாலும் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது’ என்று நான் சொன்ன பதில், எனக்குப் பட்டத்தைத் தேடித் தந்தது”
படிப்பும் பயிற்சியும் இருந்தும் இரண்டு ஆண்டுகளாகச் செவிலியர் வேலை கிடைக்காமல் தவித்த இளம் பெண்ணுக்கு இப்போது வேலை கிடைத்திருப்பது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சக்கரநாற்காலியில் வாழ்பவர் என்பதுதான் இந்த நெகிழ்ச்சிக்குக் காரணம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ரையான் க்ரெஸுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் உட்பட புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே ஆசை. நடனக் கலைஞராக வேண்டும் எனும் ஆசையும் இருந்தது. ஆனால், 16 வயதில் அவரின் ஆசை, லட்சியங்களையெல்லாம் நொறுக்கியது மரபணுக்குறைபாடு நோய் (Ehlers-Danlos syndrome). இதன் மூலம் உடலில் உள்ள இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்பட்டன.
ஒரு நாளைக்கு நூறு முறை ரையானின் தோள்பட்டைகள் நகர்ந்துவிடும். வளர வளர நோயின் தீவிரமும் அதிகமாகிக்கொண்டே சென்றது. தோள்பட்டை, இடுப்பு, மூட்டு போன்ற இடங்களில் வலு குறைந்து நகர ஆரம்பித்தது. இதனால் ஊன்றுகோலின் உதவி தேவைப்பட்டது.
இனி நடனக் கலைஞராக முடியாது என்பதை உணர்ந்த ரையான், செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். கல்லூரியில் படிக்கும்போதே அவர் உடல் மேலும் மோசமடைந்தது. சக்கரநாற்காலிக்குள் தஞ்சமடைய வேண்டியதாகிவிட்டது. எதிர்காலம் குறித்த பயம் அவருக்குச் சோர்வைத் தந்தது.
“என்னுடைய வருத்தம் உடல்நலத்தை மேலும் பாதிக்கும் என்று அறிந்தவுடன் என் மனநிலையை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தேன். கைகளில் டாட்டூக்களை வரைந்துகொண்டேன். தலையலங்காரத்தை மாற்றிக்கொண்டேன். ‘நானும் ஒரு நர்ஸ்’ என்று எனக்குள் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டேன். எனினும், சக்கரநாற்காலியைக் கண்டதும் வேலை கிடையாது என்று சொல்லிவிடுவார்கள். அப்போதுதான் சக்கரநாற்காலிகாரர்களுக்கான ‘மிஸ் வீல்சேர் விர்ஜினியா’ என்ற போட்டியைக் கண்டேன். அதில் உற்சாகத்துடன் கலந்துகொண்டேன். ‘நான் மருத்துவ உதவி தேவைப்படுபவளாக இருந்தாலும் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது’ என்று நான் சொன்ன பதில், எனக்குப் பட்டத்தைத் தேடித் தந்தது” என்கிறார் ரையான்.
‘மிஸ் வீல்சேர் விர்ஜினியா’ பட்டம் பெற்றவுடன் ரையான் பரவலாக அறியப்பட்டார். பள்ளி - கல்லூரி உட்பட பல இடங்களிலும் பேசுவதற்காக அழைக்கப்பட்டார். கரோனா காலம் என்பதால் அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. எல்லோரையும்போல் ரையானும் வீட்டுக்குள் முடங்க வேண்டியதாகிவிட்டது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது. பல இடங்களுக்கும் வேலைக்காக விண்ணப்பங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார்.
இறுதியில் கேரிலியன் ரோனோக் மெமோரியல் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. நம்பிக்கையில்லாமல்தான் சென்றார். ஆனால், அங்கே இன்டர்வியூ செய்தவர்கள் ரையானின் சக்கரநாற்காலியைக் கண்டுகொள்ளவேயில்லை. எல்லோரையும் போலவே அவரிடமும் பொதுவான விஷங்களைத்தான் கேட்டார்கள். இறுதியில் தாய், சேய் பிரிவில் வேலை கொடுத்துவிட்டார்கள்.
“வேலை கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. ‘நான் சக்கரநாற்காலியில் இருப்பவள்’ என்றேன். அதனால் என்ன என்று இயல்பாகச் சொன்னார்கள். வாழ்க்கையில் அப்படி ஒரு மகிழ்ச்சியை அன்றுதான் அனுபவித்தேன். என்னாலும் மற்றவர்களைப் போலவே இயல்பாக வேலை செய்ய முடியும் என்று நம்பியவர்களின் எண்ணத்தை, என்னுடைய சிறப்பான செயல்பாடுகள் மூலம் இன்னும் வலிமையாக்குவேன். அதோடு என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் பணியையும் தொடர்வேன்” என்று சொல்லும் ரையான், தளராத உறுதி தடைகளைத் தகர்த்தெறியும் என்பதற்கு நிகழ்கால நிதர்சனமாகி இருக்கிறார்.