கலாநிதி.க.கஜவிந்தன்.
சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்
யாழ் பல்கலைக்கழகம்
எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் தம்மையும் தமது சமூக கட்டுப்பாடுகள், பண்பாடுகள் மற்றும் விழுமியங்களையும் அனேகர் மறந்து மனிதாபிமானம் அற்றவர்களாகவும், சமூக வாழ்வில் இன்னல்களை இடையூறுகளையும் ஏற்படுத்தும் எண்ணங்களை சாதாரணமாக தமக்குள்ளே கொண்டு விரோத மனப்பாங்கோடு நம் சமுதாயம் மாறிக் கொண்டுவருகிறது. சமூகம் எதிர்பார்க்கும் அன்பு, கருணை, உதவும் நடத்தை என்பன அருகி கொலை, பகை, விரோதம், வக்கிரம், 'வன்னடத்தை' என்ற சமூக விரோத நடத்தைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த அடிப்படைகளில் மிகவும் மோசமான நிலையில் சமூகம் எதிர் நோக்கிக் கொண்டு இருக்கின்றதோர் பிரச்சினையாக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் காணப்படுகின்றது. பத்திரிகைகளும் முக நூல்களும் இன்று இவ்வாறான பாலியல் வன்னடத்தை சம்பவங்களுக்கு தலைப்பிட்டு அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
சமூகப் பிறழ்வுகள்
இன்று உலக இயக்கத்தில்; ஒவ்வொரு விடயமும் தனக்கு எதிரான ஒரு கருத்தை மறைமுகமாக அல்லது வெளிப்படையாக கொண்டுள்ளதனை நாம் காணலாம். உதாரணமாக வழக்கம், வழக்கத்திற்கு புறம்பானது, சாதாரணமானது, அசாதாரணமானது என்ற வகையிலோ விரும்பதகுந்தது, விரும்பத்தகாதது என்ற அடிப்படையில் நேரானதும் எதிரானதுமான இரு பண்பினை நாம் காணமுடிகிறது. இவ் விடயம் தொடர்பாக நாம் நோக்கும் போது மனித நடத்தையில் சமூகத்திற்கு ஒவ்வாத அல்லது விரும்பத்தகாதது என்பதனை சமூகமோ அல்லது தனிமனிதனோ பொதுவாக விரும்புவது இல்லை. ஆனால் காலத்தின் மாறுதலில் சமூகத்தாலும் ஒரு தனிமனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாததும், விரும்பப்படாததுமான விடயங்களையே நாம் சமூக நடத்தையில் மனிதர்களிடையே காணக்கூடியதாகவுள்ளது.
சிறப்பாக மனிதவாழ்வின் சாதாரணமான வாழ்க்கைக்கு புறம்பான பிறழ்வுகளும், சமூக அங்கீகாரமற்ற நடத்தைகளும் இன்று பல்கிப் பெருகிக்கொண்டு இருப்பதுடன் பலரது வாழ்வில் எதிர்மறையான விளைவுக்குள் இட்டுச் செல்வதாகவுமே உள்ளது.சமூகத்தால் எதிர்பார்க்கப்படும் உதவும் நடத்தை, கருணை, கீழ்படிவு, வீரம் போன்ற அனேக விடயங்கள் இன்று அருகி, சமூக விரோத நடத்தைகளான பகைமை, விரோதம், கொலை, பாலியல் வன்நடத்தைகள் என்பன அதிகரித்து வருவதுடன் இப்பண்புகளையும் நடத்தைகளையும் வெளிப்படுத்தும் அனேகர் தனக்கும் பிறருக்கும், ஆபத்தானவராகவும் காணப்படுவதுடன் சமூக விரோத ஆளுமையைத் தன்னகத்தே கொண்டு வாழ்கின்றனர்.
