ஜீன்பியாஜே இவர் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்தவர். சிறந்த உளவியலாளர். சிந்தனை பற்றி புதிய கருத்துக்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர். சிந்தனைப் பற்றி மருத்துவ முறையில் ஆய்வுகளை நடத்தித் தமது முடிவுகளை வெளியிட்டார்.
இவரது மருத்துவமுறை பிள்ளைகளுடன் அளவளாவுதலே. இவர் முதலில் தமது மூன்று பிள்ளைகளிலே ஆய்வு நடத்தினரர். இவர்களது வளர்ச்சியை, குழந்தை பருவம் முதல் கட்டிளமைப்பருவம் வரை அவதானித்து அறிந்துகொண்டார். பின்னர், தமது துணை ஆய்வாளர்களுடன் இணைந்து,
1. மாணவரிடம் மொழி சிந்தனை, தீர்ப்பளித்தல், நியாயங்காணல் ஆகிய உளத் தொழிற்பாடுகளும்.
2. எண்கள், நேரம், இடவெளி, வேகம், பரப்பு, கனவளவு போன்ற எண்ணக் கருத்துக்களும் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றனவென ஆராய்ந்தார்.
பியாஜேயின் சிந்தனைமுறை பற்றிய கோட்பாடு
இவரது கோட்பாடு எல்லா உயிரினங்களினதும் சிந்தனை, இரண்டு அடிப்படையான செயன்முறைகளைக் கொண்டுள்ளது. என விளங்குகின்றது. அவை
1. சூழலுக்கேற்பத் தழுவல்
2. அனுபவங்களை ஒழுங்கமைத்தல், புலக்காட்சி, ஞாபகம், நியாயங் காணல் முதலிய உளத் தொழிற்பாடுகள் மூலமே இது நிகழ்கின்றது.
தாழ்ந்த உயிரினங்களில் சூழலுக்கேற்ற தழுவுதிறன் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன் நின்றுவிடுகின்றது. அனுபவங்களை ஒழுங்கமைத்தலில் அவை சிறிதும் வளர்ச்சி பெறாத நிலையிலேயே உள்ளன. ஆனால், மனித இனத்தில் ஒரு குழந்தை தனது வளர்ச்சிப் போக்கில் ஏற்படுகின்ற பல்வகைச் சூழலுக்கும் பொருந்தி வாழ்வதுடன், அச் சூழலின் சிக்கல் நிறைந்த இயல்புகளுக்கு ஒழுங்கான அமைப்பைக் கொடுத்து விளக்கம் பெறுகிறது.
திரளமைப்பு (அனுபவத்திரளமைப்பு)
குழந்தைகள் பிறந்த சில நாட்களில் தமது வாயில் கிடைக்கும் எப்பொருட்களையும் சுவைத்தல், தமது கையிலே அகப்படுவனவற்றை இறுகப்பிடித்தல் ஆகிய தொழிற்பாடுகளினால் தமது சூழலுக்கு அமைப்புக் கொடுக்கின்ற திறனை வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு தமது சூழலுடன் தூண்டற்பேறு பெறும்வகையில், தமது தொழிற்பாடுகளில் ஓர் ஒழுங்கையும் நடத்தையில் ஓர் அமைப்பையும் கட்டியெழுப்புகின்றனர். இவ்விதம் குழந்தைகள் சூழலுடன் இடைவினையாற்றி தமக்கென ஒரு நடத்தைக்கோலத்தை அல்லது சிந்தனை முறையில் ஓர் ஒழுங்கைக் கட்டியெழுப்புகின்றனர். இவை வரையறுக்கப்பட்டு பல சந்தார்ப்பங்களில் மீட்டல் செய்யப்பட்டு அல்லது இன்னதென அறியப்பட்டுப் பிரயோகிக்கப்படுகின்றன.
இத்தகைய நடத்தைக் கோலங்களையே பியாஜே 'திறளமைப்பு' என அழைக்கின்றார். இவ்வாறு திரளமைப்புக்கள் வளர்ச்சியடையத் தொடங்கியதும் அவற்றை ஒவ்வொரு புதிய நிலையிலும் அவர்கள் பிரயோகிப்பர். இதன் விளைவாகவே குழந்தைகளின் சிந்தனைத் தொழிற்பாடுகள் வளர்ச்சியடைகின்றன.
