- கி.புண்ணியமூர்த்தி-
பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு பாலாருக்கும் 11 இற்கும் 14 இற்கும் இடைப்பட்ட வயதுகளில் ஆரம்பித்து 18 இற்கும் 21 இற்கும் இடைப்பட்ட வயதுகளில் முடிவடையும். இப் பருவம் பொதுவாகப் புயல்வீசும் பருவம் என்றே அழைக்கப்படுகிறது. இதனைப் பின்வருமாறு பாகுபடுத்திக்கொள்ளலாம்.
*முன் கட்டிளமைப் பருவம் (Early Adolescence) 10 - 13 வயது
*நடு கட்டிளமைப் பருவம் (Middle Adolescence) 14 - 16 வயது
* பின் கட்டிளமைப்பருவம் (Late Adolescence)17-19 வயது
*வாலிபர்கள் (Youth) 15 - 24 வயது
கட்டிளமைப்பருவம், தேவைகள் நிறைந்த பருவமாகும். இத் தேவைகள் உளவியல் சார்ந்ததாகவும், உடலியல் சார்ந்ததாகவும், சமூகவியல் சார்ந்ததாகவும் அமையும். இத் தேவைகள் இப் பருவப் பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் செல்வாக்குச் செலுத்துவதாக அமையும். இப் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புக்கள் முதிர்ச்சியடையும், பெண்களில் முதல் மாதவிடாய் (பூப்பு) ஏற்படும், ஆண்களில் தோல் தடிக்கும், மார்பு, தோள்கள் என்பன அகலமாகும், முகம், மார்பு, வயிறு கக்கம், இலிங்க உறுப்புகளில் உரோமம் தோன்றும், குரல் தடிக்கும்.
பெண்களில் சூலகங்கள், கருப்பைக் குழாய்கள், கருப்பை, யோனிமடல், போன்றவை முதிர்ச்சியடையும். மார்பகங்கள், இடுப்புப் போன்றவை பருமனில் அதிகரிக்கும், கக்கம், இலிங்க உறுப்புகளில் உரோமம் தோன்றும். தலையில் மயிர்கள் அதிகரிக்கும், முகத்தில் பரு ஏற்படும். பாலுணர்வு அதிகரிக்கும். இப்பருவத்தில் போதிய சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தல் வேண்டும். வெட்கம், பயம், கோபம், மகிழ்ச்சி, மனச்சோர்வு, போன்ற மனவெழுச்சிகள் இப் பருவத்தில் தோற்றம் பெறும். தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
இப்பருவத்தில்மனவெழுச்சிகளைச் சமநிலையில் பேணிக்கொள்ளப் பழகிக்கொள்ளும் போதுதான் சமநிலை ஆளுமையை விருத்தி செய்துகொள்ள முடியும்.
இப்பருவத்தில் காதல் உணர்வுகள் தோற்றம்பெறுவது இயற்கையான தாகும். காதல் வசப்படுவதோ, காதலிப்பதோ தவறல்ல. ஆனால் காதலால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி அறிந்துகொள்ளுதல் வேண்டும். இப் பருவம் அறிகைத் தொழிற்பாடு அதிகரிக்கும் பருவமாகும். தலைமைத்துவப் பண்புமிக்கவர்களாக மாணவர்கள் மிளிரும் பருவமாகும். “காதல்” இப் பண்புகளைப் பாழடித்து விடலாம். இதனால் இப்பருவத்தைச் சேர்ந்த மாணவர்களின் முழுமையான ஆளுமைப் பண்புகள் சீரழியக்கூடிய நிலமை ஏற்படலாம்.