இப் பண்புகள் குறித்த தனிநபரை மாத்திரமின்றி அவரது குடும்பம், நண்பர்கள், சமூகம் என்பவற்றுடன் நாடளவிலான பாரிய பாதிப்புக்களைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்து விடுகின்றது. இவ்வடிப்படையில் நோக்கும் போது குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் சிறுவர் முதல் வளர்ந்தவர்கள் வரை அனேகர் வன்நடத்தை உணர்வினால் தூண்டப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
போதைப் பொருட்பாவனை
நம் சமுதாய ஆரோக்கியத்திற்கு எதிராக பாரிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது போதைப்பொருட்களால் எழும் பிரச்சினைகளாகும். போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா அமைப்புகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன. தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தனக்குத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பானவராகவும், விட்டுக் கொடுப்பவராகவும் இருந்து மனிதாபிமானத்துடனும், உண்மையுடனும் வாழ வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஏனெனில் மனித பண்புகள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள்; மற்றும் சமூக ஒழுக்க விதிமுறைகள் தொன்றுதொட்டு பேணப்பட்டு வந்தன இவையே மனிதநடத்தையை விலங்கு நடத்தையிலிருந்து பிரித்துக்காட்டியது.
இத்தகைய பாலியல் வன்முறைகளுக்கு போதைவஸ்துகளின் அதிகரித்த பாவனையும் பாலியல் பற்றிய தவறான மனப்பாங்குகள் மற்றும் வக்கிர எண்ணங்களுமே காரணமாக காணப்படுகிறது. மனிதனையும் அவனது சுய சிந்தனையையும் மாற்றி அசாதாரணமான நடத்தையை தூண்டும் தன்மை போதைப் பொருட்களுக்கு காணப்படுகின்றது. இதன் பிடியில் அகப்பட்டவர்கள் தம்மையும் தமது ஒழுக்க விழுமியங்களையும் மறந்து செயற்ப்படுகின்றனர்.
இத்தகைய வன்முறை செயற்பாடானது வார்த்தை மூலமாகவோ, காயப்படுத்தல் செயற்பாடுகளாகவோ வெளிப்படுத்தப்படுகின்றது. வன்னடத்தை வெளிப்பாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் போதைவஸ்து என்பது பெரும் செல்வாக்கு செலுத்துவதை வானொலி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை, முகநூல்கள், வாரவெளியீடுகள் போன்ற ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலிருந்து காணக் கூடியதாகவுள்ளது. பாலியல் வன்முறைச்சம்பவங்களே அதிகமாக காணக்கூடியதாக உள்ளன. பாலியல் வன்முறைகளின் அதிகரிப்பினால் ஊடகங்கள் தமது செய்தியை வழங்கி தலைப்புக்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்றைய சமூகத்தினர் போதையின்பிடியில் மாட்டிக்கொண்டு மனிதாபிமானம் இழந்து ஏனைய மனிதர்களின் வாழ்வை அழிக்குமளவு வக்கிர உணர்வு விதைக்கப்பட்டு காணப்படுகின்றனர். இந்த வகையில் அதிகரித்து வரும் பாலியல் பிரச்சினைகளுக்கு அதாவது பாலியல் வன்முறைகளுக்கும் போதைப்பொருள் பாவனைகளும், பாலியல் பற்றிய தவறான வக்கிர எண்ணங்களுமே காரணம் எனலாம்.
போதைவஸ்து என்பது மனிதனை அவனது இயல்பு நிலையிலிருந்து மாற்றி உணர்வுகளை மற்றும் சுரப்புக்களின்(ஹோர்மோன்) செயல்களையும் தூண்டி ஒரு பரவச நிலைக்கு அவனை உட்படுத்தும் ஒன்றாகும்.இது பானம்மூலமோ அல்லது புகை மூலமோ உட்கொள்வதாகவும்,இனிப்பு பதார்த்தம் உட்கொள்ளுவதாகவும் இது அமையலாம். இன்று போதை மருந்துகள் தொழில்நுட்ப வசதியால் ஊசிகள் மூலமும் பானமாகவும் வெளிவருகின்றன. அனேகர் இதனை வாய் மூலமும், மூக்கின் மூலமும் உள்ளெடுக்கின்றனர்.
இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.
ஆரம்ப காலம் அதாவது பண்டைய காலங்களில் மக்கள் தெய்வங்கள் கூட போதையை விரும்புவதாக கருதி பிரசாதமாக படைத்தனர். காலப்போக்கில் மூடக்கொள்கைகளின் அடிப்படையில் உள அசாதாரணங்கள், சில நோய்கள் தீர்கும் மருந்துகளாக போதை மருந்துகளை பாவித்தனர். பின்னர் உடல் உள மற்றும் சோர்வு நீக்கி எனவும் தெரிந்தோ, தெரியாமலோ போதை மருந்துகளை பாவித்தனர். பின்னர் காலப்போக்கில் நாகரிக விருத்தி, அந்நிய நாட்டு மோகம், கலாச்சார கலப்புகள், மதக் கலப்புகள், பண்பாட்டு மாறல்களால் போதைப் பாவனை அதிகரிக்க நேரடி மறைமுக காரணங்களாக அமைந்தன.