சிந்தனையும் திரளமைப்பும்
திரளமைப்பு என்பதை உளவியலில் ஹெட் என்பவர் அறிமுகஞ்செய்தார். இவரின் கருத்தையே பியாஜே, பாட்லெட், பாவ்லோவ் ஆகியோரும் ஆதரித்தனர். திரளமைப்பு என்பதற்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் இல்லை. திரளமைப்பு என்பது பெரும்பாலும் பழைய அனுபவங்களைக்கொண்ட ஒரு தொகுப்பு. இது எல்லாச் சாதாரண தூண்டற்பேறுகளிலும் உள்ளது. அது எழுந்தவாறு அமையாத கூட்டான தன்மைகொண்ட ஒரு நடத்தையே குறிக்கும்.
சிந்தனைசார் தொழிற்பாடு
1. தன்மயமாக்கல்
2. தன்னமைவாக்கல் ஆகிய இரு அடிப்படைத் தொழிற்பாடுகளைப்
பொறுத்தே அமைகின்றது.
தன்மயமாக்கல்
குழந்தை சூழலில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்படும் போது தனது அறிவாற்றலின் தொழிற்பாட்டினால் அதற்கு ஏதேனும் ஓர் அமைப்பைக் கொடுப்பதே தன்மயமாக்கல் ஆகும். அப்போது குழந்தை தான் முன்னர் ஆக்கிய அனுபவத் திரளமைப்பில் அப்புது அனுபவத்தை உறிஞ்சி எடுக்கின்றது. குழந்தை தனது சூழலை ஆராயும்போது சுவைத்தல், இறுகப்பிடித்தல், ஆட்டுதல் போன்ற செயல்கள் மூலம் தன்மையமாக்கல் நிகழ்கின்றது.
தன்னமைவாக்கல் சில வேளைகளில் குழந்தையிடம் ஏற்கனவேயுள்ள திரளமைப்பில் பொருந்தமுடியாத அனுபவங்கள் எதிர்ப்படக்கூடும் அப்போது அக்குழந்தை தனது திரளமைப்பைத் திருத்தியமைத்து இப்புதிய அனுபவங்களை அதனுள் இயைபுபடுத்த முயல்கின்றது. இவ்வாறு புதிய அனுபவங்களுக்கேற்ப திரளமைப்பை மாற்றி அமைப்பதே தன்னமைவாக்கல் ஆகும். தன்னமைவாக்கலின் போது ஒருவன், முயற்சித்தல், முயன்று தவறுதல், பரிசோதனை செய்தல், வினாவுதல், பிரச்சினை தீர்த்தல் போன்ற தொழிற்பாடுகளைக் கையாள்கின்றான். அதன் விளைவாக தனது அனுபவத் திரளமைப்பில் சிலவற்றை ஒன்று சேர்த்து புதிய திளரமைப்புக்களைப் பெறுகின்றான். தன்மயமாக்கலும் தன்மைவாக்கலும் ஒன்றையொன்று தழுவிய தொழிற்பாடுகளாகும். இவை இரண்டும் உயிரியல் சமநிலையையும் சமனற்ற நிலையையும் மாறி மாறி ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. பிள்ளையின் அறிவாற்றல் முதிர்வடையும்போது சமநிலைகளே அதிக அளவில் இடம்பெறுகின்றன என்று கருதப்படுகின்றது.
சிந்தனையின் பின்திரும்புமியல்பு
ஒரு பிரச்சனையை விடுவிக்கும்போது ஒருவர் சிந்திக்க ஆரம்பித்த நிலைக்குப் பின்னோக்கிச் சென்று சிந்திக்க வேண்டியுள்ளான். ஒரு பாத்திரத்திலுள்ள நீரை இன்னொரு உயரமான பாத்திரத்தினுள் ஊற்றினால் நீரின் உயரம் வேறாகத்தோன்றும் அப்போது அந்த கன அளவு மாறிவிட்டதா எனச் சிந்திக்கும் பிள்ளை தனது சிந்திக்கும் தன்மையைப் பின் திருப்பவேண்டியுள்ளான். சிந்தனையிலே அந்நீரை முந் திய பாத்திரத்துள் ஊற்றினால் என்ன நிகழும் என்று அனுமானம் செய்கிற ான். இதனையே சிந்தனையின் பின் திரும்புமியல்பு எனப் பியாஜே கருதுகின்றார்.
