ok 1குழந்தை ம.சண்முகலிங்கம்

நாடக அரங்கு எப்பவுமே தனது காலத்தின், தான் வாழும் சமூகத்தின் உள்ளுணர்வின் உயிர் மூச்சுக்களை வெளிக்கொணர்ந்தவாறே இருக்கும் - இருக்கவேண்டும். காலம் தவறுமிடத்து கலையும் தவறுவதுண்டு. இருப்பினும், தனது காலத்தின் சமூகத்துள் நின்று கொண்டு, அதன் உள்ளுணர்வின் உயிர் மூச்சைச் சுவாசித்துணர்ந்துவிட்டு, அக்காலத்துள் கரைந்துவிடாது, கருக்கொண்டு பிரசவிக்கப்படும் படைப்புக்கள்தான் காலத்தை வழி நடத்தும், அவ்வாறு இல்லாதவை காலத்தோடு கரைந்து விடும்.

இன்று எமது தேசம் நீண்ட காலத்தின் பின் கை நழுவிப் போகவிட்டுவிட்டு நின்று ஏங்க முடியாததொரு அரும் வாய்ப்பினைத் துரும்பிலை ஒன்றில் தொங்கவிட்டுவிட்டுத் தவித்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு அறுந்து விழுந்துவிடுமோ என்ற ஏக்கம் நல்ல நெஞ்சங்களை வாட்டுகிறது. அந்த ஏக்கத்தின் விளைவே இந்த ஒன்றுகூடல். ஆகி முடிந்தவற்றை அவசரமாகக் கணக்கொடுத்துப் பார்த்து விட்டு, இனி ஆகவேண்டியவற்றை வகுத்தமைத்துக்கொள்வதே இதன் நோக்கு என நாம் நினைத்துக்கொள்ளலாம்.

இணைந்து கருமமாற்றுதல் என்றுமே நல்லது. நாடகம் கூட்டுக்கலை என்பதால் கூடிச் செயல்புரியும் பண்பை அது வளர்த்து விட வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தும் நாடகக் கலைஞர் மத்தியிலும் பிளவும் பிரிவினையும் நிலவுகிறது. அப்படி இருந்துகொண்டு எப்படி நாம் அரசியல்வாதிகளைப் பார்த்து ஒன்றுபடுங்கள் என்று கேட்க முடியும்?

இது தான் நிலைமை என்பதற்காக நாம் பேசாது இருந்துவிட முடியாது. கூடிப்பேச முடிந்தவர் முதலில் கூடிப்பேசுவோம். முடிந்தவற்றைப் பேச முற்படும் போது நடந்த தவறுகளை ஆளுக்காள் போட்டியாகச் சுட்டிக்காட்டிச் சேற்றை அள்ளி எறிந்து பரஸ்பரம் முகங்களைப் பழுதாக்கிக் கொள்ளாது, நடந்த தவறுகளை நல்ல முன்னேற்றத்துக்கான படிக்கட்டுக்களாக அமைத்துக் கொண்டு அவற்றின் மீது பாதம் வைத்து நடந்து மேல்நோக்கிச் செல்ல முற்படுவோம், முன்னேறுவோம்.

அரசியல் என்ற விஷயத்தைப் பரந்த பொருளில் பார்த்தால், மனிதன் சம்பந்தப்பட்ட அனைத்துமே அரசியல் தான். மதங்கள் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. இந்தக் கருத்து நிலையில் நின்று நோக்கினால், இலங்கைத் தமிழ் அரங்கு பேசியவை யாவுமே அரசியல்தான் என்று ஒரேயடியாகக் கூறிவிட முடியும். அவ்வாறு கூறுவதைப் பலர் விரும்பார். எனவே, சம்பிரதாய மரபில் நின்று பாடுபொருளைப் பல பிரிவுகளுக்குள் வகுத்து நோக்க முற்படுவோம்.