விழாக்கள்,கொண்டாட்டங்களின் போது மது அருந்துதல்,பரிமாறல்கள் மேலை நாட்டுக் கலாச்சாரம் என உயர்வாகக் கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாகும். பிரச்சனைகள் மற்றும் குறைகளை போதைப்பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தவறாகக் கருதுவதும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு மக்களை ஆட்படுத்திவிடுகின்றது. போதைப் பொருட்களின் பாவனை அதிகரிக்க காரணம் சிலர் அபின், ஹேரோயின், கஞ்சா போன்றவற்றுடன் புகையிலை மதுபானம் என அனேக வகையான போதைப் பொருட்களை அதன் பாதிப்புத் தெரியாமல் சாதாரணமாக உட்கொள்கின்றனர் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருந்தால் அவரைத் திருத்த முயற்சிக்காமல் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக தாமும்; கற்றுக் கொள்கின்ற பலரும் இருக்கிறார்கள்.
அரசும் தனது வருமானம் கருதி அனேக மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கியது. வெளிநாட்டு போதைப் பொருட்களை அனுமதித்தது. மக்கள் மத்தியில் அனுமதியின்றி அனேக மதுபானக் கடைகள் மற்றும் தவறான போதைப் பொருள் உற்பத்திகள் விற்பனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. அனேக இடங்களில் கொண்டாட்டங்களில்கூட போதைப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள்.
இன்று அனேகர் மறைமுகமான போதை உண்ணிகளாக உள்ளனர் சில உள-உடல் நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை உள்ளெடுக்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர். மற்றும் தேயிலைபானம் கோப்பி இவற்றை உள்ளெடுக்கும் பழக்கமானவர்கள் இதிலிருந்து வெளிவருவது பாரிய பிரச்சினையாகவே கருதுகின்றனர் உதாரணமாக வைத்தியர்கள் அனுமதியுடன் வழங்கும் வலி நீக்கிகள் மாத்திரைகளை உள்ளெடுப்பவர்கள்கூட இவைகளுக்கு அடிமையாகின்றனர். இவர்கனைள மறைமுகமான போதைப் பாவனையாளர்களாகவே கருத முடியும்.
முன்மாதிரியற்ற பெற்றோர் தமது பிள்ளைகளை கட்டுப்படின்றி கவனியாது வளர்ப்பதனாலும் நண்பர்களின் தவறான செய்கைகளினாலும் அனேகர் போதை மது பாவனைகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். இன்றைய சினிமா உலகம் இளைஞர்கள் பின்பற்றும் மாதிரிகள்இ பிரபல்யங்கள் புகைத்தல் மற்றும் போதைப் பாவனை மதுபானம் அருந்தும் விடயங்கள் தொடர்பாக மிகவும் ஆளுமையான தோற்றம் மற்றும் வீரத்தினையும் கவர்ச்சியினையும் வெளிக்காட்டுவதனால் இளைஞர்கள் தாமும் இலகுவாக அதனைக் கற்றுக் கொள்கின்றனர்.
பாடசாலைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் அருகில் மதுபான சாலைகள் அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இச் சூழல் பாடசாலை மாணவர்களை தவறாக வழி நடத்துவதாக உள்ளது. போதையினால் கவலை மறக்கலாம் வீரமாக செயற்படலாம் வலிமையடையலாம் மகிழ்வாக இருக்கலாம் போன்ற தவறான எண்ணப்பாங்கினை அதாவது மனப்பாங்கினை இன்றைய சினிமா உலகம் காண்பிக்கின்றது காட்சிப்படுத்துகின்றது. இளைஞர்கள் இதனால் தூண்டப்படுகின்றனர் அது மாத்திரமின்றி நண்பர்களின் தொந்தரவு பெற்றோர்களின் தவறான நடத்தை அதிக கட்டுப்பாடு அதிக சுதந்திரம் என்பனவும் போதைப் பொருட்களின் பாவனையை தூண்டுவதாக உள்ளது.