இப்பருவத்து மாணவர்கள் பெற்றோரின் கருத்துக்களுடன் முரண்படுவர், எதிர்ப்பாலாருடன் இணைந்து தொழிற்பட விருப்பம் ஏற்படும். சகபாடிகளுடன் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுவர். தம்மைக் கவர்ந்த சினிமா நட்சத்திரங்களின் நடத்தைகளைப் பின்பற்றுவர். யதார்த்தத்துக்குப் பொருந்தாததும் வக்கிரமான காட்சிகளைக் கொண்டதுமான சினிமாப் படங்களையும், தொலைக்காட்சி நாடகத் தொடர்களையும் நிஜமாகக் கருதித் தமது வாழ்வைப் பாழாக்கும் இளையோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அவர்களது நடையுடை பாவனைகள், அங்க அசைவுகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அவர்களது ஆளுமையைச் சீர்குலைப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அவர்களது கற்றல் செயற்பாடுகளிலும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
கட்டிளமைப் பருவத்தினர் எல்லாவற்றிலும் பார்க்கத் தமது உடலின் தோற்றத்தையே வெறுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயரமான பெண்கள் தம்மிலும் கட்டையான ஆண்கள், தம்மை விரும்பமாட்டார்கள் என எண்ணித் தாழ்வு மனப்பாங்கு பெறுவர். அதேபோல் கட்டையானவர்கள் தமது உயரத்தை அதிகரித்துக் காட்டப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவர். பிள்ளைப் பருவத்தில் குறைபாடாகத் தெரியாத ஒரு உடற் குறைபாடு இப் பருவத்தில் பாரிய குறைபாடாகத் தோற்றமளிக்கும். பாலுறுப்புக்களின் விரைவான வளர்ச்சி காரணமாகக் குழப்ப நிலையும் பதகளிப்பும் ஏற்படும். ஆண்கள் தமது கனவில் வெளியேறும் விந்து தொடர்பாக மனக் கிலேசம் கொள்வர். சுயபாலின்பச் செயற்பாடுகளில் ஈடுபடுவது தகாத செயல் எனக்கருதி குற்ற உணர்வு பெறுவர். இவை இயற்கையானவை எனினும் இவை தமது கற்றலையும் ஆளுமையையும் சீர்குலைக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
பெண்களுக்கு முதல் மாதவிடாய் அதிர்ச்சியை ஊட்டுவதாக அமையும். பூப்படைவதற்குக் காலதாமதம் ஏற்படுபவர்கள் பாரிய மனவெழுச்சிப் பிரச்சினைக்குட்படுவர். போதிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் இப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். இப்பருவத்துப் பிள்ளைகள் பாலியல் பற்றிய வினாக்களுக்குத் தவறான விடைகளைப் பிற வழிகளில் பெறாதவாறு பெற்றோரும், ஆசிரியர்களும் பார்த்துக் கொள்வதுடன் அவை தொடர்பாக அவர்களுக்குப் பொருத்தமானதும் சரியானதுமான விளக்கங்களையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்குதல் வேண்டும். இப் பருத்திலேயே அவர்கள் தமது இயலுமைகளையும், இயலாமைகளையும் உணர்ந்து தமது எதிர்காலத் தொழிலைத் தெரிவுசெய்து அதனை அடைவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இன்று முகநூல் காரணமாகப் பல்வேறு துஷ்பிரயோகங்களும், கொலைகளும், தற்கொலைகளும் இடம் பெறுகின்றன. கணினியும், இணையமும் எமது அறிவுத் தேடலுக்கு மிகவும் அத்தியாவசியமானவை. ஆனால் அவை எமது ஆளுமையைச் சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும். தன்னினச்சேர்க்கை, ஆண், பெண் உடலுறவு என்பவற்றால் ஏற்படும் விளைவுகள் என்பன தொடர்பான விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் போதுமானளவு வழங்கப்படுவதில்லை. பாலியல் ஊக்கல்கள் அடக்கப்படுவதாலேயே பல்வேறு மனவெழுச்சிப் பிரச்சினைகளுக்குக் கட்டிளையோர் உட்படுகின்றனர். அடக்கப்படும் பாலியல் ஊக்கல்கள் இளைஞர்களின் தனியாள் ஆளுமையிலும் சமூக ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களது பாலியல் ஊக்கல்களைத் திசைதிருப்பிப் பல்வேறு ஆக்கச் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுதல் வேண்டும்.
இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைக் காலத்திலேயே திருமணம் செய்வதும் பாடசாலைப் பருவத்தில் திருமணம் செய்யாமலே கர்ப்பம் தரிப்பதும் அதிகரித்து வருவது அதிர்ச்சி தரும் உண்மையாகும். பல மாணவர்கள் பாடசாலைகளிலும் தனியார் வகுப்புக்களிலும் பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுவது தினமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. வீடுகளில் நெருங்கிய உறவினர்களாலேயே பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் படுகின்றனர். பெற்றோர் பிள்ளைகளில் கொண்டுள்ள அதீத நம்பிக்கை, தொடர்புச் சாதனங்களின் செல்வாக்குகள், மாணவர்கள் மத்தியில் பணப் புழக்கம் அதிகரித்திருப்பது, புலம்பெயர்ந்தோரின் நடைபிறழ்வான காலாசாரம், பாடசாலைகளில் பாலியல் கல்வி இல்லாமை, மற்றும் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லுதல், பெற்றோர் வெளிநாட்டு வேலவாய்ப்புப் பெற்றுச் செல்லுதல் எனப் பல காரணங்களை இதற்காக அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பெற்றோரும் பிள்ளைகளும் சிக்கல் களுக்கு உட்பட்ட பின்னரே இவைபற்றிச் சிந்திக்கத் தலைப்படுகின்றனர்.
1962ம் ஆண்டின் திருமணத்திற்கான சம்மதம் திருமணத்திற்குரிய ஆகக் குறைந்த வயதெல்லை மற்றும் திருமணப் பதிவுகள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் ஒரு திறத்தவராக இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் உறுப்புரை 2 இன்படி உறுப்பு நாடுகள் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயதெல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுகிறது. 1965ம் ஆண்டு ஐ.நா சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமணத்திற்கான சம்மதம் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயதெல்லை மற்றும் திருமணப்பதிவுகள் மீதான பிரேரணை திமணத்திற்கான வயதெல்லை 15 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது எனப் பிரேரிக்கிறது.
இலங்கையில் 1995ம் ஆம் ஆண்டிற்கு முன்னர் பொதுச் சட்டம், தேசவழமை மற்றும் கண்டியச் சட்டம் என்பவற்றின் கீழ் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயதெல்லை பெண் பிள்ளைக்கு 12 வயதாகவும் ஆண் பிள்ளைக்கு 14 வயதாகவும் இருந்தது. வைத்திய நிபுணர்கள், சிறுவர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச கடப்பாடுகள் என்பவற்றின் அழுத்தங்கள் காரணமாகவும் பொதுத் திருமணச் கட்டளைச் சட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் காரணமாகவும் பொதுச்சட்டம், தேசவழமை, கண்டியச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஆளப்படுபவர்களுக்கு உரிய திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண உருவாக்கத்தின்போது இந்த நியதிச் சட்டத் தேவைப்பாட்டைக் கருத்தில் கொள்ளாதுவிடுதல் திருமணத்தை வறிதாக்குமென தியாகராஜா எதிர் குருக்கள் (1923,25, NLR.89) வழக்கில் தீர்க்கப்பட்டது. இந்த வழக்கில் 11 வயதும் 1 மாதமும் கொண்ட ஒரு பெண்ணின் திருமணம் வெற்றும் வெறிதானதுமானது என நீதிமன்றம் தீர்த்தது.
முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தின் கீழ் ஆகக்குறைந்த வயதெல்லைக்கான குறிப்பான ஏற்பாடுகள் இல்லை. எனினும் முஸ்லிம் திருமண விவாகரத்துக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 23 ஐ பிரிவு 47(1)(து)யுடன் சேர்த்து வாசிக்கும்போது 12 வயதுக்குக் குறைந்த சிறுமி திருமணத்தில் இணைவாராயின் காதியின் சம்மதம் திருமணத்தின் தேவைப்பாடாக உள்ளது எனத் தேவைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பதிவு செய்யப்படாத வழக்காற்றுச் சம்பிரதாயங்களுக்கு இப் பாதுகாப்புக் கிடையாது. எனினும் தண்டனைச் சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட 22ஆம் இலக்க 1995 ஆம் ஆண்டு திருத்தம் (பிரிவு 363) 16 வயதுக்குக் குறைந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடும் ஒரு நபர் அத்தகைய பெண் 12 வயதுக்குக் குறைந்த சட்ட ரீதியான மனைவியாக இருந்தாலும் அத்தகைய உறவு பாலியல் வல்லுறவுத் தவறாகும் எனப் பொருள்கோடல் செய்யப்படுகின்றது.