உளவளர்ச்சி (சிந்தனைவளர்ச்சி) பருவங்கள்
குழந்தை பிறந்தது முதல் கட்டிளமைப்பருவம் வரை உளவளர்ச்சியானது பல பருவங்களினூடாக ஒழுங்கான முறையிலே மாற்றம் அடைகின்றது. ஒரு பருவத்திலுள்ள உள வளர்ச்சியின் இயல்பு அதற்கு முந்திய பருவத்திற்குரிய உளவளர்ச்சியின் இயல்பிலிருந்து ஆரம்பிக்கின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக ஓர் ஏறுநிரலில் உளத்திறன் வளர்ச்சியடைகின்றது. ஒவ்வொரு நிலையிலும் புதிய வகையான எண்ணக்கருக்கள் பெறப்படுகின்றன என்பது பியாஜேயின் கருத்தாகும். பியாஜேயும் அவரது துணை ஆராய்ச்சியாளரான இல்ஹைடரும் இப்பருவங்களை வகுத்துக்காட்ட பெருந்தொகையான அவதானிப்புகளையும் பரிசோதனைகளையும் நடத்தினர்.
உளவளர்ச்சிப் பருவங்கள்
பியாஜே பல உப பிரிவுகளைக் கொண்ட நான்கு (4) முக்கிய பருவங்களாக வகுத்துள்ளார் அவை
1. புலன் இயக்கப்பருவம் - பிறப்புமுதல் இரண்டு ஆண்டுகள்
2. தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் - வயது 2-7
3.தூல சிந்தனைப் பருவம் - (பருப்பொருட் சிந்தனைப் பருவம்) - வயது 7-11, 12.
4.நியமச் சிந்தனைப் பருவம் - வயது 11, 12 - 15.
புலன் இயக்கப்பருவம்
பியாஜே இப்பருவம் தொடர்பான விபரங்களைத் தமது மூன்று குழந்தைகளையும் அவதானித்துப் பெற்றார். அவர் இப்பருவத்தை ஆறு (6) உப பிரிவுகளாகப் பிரிக்கின்றார். இப்பருவத்தில் குழந்தை இயக்கச் செயல்களையே செய்வான். இவை அவனது புலனுணர்ச்சிகளிலேயே தங்கியுள்ளன. இப்பருவத்தில் மொழி பேச்சு என்பன மிகக் குறைவானதால் கருத்து நிலை உளத் தொழிற்பாடுகளும் குறைவு.
உப பிரிவுகளும் புலன் இயக்கங்களும்
1.பிறந்து முதல் - 1மாதம் வரை குழந்தை பிறந்து முப்பது நிமிடங்களில் தனது கைகளைச் சுவைக்கின்றது. பின்னர் தனது புலன் உணர்வின் தூண்டற் பேறுகளினுள் புதியனவற்றைத் தன்மயமாக்கி இயக்கங்களினாலான ஓர் அனுபவத் திரளமைப்பை ஆக்குகின்றது.
2. 1 மாதம் - 3 முாத்ம் வரை ஒரு மாதத்தின் பின்னர் குழந்தை தனது வாய், கை உடல் ஆகியவற்றின் அசைவுகளை இணைத்துத் தான் விரும்பிய வேளைகளில் விரலைச் சுவைத்தல் போன்ற செயல்களைச் செய்கின்றது. இவ்வாறே புலன்களை இணைத்துச் செயலாற்றுகின்றது. ஆனால் ஒவ்வொரு புலன் மூலம் பெறும் புலக்காட்சிகள் வெவ்வேறாகவே காணப்படுகின்றன.
3. 3-8 மாதம் வரை இப்பருவத்தில் புலனுறுப்புக்களை இணைத்து பொருட்கள் சில உருவங்களை நிரந்தரமாகக் கொண்டுள்ள தன்மையை அறிகின்றனர்.
4.8-12 மாதம் வரை இப்பருவத்தில் இரண்டு அல்லது மூன்று திரளமைப்புகளை இணைத்து புதிய அனுபவங்களைப் பெறுவர்.
5. 12-15 மாதம் வரை இப்பருவத்தில் இடம், காலம், பொருள்கள் பற்றிய எண்ணக் கருக்கள் ஆரம்பமாகின்றன மறைந்த பொருட்டகளைத் தேடிக்கண்டு பிடிக்கும் ஆற்றல் ஆரம்பமாகும். 15 - ஆம் மாதமளவில் புதிய சூழ்நிலைகளுக்கேற்ப தன்னமைவாக்கம் பெற்றுப் புதிய பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனைப் பெறுவர்
6.15-18 மாதம் அல்லது இரண்டு ஆண்டுவரை இப்பருவத்திலே புலனியக்கச் செயல்களுக்குப் பதிலாக உளச் செயல்கள் ஆரம்பிக்கின்றன. ஞாபகம், விம்பவாக்கம், குறியீட்டுத் தன்மைகள் போன்றன வளர்ச்சி அடையும்.