சில பாரிய நோய்கள், உடற் குறைபாடுகள் உடையவர்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மையுடையவர்கள் அன்பு மற்றும் ஆதரவற்றோர் போதைப் பொருட்களை நாடுகின்றனர். இவ்வாறாக கட்டிளம் பருவத்திலிருக்கும் ஒவ்வொருவரிடமும் காணப்படும் எதனையும் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம் மற்றும் ஊடகங்கள் கற்பிக்கும் போதை பற்றிய தவறான மனப்பாங்கினால் இதன் பாவனையானது ஊக்கப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஆரம்பிக்கும் போக்கானது காலப் போக்கில் அதனை விட்டு விட முடியாத அளவு அடிமை நிலையினை உருவாக்குகின்றது. போதைப் பொருட்களின் பாவனையின்றி உயிர் வாழ முடியாது என்ற நிலையினை மனித மனங்களில் ஆழப்பதியும் அளவு அடிமை நிலையினை தோற்றுவிப்பதாக அமைந்து விடுகின்றது.
தொழில்நுட்ப விருத்தி கல்வி அறிவு விருத்தி என்பன தவறை செய்யவும் வழி காண்பிக்கின்றது. விளம்பரங்கள் வாழ்வை சீரழிக்கும் காரணிகளில் பங்கெடுக்கின்றன. யுத்தத்தின் பின்னான சூழலில் பல பாதிப்பினை உடல் உள ரீதியாக எதிர் கொள்ளும் மக்கள் போதைப் பாவனையை ஒரு ஆறுதலாக கருதும் தவறான எண்ணம் இதனை விட்டுவிட முடியாத வண்ணம் தொடரத்தூண்டுகின்றது. அடிமைப்பட்டவர்கள் பாரிய நோய்களுக்கு ஆளாகின்ற நிலை காணப்படுகின்றது. புகைத்தலால் சுவாசக்கேடு வரும் என அறிந்தும் அனேகர் புகைக்கின்றனர். அதற்கு அவர்கள் நான் எப்பவுமா? செய்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு தடவை இரு தடவை தானே செய்கிறேன் என தமக்கு தாம் நியாயம் கற்பிக்கின்றனர்.
இது மாத்திரமன்றி அடிமையானவர்கள் இதனை தவிர்க்க நினைத்தாலும் உடல் நடுக்கம் சோர்வு என்பன போதைப்பாவனையை விட்டு விட முடியாத அளவு அவர்களது வாழ்வில் போதைப் பொருள் ஆதிக்கம் செலுத்துகின்றது. சுவாச நோய்கள் இதய மற்றும் குடல், வாய்ப் புற்றுநோய்கள் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல நோய் நிலைமைகளுக்கு ஆளாகின்றனர். இதனை விடவும் மோசமான குணப்பண்புகளையும் போதைப் பொருட்களின் பாவனையானது மனிதர்களில் உருவாக்குகின்றது. கோபம் தீடிரென உண்ர்ச்சி வசப்படல் வக்கிரம் விரோதம் வன்முறை உணர்வு என்பவற்றினை தூண்டுகிறது. இதன் விளைவுகளே இன்றைய பாலியல் வன்னடத்தைகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் எனலாம்.
வன்நடத்தைகள் எனும் போது தன்னையும் பிறரையும் துப்புறுத்தக் கூடிய வகையில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவு மோசமான நடத்தையினைக் காண்பித்தல் எனலாம். இவ்வாறான நடத்தை பாலியல் சார் விடயங்கள் தொடர்பாக காணப்படும் போது அதனை பாலியல் சார் வன்நடத்தைகள் எனலாம். விரிவாக கூறினால் ஒரு பெண்ணை அவளது விருப்பம் மற்றும் அனுமதியின்றி பாலியல் செயற்பாடுகளுக்கு கட்டாயப்படுத்தி பாலின்பம் பெறுதல் பெற முயற்சித்தல் மற்றும் பாலியல் ரீதியான சுரண்டல்கள் என்பனவும் பாலியல் வன்முறை அல்லது வன்நடத்தை என விபரிக்கப்படும்.