தமிழர் அரங்கப் பாரம்பரியம்

இலங்கைத் தமிழருக்கும் ஒரு தனித்துவமான அரங்கப் பாரம்பரியம் இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தின் ஆரம்பகால ஆற்றுகைகளைக் "கூத்துக்கள்'' என நாம் பெயரிட்டுக் கொண்டுள்ளோம். " கூத்து'' என்பது தமிழ் கூறும் உலகுக்குப் பொதுவான ஒன்றாக இருக்க, "நாட்டுக்கூத்து" என்பது இலங்கைத் தமிழுக்குரியதாக உள்ளது. 19ம் நூற்றாண்டில் வந்த "இசை நாடகத்தையும் உள்ளடக்கி , இவை அனைத்தையும் பாரம்பரிய அரங்கு " என்போம். பாரம்பரிய அரங்குகள் யாவும் ஆடலையும், பாடலையும், கதைசொல்லலையும் தமது அளிக்கைச் சாதனங்களாகக் கொண்டுள்ளன. அவை தமது பாடுபொருட்களாக வீரம், காதல், பக்தி, கற்பு, சத்தியம், தேசப்பற்று, விசுவாசம் எனப் பலவற்றைக் கொண்டிருந்தன. அவை தமது கதைகளை ஜதிகங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், வரலாறு என்பவற்றிலிருந்து பெற்றுக்கொண்டன. இவற்றை ஆடியோர் பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தின் அடிநிலை மக்களாகவே இருந்தனர்.

இந்தப் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகள் சிலவற்றில், சிலர் அந்த அந்தக் கால அரசியல் விஷயங்களையும் இடையிடையே சிறிய அளவில் பேசியுள்ளனர். இலங்கைத் தமிழர்தம் உரிமை பற்றியும், இலங்கையின் சுதந்திரம் பற்றியும், அந்நியருக்கு நாடு அடிமையாக இருப்பது பற்றியும் இவ்வரங்குகளில் பேசப்பட்டுள்ளது. பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளை அளிக்கை செய்த கலைஞர்களால் கூட தமது காலத்து அரசியலைப் பேசாது இருக்க முடியவில்லை என்பதை இங்கு நாம் உணரலாம்.

நவீன அரங்கம

ஆங்கிலேயர் வருகையோடு வந்த நவீன காலத்தின் பேறாக எமக்கும் புதியதொரு அரங்கம் அறிமுகமாகிறது. அது ஆங்கில மொழிமூலம் எமக்கு அறியத்தரப்படுகிறது. ஆடல் பாடலோடு இருந்த எமது மரபுவழி அரங்கு போலல்லாது, அது உரைநடை அரங்காக இருந்தது. அது மேலைப்புல நாடகங்களின் மொழிபெயர்ப்புக்களையும் தழுவல்களையும் கொண்டதாகவும், அவற்றின் வடிவத்தைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் நாட்டு நாடகங்களாகவும் இருந்தன. தமிழ் நாட்டின் தமிழ் அரங்கு மூலமாகவே இவ்வரங்கு எமக்கு முதலில் அறிமுகமானது.

இவ்வரங்கில் பிரதானமாக ஈடுபட்டவர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவராவர். நாட்டின் அரசியலில் ஈடுபடுபவர் பெரும் பாலும் மத்தியதரவர்க்கத்தினராக இருந்த போதிலும் ஆரம்ப காலத்தில் இப்புதிய அரங்கை அறிமுகம் செய்தவர்கள் தமது நாடகங்களினுடாக எமது நாட்டு அரசியலைப் பேசவில்லை . அவர்கள் ஷேக்ஸ்பியரது நாடகங்களின் தமிழ் நாட்டுத்தழுவல்களையும் தமிழ் நாட்டார் தம் வரலாற்று நாடகங்களையுமே பெருமளவில் ஆற்றுகை செய்தனர். அவர்களில் ஒரு சிறுகுழுவினர் மட்டும் எமது தேசத்தின் தேசிய அரசியல் பற்றியும் தமிழர்தம் அரசியல் நிலை பற்றியும் தமது ஒருசில ஆற்றுகைகளில் பேசியுள்ளனர். சிறிய அளவில் பேசப்பட்ட போதிலும், அவை தமிழர்தம் தேசியம் பற்றிப் பேசியதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது தமிழ்த்தேசியம் பற்றி அரங்கினூடே முதலில் சிந்தித்தவர்கள் என்ற முக்கியத்துவத்தைப் பெறுகின்றனர்.