பொதுவாக இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 363 இன்படி 16 வயதுக்குட்பட்ட பெண் ஒருத்தியுடன் ஆண் ஒருவர் அவளது சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ உடல் ரீதியான உறவு ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ளும்போது அவள் அவனது மனைவியாக இருந்தபோதும் கற்பழிப்புக் குற்றத்துக்கு உள்ளாவான். அதேவேளை 16 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவள் பாலியல் உறவினை ஏற்படுத்துவது சட்டத்தால் தடை செய்யப்படவில்லை. ஆனால் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அவர்கள் 18 வயதாகும் வரை திருமணம் செய்து கொள்வது அதாவது பெற்றோரின் சம்மதத்துடன் கூட திருமணம் செய்துகொள்வது சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சிக்கலான விடயமாகும் இந்நிலைமைகளில் குறிப்பிட்ட பெண்ணைப் பொறுத்தவரை பெற்றோர் மீண்டும் அவளை தனது குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ளாமல் விடுவது, குறிப்பிட்ட அந்த ஆண் அவளை 18 வயது வரும்வரை திருமணம் முடிக்க முடியாத நிலைமை (சட்ட ரீதியான வயதை அடையும் வரை) ஏற்படும். இவ்வாறு அவள் திருமணம் முடித்தாலும் பொலிசார் அவனைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டுவரலாம். குறிப்பிட்ட பெண்ணானவள் சட்ட ரீதியான வயது வரும்வரை காப்பகத்தில் விடப்படலாம். அவளின் கல்வி சீர்கெடலாம். குறிப்பிட்ட ஆண் ஆனவன் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த பெண் பிள்ளையைக் கடத்திச் சென்றதற்காகக் குற்றம்சாட்டப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்படலாம்.
இச் சூழ்நிலையில் அவர்கள் திருமணத்திற்கான வயதை அடையும் வரை இரு வருடங்கள் பிரித்து வைக்கப்படும் நிலையில் ஆண் அல்லது பெண்ணின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படலாம். எனவே அவர்களின் குறிப்பிட்ட விவகாரம் முறிந்து விடலாம். பெண் அவ்வாறான பிரச்சினை ஒன்று ஏற்பட்ட நாளில் கருவுற்றிருப்பின் பிறக்கும் குழந்தை நெறிமுறையற்ற குழந்தையாகப் பிறப்பதோடு அந்தத் குழந்தையின் தந்தை தனது தந்தை ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். இவ்வாறான பல்வேறு சட்ட ரீதியான பிரச்சினைகளைக் கட்டிளமைப் பருவத்துப் பிள்ளைகள் எதிர்நோக்கலாம்.
கட்டிளமைப் பருவத்தினர் அவர்களது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் மிகமுக்கியமான வளமாகும். அவர்கள் தமது குடும்பத்துக்குப் பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். ஒரு தேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பை வழங்குகிறார்கள். எனவே இந்த வளத்தை சிறந்த ஆளுமைமிக்க வளமாகப் பரிணமிக்கச் செய்வது நம் அனைவரினதும் கடமையாகும்.
கட்டிளமைப் பருவத்தைச் சேர்ந்த மாணவர்கள் தம்மை ஆளுமைச் சீர்குலைவிலிருந்து காத்துக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாகப் பெண்பிள்ளைகள் தமது நற்பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் நாம் மேல்நாடுடொன்றில் வசிப்பவர்களல்ல. நாம் கலாசாரமும் விழுமியமும் செழித்தோங்கிய நாடொன்றில் வசிக்கின்றோம். எமது பெயர் ஒரு தடவை பாதிக்கப்படுமானால் அந்தக் கறையை வாழ்க்கை முழுவதும் எவ்வளவு முயன்றாலும் அழிக்க முடியாது. எதிர்காலம் நமது கைகளில். அதனைக் காத்துக்கொள்வதே எமது தலையாய கடமையாக நாம் கொள்ளுதல் வேண்டும்.
மூலம் ஆசிரியம்