பாலியல் வன்நடத்தை செயற்பாடு பாலாத்காரமாக கட்டாயப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் பதினாறு வயதிற்கு குறைந்த பெண்ணை அவரது அனுமதியுடன் பாலுறவு செயற்பாட்டில் ஈடுபடுத்தினாலும் அதனையும் பாலியல் வன்நடத்தை வன்புணர்ச்சி என்றே கூறப்படும். இவ்வாறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் மிகவும் மோசமான இரக்கமற்ற நடத்தையினைக் காண்பிப்பவர்களாகவே காணப்படுவர். இவர்களது சிறுபராயம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் உரிய தேவைகள் பூர்த்தியாக்கப்படாதவர்களாகவும் வன்நடத்தைப் பாங்கான வார்த்தைகள் செயல்கள் மற்றும் பொருட்களுடன் பழக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவர். இவர்களது இந் நிலைக்கு இவர்களது சூழலே பெரும்பாலும் காரணமாக அமையலாம்.
புறக்கணிக்கப்பட்டவர்கள் தாழ்வுமனப்பாங்கு கொண்டவர்கள் தன்னைத் தான் குற்றப்படுத்துபவர்கள் தமது ஆண் உறுப்புக் குறித்த சந்தேகம் தன்னால் திருமண வாழ்வில் ஈடுபட முடியாது என்ற பயம் மற்றும் பாலியல் சார் குறைபாடுகள் பாலியல் ஒழுங்கீனங்கள் காணப்படும் நபர்கள் தமது உணர்வுகளுக்கு வடிகால்களை உரிய முறையில் தேடிக் கொள்ளாதவர்கள் இவ்வாறான தவறானதும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததுமான பிறழ்வு நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். இன்று மிக மோசமான பாலியல் வன்முறைகள் தினம் தினம் அதிகரித்துக் கொண்டு வருவதற்கான காரணமாக யுத்தத்தின் பின்னரான தமிழ் சமுதாயத்தினது வாழ்க்கைப் போக்கும் காரணமாகும்.
மக்கள் தமது சுதந்திரம் உடமை பாதுகாப்பு வாழ்விடங்களையும் இழந்தவர்களாகவும் வாழ்க்கையில் புதுமை காண முனைந்தவர்களாகவும் தமது இழப்புகளை ஈடுசெய்து வாழ எத்தனித்துக்கொண்டும் இருக்கின்றனர். இருப்பினும் குறித்த யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த அநியாயங்கள் அக்கிரமங்கள் சிறுவர்கள் குழந்தைகள் எனப்பாராது பெரியவர்கள் வயதானவர்கள் முதல் பாலியல் சித்திரவதைகளுக்கு மிகவும் கொடூரமான முறையில் ஆளாக்கப்பட்டனர். அதன் தாக்கங்கள் வக்கிர உணர்வுகள் இன்று வரை காணப்படுகின்றது. இதனால் பழி உணர்வு சித்திரவதைகளினால் ஏற்பட்ட உளப்பிறழ்வு தாழ்வு மனப்பாங்குகளும் போதைப் பொருளின் பாவனையைத் தூண்டி அதன் அடிமை நிலையை ஊக்குவித்து இருப்பதுடன் தாமும் தமது உறவுகளும் எதிர் கொண்ட கொடுமைகளுக்கு பதில் செய்யும் முகமாக இத்தகைய வக்கிர உணர்வுகளை இன்றும் தவறான முறையில் வெளிக்காட்டியவர்களாகவே அனேகர் உள்ளனர்.
கொடிய யுத்தத்தில் இழக்கப்பட்ட பொருள் செல்வங்களை விரைவில் தேடிக்கொள்ளும் வழியாகவும் அனேக வறியவர்கள் தமது வறுமையை ஈடுசெய்யவும் தவறான பாலியல் தொழில்களில் ஈடுபடுவதும் போதைப் பொருள் விற்பனைகளில் ஈடுபடுவதும் சட்டவிரோதமான நடத்தைகளை மேற்கொண்டும் வருகின்றனர். இவர்கள் சிறுவர்களைக் கூட தமது தொழில் தேவைக்காக இரக்க மனமின்றிப் பயன்படுத்துகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் பாலியல் வக்கிரங்களை சிறுமியர் குழந்தைகளில் கூட கொடுமையாக தீர்த்துக் கொள்கின்றனர்.