2.தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் : 2-7
வயது இது புலனியக்கப் பருவத்துக்கும் தூல சிந்தனைப் பருவத்துக்கும் இடையில் ஒரு நிலைமாறு பருவமாகும். பரந்த அளவு வளர்ச்சிப் பண்புகளைக் கொண்டுள்ளது. குழந்தைகள் குறியீடுகளைப் பயன்படுத்தவும் கருத்து நிலை எண்ணங்களை வெளிப்படுத்தவும் ஆரம்பிக்கின்றனர். இப்பருவத்தைப் பியாஜே இரண்டாக வகைப்படுத்தியுள்ளார்.
அ. எண்ணக்கருவுக்கு முற்பட்ட பருவம் 2 - 412 வயது
ஆ. உள்ளுணர்வுப் பருவம் 41/2 - 7 வயது
அ. எண்ணக்கருவுக்கு முற்பட்ட பருவம் (2 - 41/2 வயது)
* இப்பருவத்தில் செயல்களில் குறியீட்டைப் பயன்படுத்தும் ஆற்றல் அதிவிரைவாகவும் பரந்த அளவிலும் வளர்ச்சி அடைகின்றது.
*இதற்கு மொழி வளர்ச்சி துணைபுரிகின்றது.
*மொழி உதவியுடன் கடந்தகால நிகழ்வுகளை ஞாபகப்படுத்தவும், செயல்கள், பொருட்களை விளங்கவும் விபரிக்கவும் திறன் பெறுவர்.
*பாவனை செய்வதன் மூலம் புதிய அனுபவங்களைத் தன்னமைவாக்கிக் கொள்கின்றனர்.
*சிந்தனையில் தர்க்க முறையோ, தொகுத்தறி உய்த்தறி முறையோ இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக அசைவுகளை உயிர் என்பதற்கு ஆதாரமாகக் கொண்டு சிந்திப்பர் இதை பியாஜே குறுக்குச் சிந்தனை என்பார்
ஆ.உள்ளுணர்வுப் பருவம் வயது : 41/2 - 7
*இப்பருவத்தில் பிள்ளைகள் தமது செயல்களுக்கும் நம்பிக்கைக்கும் காரணங்களைக் கண்டு சில எண்ணக்கருக்களைப் பெறுகின்றனர். ஆனால், சரியான முறையில் சிந்திக்க முடிவதில்லை கருத்து நிலையில் ஒப்பிட்டு நோக்கும் ஆற்றல் இருப்பதில்லை. ஆனால், காட்சி நிலையிலே ஒரு நேரத்தில் ஒரு தொடர்பை மாத்திரம் ஒப்பிட்டு நோக்கக் கூடியவர்களாக உள்ளர். சிந்தனை தன் முனைப்பு மையமாக உள்ளது. அதாவது தனது அனுபவத்துக்கு ஏற்ப பிறரின் செயல்களைப் புரிந்து கொள்கின்றனர் இப்பருவத்தில் கற்பனைச் சிந்தனை குறையத் தொடங்கும். பிள்ளைகள் உண்மை நிலைமைகளைப் பாவனை செய்வர்.
*குழந்தை ஒரு நேரத்தில் இரண்டு பொருட்களை மாத்திரமே ஒப்பிடும் அதனால், அண்மை, பிரிவு, தொடர்ச்சி போன்ற எண்ணக்கருக்களை விளக்கிக் கொள்ளும்.