இயல்பு நெறி அரங்கு

மேலைத்தேச அறிவியல் செல்வாக்கால் இலங்கைத்தமிழர் அரங்கில் ஏற்பட்ட மாற்றம் ஷேக்ஸ்பியரை எமக்கு அறிமுகப்படுத்தியதோடு நின்று விடவில்லை . அது பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடகாசிரியர்களையும், மேலைத்தேய நாடக, அரங்க மோடிகளையும் வகைகளையும் அறிமுகப்படுத்தி வந்தது. அந்த வகையில் எமக்கு அறிமுகமான இயல்பு நெறிவாதம், 1940, 1950 களில் தமிழ் மக்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளைத் தற்புதுமை நாடகங்களாக, காத்திரமான முறையில் படைக்கும் ஒருவரைத் தோற்றுவித்தது.

அந்த இயல்பு நெறிவாத நாடகங்கள் எமது மண்வாசனையைத் துய்மையான முறையில் பரப்பி நின்றன. தமிழர்தம் அக முரண்டுபாடுகளான சாதீயம், செல்வச் செருக்கு, அந்தஸ்தின் அடியாக எழும் ஏற்றத் தாழ்வுகள், வர்க்கக்குணாம்சம், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் என்பனவற்றைப் பரந்த அளவில் அவை பேசி நின்றன. அத்தோடு இலங்கைத் தேசத்தின் அரசியல் பற்றியும், தமிழ்த் தேசியத்தின் அரசியல் பற்றியும் அவை பேசின. அரசியல் பற்றிப் பேசுமிடத்து, அரசியல் வாதிகளின் போலித்தனங்கள், சந்தர்ப்பவாதங்கள், இனவெறிப் போக்குகள், சுயநல அரசியல்கள், தன்னலப் போக்குடைத்தலைமைகள்,

 

 

பகைமுரண்பாட்டுப் பிடிவாதங்கள், ஒற்றுமையின்மை எனப் பலவற்றையும் எடுத்துக்காட்டி நின்றன. நேர்மையான முறையில், சரியான வழியில் நாட்டுக்காக உழைக்க இளைஞர் முன்வர வேண்டும் என்பதையும் இந்த நாடகங்களில் சில வலியுறுத்தி நின்றன.

இயல்புநெறிவாத நாடக முறைமையை உள்வாங்கிய நிலையில் இலங்கைத் தமிழ் தேசியத்தின் பிரதான மன்னர்களில் ஒருவரது வரலாறும் நாடகமாக்கப்பட்டது. அந்நாடகம் பற்றிப் பேசுமிடத்து, விடுதலை பெற்ற இலங்கையின் வரலாற்றைப் புதுமுறையில் ஆராய வேண்டும் என்றும் வரலாற்று வீரர்களை பொதுமக்கள் அறியவேண்டும் என்றும் வீரர்களின் வாழ்க்கையை நாடகமாக்க வேண்டும் என்றும் அன்னவரால் அன்றே கூறப்பட்டது. (பேராசிரியர் ககணபதிப்பிள்ளை )

இந்தவாறு, மேற்கண்ட இயல்பு நெறிவாத நாடகங்களும் வரலாற்று நாடகமும் சமூகவிமர்சனங்களாகவும் அரசியல் விமர்சனங்களாகவும், சன்னதமற்ற சீர்மைச் செம்மை வாய்ந்த கருத்துரைகளாகவும் அமைந்தன.

தேசியப் பார்வை

1956 இலங்கைத் தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பாரிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு காலகட்டத்தின் பிரதான மைல் கல்லாக அமைந்தது. அதேவேளையில், துரதிஷ்டவசமான இனமுரண்பாட்டுக்கான அத்திபாரம் இடப்பட்ட ஆண்டாகவும் அமைந்து விட்டது. குறுகிய நோக்குடைய சுயநல அரசியல், தேசிய நோக்கின் கண்களை இறுக்கக் கட்டி விட்டது. அதன் கட்டவிழ்ப்பு இன்னமும் சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை .

எது எவ்வாறு அமையினும், 1956 தேசிய சிந்தனையின் அடியாக எழுந்த பண்பாட்டுத் தேடலை இலங்கையின் இரு பிரதான இனங்கள் மத்தியிலும் ஊக்குவித்தது. தேசியத்தை நிறுவும், பலப்படுத்தும், பறைசாற்றும் மூலகங்களில் ஒன்றாகப் பாரம்பரியக் கலைகள் அடையாளங் காணப்பட்டன. அக்கலைகளில், ஆடல், பாடல், கதை சொல்லல், விளையாட்டு, செய்து காட்டல் என்ற கலை மூலகங்களைக் கொண்டிருந்த பாரம்பரிய ஆற்றுகைகள் - அதாவது இலங்கையின் மரபுவழி அரங்குகளின் பால் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் இரு இனங்களையும் சார்ந்த இரண்டு மூலகங்கள் தனித்தனியே தத்தம் இனங்களின் பாரம்பரிய ஆற்றுகைக் கலைகளை மீள்கண்டு பிடிக்க முற்பட்டனர். அவர்களது அயராத அரும்பணி, அவரவர் சமூகத்தில் வியத்தகு விழிப்புணர்வை, தேசியக்கலை நாட்டத்தை, பெருமிதத்தை எற்படுத்தியது. இவர்களது முன்முனைப்பு, சிங்கள, தமிழ் அரங்கியற் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. (பேராசிரியர்கள் சரத்சந்திரவும். மத்தியானந்தனும்)

இலங்கைத் தமிழ் அரங்கைப் பொறுத்தவரையில், மேற்கண்ட செயலால் விளைந்த பாரம்பரியக் சக்தின் மறுமவர்ச்சி இன்று வரை மிகுந்து ஆர்வத்தோடு நோக்கப்படுகிறது. சுத்துத் துறையில் ஈடுபடுவதென்பது தமக்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று என்று இன்றுவரை பலர் முனைப்போடு ஈடுபட முற்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஈடுபட்டு நிற்பவர்களுள், 'இலங்கைத் தேசியத்துள்' தம்மை நிறுத்திப் பார்க்கின்றவர்களும், 'தமிழ்த் தேசியத்துள்' தம்மை இட்டுக் கொள்கின்றவர்களும் உள்ளனர்.

மீள்கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கூத்துக்கள் தமது உருவ உள்ளடக்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முனையவில்லை. முக்கியமாக உள்ளடக்கத்தில் எந்த வகையான மாற்றமும் செய்வது அவர்களது நோக்கமாக இருக்கவில்லை. எமது அரங்க ஆற்றுகையின் மூல வேர்களை எமக்கு அடையாளங் காட்டுவதே அவர்களது நோக்கமாக இருந்தது. எனவே, இவர்கள் தயாரித்த கூத்துக்களும் முன்னைய கூத்துக்களின் சுருக்கமாகவே இருந்தன. அவை வட்டக்களரிகளை விட்டிறங்கி வந்து படச்சட்ட மேடைகளில் ஏறிநின்று தமது ஆற்றுகைகளை நிகழ்த்தின. பழைய கூத்துக்களைப் போல இவையும் இதிகாச, புராண, வரலாற்றுக் கதைகளையே கூறின, அவற்றை அப்படியேதான் கூறின. எந்த அரசியற் பொடி வைத்தும் அவை ஆற்றுகை செய்யப்படவில்லை.

இருப்பினும், அவற்றின் பாடுபொருளாக இதிகாச புராணங்கள் கூறும் அறப் பொருள்கள் இருந்த போதிலும், அவற்றின் பேசாப் பொருளாகத் 'தேசியம்' என்ற அரசியல் தொக்குநின்றது. தமிழர் ஒரு தனி இனத்தவராக இலங்கையில் வாழ்கின்றனர் என்ற எண்ணத்தை அவர்களுக்கு அவை ஊட்டின. மலையகம், மட்டக்களப்பு, மன்னார், முந்தல், வன்னி, திருகோணமலை, யாழ்ப்பாணம் எனப் பரந்து வாழும் இலங்கைத் தமிழர் அனைவரும் மொழியால் மட்டுமல்லாது, தாம் ஆடும் கூத்துக் கலைகளாலும் ஓரினத்தவர் என்ற நினைப்பை இவை கொடுத்தன. அரசியல் எண்ணத்தால் ஒன்றுபடுத்துவது கடினமென்றிருந்த இவர்களை, இவர்தம் கூத்துக் கலைகளால் ஒன்றுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இவர்கள் ஒன்றுபடுவது இவர்தம் அரசியல் தேவையாக இருந்தது.

இரு இனங்களும் தமது தனித்துவ அடையாளங்களை நேசம் நிறைந்த நட்போடு நிலை நிறுத்துவதை விட்டுவிட்டு, பகை மோதலோடு அவற்றைப் பயன்படுத்தத் துண்டும் ஒரு அரசியற் சூழல் இந்தத் தேசத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. இரு இனமும் ஒன்றை ஒன்று பகையோடு நோக்காது, தத்தம் இனத்துவ அடையாளங்களைப் பெருமையோடு சூடிக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளங்களையும் வாய்ப்புக்களையும் சம உரிமையோடு நுகர்ந்து கொள்ளும் நாளுக்காக எமது எதிர்கால உழைப்பை நாம் ஊதியமாக்கத் தயாராக இருக்கிறோமோ? இருக்க வேண்டும் இல்லையேல்- விடை உங்களது.