இன்றைய தொழில்நுட்ப தொடர்பாடல் விருத்திகள் மனிதனை அறிவு விருத்தியடைய செய்தது என்றாலும் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றது. என்பதே உண்மை திரைப்படங்களைப் பார்த்தால் இளைஞர்கள் தமது வக்கிரங்களை கையாளத் தெரியாமல் இருக்கும் போது மேற்கொள்ளும் தவறான நடத்தைகள் அனைத்தையுமே கற்றுத் தருகின்றன. தவறுகள் தண்டனைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருதார திருமணங்கள் சிறுவர் பாலியல் வன் புணர்ச்சிகள் என்பனவும் சாதாரணமாக காண்பிக்கப்படுகின்றது. தன்னை ஒரு பலசாலியாக காண்பிப்பவன் போதைப் பொருள் பாவிப்பவனாகவும் பாலியல் வக்கிரம் உள்ளவனாகவுமே காண்பிக்கப்படுகிறான்.
இதனைப் போன்று ஆபாசப் படங்களின் மோசமான வருகை இன்று தொலைபேசிகளின் விதம்விதமான வருகை மிகக் குறைவான விலை வீட்டிற்கு வீடு ஆளுக்கு ஆள் கைத்தொலைபேசி இல்லாதவர்களே இல்லை எனலாம். உலகமே சுருங்கி ஒரு கையளவானது போல் இன்ரநெற் வசதிகள் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை தவறான எண்ணத்தை பாலியல் சார் வக்கிரத்தையும் தூண்டத் துணைபோகின்றன. அனைத்து வயதினருக்கும் அனுமதி வழங்கப்பட்ட ஆபாசப்படங்களின் அதிகரிப்பு கொடூரமான மனப்பாங்குகள் போதைப் பொருட்களின் விளம்பரப்படுத்தல்கள் விற்பனைக்கு இலகுவான சந்தைப்படுத்தல்கள் என்பன பாலியல் துஸ்பிரயோகங்களை சாதாரணமாக தூண்டி விடுவதாக உள்ளது.
ஆபாசப் படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் உண்மையானவை என நம்பி அதனைப் போன்றே தனது மனைவியும் செயற்பட வேண்டும் குறித்த படங்களில் போதைப் பொருள் பாவித்து பாலுறவுச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் அவர்கள் இன்புறுகின்றனர் என தப்பெண்ணம் கொண்டு தாமும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் ஆகவும் தமது மனைவியைத் துன்புறுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொலை செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அனேகர் விவாகரத்தும் செய்து கொள்கின்றனர்
இதனைப் போன்று பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளின் கற்றல் அதிகரித்துள்ளமையால் கூட பாலியல் பலாத்காரம் அதிகமாகின்றது. இன்றைய போக்குவரத்து விரிசல்கள் தொடர்பாடல் சாதனங்கள் மூலம் தவறான பாலியல் உணர்வுகளைத் தூண்டக் கூடிய புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பரிமாறப்படுகின்றன. சிலரது ஓவியம் மற்றும் நடனம் சில பாடல்கள் கூட பாலுணர்வைத் தூண்டுவதாக உள்ளன. இதனைப் போன்று போக்குவரத்துகள் அதிகரித்தமையும் போதைப் பொருள் கடத்தல்கள் தவறான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக அமைகின்றது.
இன்றைய கலாசாரக் கலப்புகள், வெளிநாட்டவர்களின் வருகை ஓரினச் சேர்க்கை, பண்பாடு என்பனவும் போதைப்பொருள் பாவனைகளை தூண்டுகின்றன. பண்பாடுகள் மாற்றமடைந்து ஆரோக்கியம் என்பது உணவுகளில் கூட அருகிய நிலையில் மனித உணர்வுகளில் வன்நடத்தையைத் தூண்டும் உணவுப் பழக்கவழக்கங்கள் விழாக்கள் கொண்டாட்டங்களில் போதைப்பொருள் விருந்துபசாரங்கள் என்பனவும் மனித வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு வருகின்றது. சினிமா கலாசாரங்கள் பெற்றோரை மதிக்காமை கீழ்ப்படிவின்மை அலங்காரத் தோரணைகள் ஆள்பாதி ஆடை பாதி என்ற அலங்கோலமான பெண்களின் காட்சிப்படுத்தல்கள் பண்பாட்டு கலப்புகள் என்பன பாலியல் வக்கிரங்களைத் தூண்டுகின்றன.