3. தூல சிந்தனைப் பருவம் - பருப்பொருட் சிந்தனைப்பருவம் 7 - 11 வயது வரை
இப்பருவத்திலே, காலம், இடம், கனவளவு, எண்ணிக்கை, ஒழுக்கம் ஆகியவற்றின் எண்ணக் கருவாக்கத்திலும், தருக்க சிந்தனையிலும் முக்கிய மாற்றம் நிகழ்கின்றது. நிகழ்ச்சிகள் உளச் செயல்களாக சிந்தனையில் இடம் பெறுகின்றன. சிக்கலான தொடர்புகளைப் பற்றிய விளக்கத்தைப் பெற்று, இரண்டு அல்லது மூன்று தன்மைகளைக் கொண்டு பொருட்களை நிரற்படுத்தவர். முழுப் பொருட்களுடன் அதன் பகுதிகள் கொண்ட தொடர்புகளை விளக்குவர். கருத்து நிலையில் சிந்திக்க முடியாதுள்ளனர். விதி முறைகள், கருதுகோள்கள் ஆகிவற்றில் இடர்பாடு கொண்டுள்ளனர். பொது விதி காண்பதிலும் தரவுக்கு அப்பால் அனுமானம் செய்வதிலும் கருத்துநிலைப் பிரச்சினைகளை விடுவிப் பதிலும் முதிர்வடையாதுள்ளனர். நீளம், பரப்பு, கோணங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. அநேகமாக பிள்ளைகள் ஏறு வரிசையில் அல்லது இறங்கு வரிசையில் நிலைகளை அமைக்கவும், ஒத்த பண்புகளை அவதானிக்கவும் திறன் பெறுவர்.
4.நியமச் சிந்தனைப் பருவம் ஏறக்குறைய 11-12 வயது - 15 வயதுவரை
இப்பருவத்திலே பிள்ளைகள் சமூக வாழ்க்கையிலும், கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடுவர். ஆகவே, கருது கோள்களை அமைத்துச் சிந்திக்கும் திறன் பெறுகின்றனர்; கொள்கைகளை உருவாக்குகின்றனர். விதிமுறைகள், ஒழுக்க விதிகள் பற்றிய மனப்பான்மைகள் மாறுபடுகின்றன. அவர்களின் அறநெறித்தீர்ப்பு நெகிழ்சி உடையதாகவும், தீவிர போக்குடையதாகவும் மாறுகின்றது. இப்பருவத்திலே அவர்களின் திறன்கள், பரந்தளவில் விரிவடைகின்றன. கருதுகோள்களைப் பெறுதல், எடுகோள்களை உருவாக்குதல், அவற்றைப் பரீட்சித்தல், பொதுத் தன்மைகளைக்கான முயற்சித்தல், கற்பனை அமைப்புகளைக் கண்டுபிடித்தல் தமது தீர்ப்புக்களுக்கு தர்க்க ரீதியான நியாயங்களை வெளிப்படுத்தல் போன்ற பல்வேறு திறன்கள் இப்பருவத்தில் வளர்ச்சி அடைகின்றன.
பியாஜேயின் கருத்துக்களின் பயன்கள்
1.சிந்தனை வளர்ச்சி பற்றிய ஆய்வுகளில் இவரின் பங்களிப்பு முதன்மை வாய்ந்தது. பிள்ளையின் அறிவு வளர்ச்சி பற்றி அறிய விரும்பும் எவரும் இவரது கருத்துக்களை அலட்சியம் செய்ய முடியாது.
2.குழந்தைகளின் உள வளர்ச்சி (சிந்தனை வளர்ச்சி)ப் படிகளை அறிந்து அதற்கேற்ப கற்பித்தல் முறைகளைப் பிரயோகிக்க இவரது கருத்துக்கள் மிக்க பயனுடையன.
3.பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் பற்றிய பியாஜேயின் கருத்துக்களை அறிந்து இருப்பதனால் கற்பித்தலைத் திறம்படச் செய்ய முடியும்.
4.ஆரம்பப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் உள்ளுணர்வுப் பருவம் தூல சிந்தனைப் பருவம் ஆகிய வளர்ச்சிப் படிகளில் இருப்பர். இப் பருவங்கள் பற்றிய பியாஜேயின் கருத்துக்கள் ஆரம்பப் பாட சாலை ஆசிரியர்களின் கற்பித்தலுக்குப் பெருந்துணை புரியும்.
5.ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நியமச் சிந்தனைப் பருவம் பற்றிய பியாஜேயின் ஆய்வுகள் பயன் அளிக்கக்கூடியது.
6.அவரின் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி பிள்ளைகளின் சிந்தனைவளர்ச்சி, அவர்கள் கற்பதற்கு வேணடிய முதிர்ச்சி விசேட கல்வி உளச்சார்பு போன்றவற்றை மதிப்பிட முடியாது.
7கலைத்திட்டம் வகுப்பதில் அவரது கருத்துக்கள் அதிகளவில் பயன்படக்கூடியன.
8.பியாஜேயின் கருத்துக்களைப் பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் சூழ்நிலையைக் கல்வியிலாளர் அமைத்துக்கொள்ளலாம்.