பெண்களின் கல்வி ஆணுக்கு சரிநிகராகும் என சுதந்திரம் பேசினாலும் அவர்களால் தனித்துச் செயற்பட முடிவதில்லை. சமூகத்தில் பெண்கள் பற்றிய மனப்பாங்கு அவர்களை ஒரு போதைப்பொருளாக காணும் நிலை சுதந்திரமற்றவர்களாக அவர்களை மாற்றி விடுகிறது.எந்தவொரு விளம்பர பொருட்களைப் பார்த்தாலும் பெண்களை ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்துகின்றனர்.
உதாரணமாக ஆண்கள் விரும்பிப் பருகும் மென் பானம் போன்ற குளிர்பானங்களில் கூட வக்கிரத்தை மறைமுகமாகக் காணலாம். பெண்களின் உருவம் போன்ற வளைவமைப்பில் போத்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களை ஒரு காட்சிப் பொருளாகவும் கவர்ச்சிப் பொருளாகவும் காண்பிப்பதே. இவ்வாறான விளம்பரப்படுத்தல்கள் பெண்களை ஒரு போதைப் பொருளாக கருதச்செய்கின்றது. 'கண்ணில்லை என்றால் என்ன? பெண்தானே' என்ற கண்மூடித்தனமான சிந்தனை பாலியல் வக்கிரம் கொண்ட கயவர்களுக்கே உரித்தானது.
பெண்களைத் தெய்வம் மற்றும் நாட்டின் கண்கள் என வர்ணித்தாலும் இலக்கிங்களுக்கும் புராணத்திற்கும் மட்டுமே பெண்களின் பெறுமதி உரியதாகின்றது. மாறாக யதார்த்த வாழ்க்கையில் மனிதாபிமானத்தைக் கூட பெண்களால் தமதாக்கிக் கொள்ள முடிவதில்லை. என்றே கூற முடியும். இயற்கையின் நியதிகளில் பெண் என்பவள் உடல் உள ரீதியாகக் கொண்ட ஆளுமைப் பண்புகளின் தனித்துவத்தை வக்கிர எண்ணம் கொண்டவர்களும் பாலியல் துஷ்பிரயோகிகளும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால்த் தான் இன்று வாழ்க்கை மாறுதல்கள் உண்மை நியாயம் இழந்து சட்டத்தின் சந்துபொந்துகளில் ஓடிஒளிந்து கொள்ளும் அனேகர் சமுதாயத்தை சீரளித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்றைய உலகம் அறிவால் விரிந்து தொழில்நுட்பங்களால் இலகுசாதனை படைத்தாலும் இன்னும் மனித உளவியல் மோசமான நிலையிலே மாறிக் கொண்டே இருக்கின்றது.
இன வெறியர்கள் போராட்டக் குழுக்கள் தமது தனிப்பட்ட நோக்கை அடையும்படி பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஆனால் இன்று அரசியல் தந்திரங்கள், மேல்த்தர வருமானம், போதைப் பழக்கம் உள்ளவர்கள், சட்ட உதவிகள் சட்டத்தின் ஓட்டைகள் அனைத்துமே பாலியல் வன்முறையில் பிரதான பங்கு வகிக்கின்றது என்றே கூற முடியும்.சாதாரணமான மனித வாழ்வை மாற்றி அமைக்குமளவு கொடிய இரக்கமற்ற சிந்தனை வக்கிரம் என்பன அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு பழி தீர்க்க பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்கின்றனர்.
இன்று பத்திரிகை ஊடகங்கள் செய்திகள் எது என்றாலும் ஏதோ ஒரு வகையில் ஓர் பாலியல் அசம்பாவிதங்களை பார்க்கவோ கேட்கவோ கூடியதாக உள்ளது. இந்த நிலைக்கு காரணம் என்ன? மனிதப் பண்புகள் மரத்துப் போனதா இல்லை மனிதமே இல்லாமல் போய் விட்டதா? பாடசாலைப் பிள்ளைகள் ஏன் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஊனமுற்ற பெண்கள் என்ற வேறுபாடுகளின்றி தமது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர். இந்தப் பட்டியலில் விரோதிகள் பகையாளிகள் போதையுண்ணிகளான தந்தை மாமா ஏனைய உறவுகளும் பங்கெடுத்துக் கொள்ளும் பயங்கரமான நிகழ்வாக பாலியல் வன்முறை இன்று காணப்படுகின்றது.
அண்மையில் வடக்கில் திரும்பும் பக்கம் எங்கும் பேசப்படும் கொடிய விடயமாக மாணவி வித்யாவின் மரணச் சம்பவம். குறித்த பிள்ளையின் பெற்றோரின் கனவில் கூட நினைக்காத உலகமே ஒரு விசை அமைதியாகும் அவலமான மரணம். ஏன் இப்படி ஓரு ஆசை உணர்வுகள் மரத்து போனவர்களா அல்லது போதையில் நிலை தவறி அந்த சிறு பிள்ளையை சிதைத்து போட்டார்களா அல்லது இவர்கள் உள நோயாளிகளா? பண மோகிகளா? சட்டத்தின் பொந்துகளில் ஒழிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை உடையவர்களா? இல்லை இவர்கள் மனிதர்களே இல்லையா? எந்தவகையில் அடக்கலாம். பாலியல் வக்கிரம் தமது பாலுணர்வு தாகத்தை தீர்த்துக்கொள்ள மட்டுமே என கூறிவிட முடியாது இவ்வாறான மனப்பாங்கு கொண்டவர்கள் பெண்களுக்கு அல்ல உயிர்களுக்கே மதிப்பளிக்காதவர் என்றே கூறமுடியும்.
இதனை போன்று அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளில் அவர்கள் கொண்டுள்ள பாலியல் சார் தவறான மனப்பாங்குகள் பாலியல் விடயம் தொடர்பான தவறான புரிதல் மற்றும் எப்படியும் தப்பிவிடலாம் என்ற சட்டத்தின் தவறான உதவிகள் பணச்செல்வாக்கு அரசியல் தந்திரங்கள் என்பனவும் துணை புரிகின்றன. இந் நிலையை குறைப்பதற்கு மக்கள் பாலியல் ரீதியான சரியான புரிதலையும் கற்றலையும் பெற வேண்டியவர்களாக உள்ளனர். இத்தகைய தவறினை சேர்ந்தே செய்கின்றவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். விழிப்புணர்வுகளுடன் மனிதாபிமானம் போதிக்கப்படவேண்டும்.
சில பாரம்பரிய பண்பாடுகள் கட்டியாளப்பட வேண்டும். மருவிவரும் கலாச்சாரம் பேணப்படவேண்டும். அதுமாத்திரம் இன்றி பாலியல் கல்வி சரியான வகையில் போதிக்கப்படுவதுடன் தவறான மனப்பாங்குகள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும்.
• பிரதேசத்திற்கு பிரதேசம் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும். விசேடமாக ஊழல்கள் சட்டங்கள் அதிகாரங்கள் போன்ற பொது அமைப்புக்கள் தமது கடமையை உரிய முறையில் செயற்படுத்தும் போதும் தண்டணைகள் தவறாது வழங்கப்படும்போதும் இத்தகைய சமூக விரோத பண்புகளை ஒழிக்க முடியும்.
• மனிதனது வன்நடத்தையைத் தூண்டி மனிதபண்புகளை இழக்கச் செய்யும் விடயங்களை தடுக்கவேண்டும். உதாரணமாக போதைப்பொருட்கள் தடை விதிக்கப்படவேண்டும்.
• சட்ட ஒழுங்குகள் பேணப்படும் போதும் விழுமியங்கள் விதிகள் கையாளப்படும்போதும் கலாச்சாரங்கள் பண்பாடுகள் மதிக்கப்படும் போதும் மனிதன் மனிதனாக வாழ முனைகின்றான்.
உலக மருத்துவ அறிக்கையின் புள்ளிவிவரப்படி உலகில் இரண்டு கோடி பேர் ஹேராயின் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் தற்போது மேற்கத்திய நாடுகளில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ளது. இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் போதைப்பொருள் அடிமைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றமைக்கான காரணம் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகள் நம் சமுதாயத்தில் அதிகம் இல்லாமல் போனதாகும்.