பல்வேறு அரங்குகள்

1950, 1960களில் வேறு சில அரங்க ஆற்றுகைகளும் இடம்பெற்று வந்தன. அவற்றைப் பல வகையினவாகப் பிரித்துக் கொள்ளலாம். (1) கிராமத்து இளைஞர்கள் தாம்பார்த்த சினிமாப் படங்களை ஒத்த முறையில் நாடகங்களைத் தமது மகிழ்வுக்காக மேடையேற்றிவந்தனர். (2) கிராமங்கள் தோறும் ஒரு சாரார் தமிழ்ப் பேச்சு மொழியைப் பயன்படுத்தி மக்களை மகிழ்விப்பதை அடிப்படையாகக் கொண்ட, புத்தளிப்புப் பாங்கிலமைந்த சுய ஆக்க நாடகங்களைக் கூட்டாகக் கலந்துருவாக்கி நடித்து வந்தனர். அவை சமூகத்தின் அன்றாட சமூக, அரசியல் விஷயங்களைப் பேசின. (3) காத்திரமான முறையிலமைந்த இயல்பு நெறிவாத - யதார்த்தவாத நாடகங்களைக் கற்ற எழுத்தாளர்கள் சிலர் எழுதி நடிக்கச் செய்தனர். அவையும் மக்கள் தம் பல்வேறு பிரச்சினைகளையும் ஆழமாக ஆராய்ந்தன. (4) வேறு ஒரு சாரார், தமிழரசுக் கட்சியின் கொள்கைகளோடு உடன்பாடு கொண்டவர்களாக இருந்து கொண்டு, அன்றைய அரசுகளின் தமிழ் விரோதச் செயல்களைக் கண்டித்தும், தமிழர் தம் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ் முஸ்லிம் வரலாற்று வீரர்களின் சுதந்திர உணர்வைக் சித்திரித்தும், தமிழ்த்தலைமைகளிடையே காணப்பட்ட சுயநலச் சார்பைச் சாடியும் நாடகங்களை மேடையேற்றினர். (5) பொது உடைமைச் சார்புடைய சிலர், தத்தமது கட்சிகள் சார்பாக நின்று சாதியம், பெண்ணியம், வர்க்கம், இலங்கைத் தேசியம் போன்ற விஷயங்களைக் கருப்பொருளாகக் கொண்டு நாடகங்களைத் தயாரித்தளித்து வந்தனர். (6) இந்தியாவின் மத்தியதரவர்க்கச் சபா நாடகங்களின் எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்ட சமூக நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் பலர் நடித்து வந்தனர்.
(7) திராவிடக் கழகத்தாரின் சமூக சீர்திருத்த நாடகங்களும் இங்கு பலராலும் நடிக்கப்பட்டு வந்தன. இவ்வரங்க ஆற்றுகைகள் யாவும் மக்கள் மத்தியில் நாடகம் பார்க்கும் பழக்கத்தை வலிமை பெறச் செய்ததோடு, தமது சமூக, அரசியல் பிரச்சினைகளை நோக்கும் தன்மையையும் ஏற்படுத்தி வந்தன. எது எவ்வாறாயினும், வடக்கிருக்கும் இந்தியச் செல்வாக்கு என்றும் எம்மை அழுத்தியவாறே உள்ளது. அதை மீறி எதையும் நாம் சாதிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்வது நல்லது. அடிக்கடி பெரியப்பரிடம் ஒருவரைப் பற்றி மற்றவர் மாறி மாறி முறையிடும் பெறாமக்கள் போல நாம் இராது, பெரியவரின் ஆசியோடு இரு சாராரும் இணைந்து வாழ்ந்து முடிக்க முயல்வதும் நல்லது.

காத்திரமான அடித்தளம் இடப்பட்ட காலம்.

1960களின் கடையாண்டுகள் இரண்டு முதல் 1970களின் முதல் ஏழு ஆண்டுவரையான காலப்பகுதி இலங்கைத் தமிழ் அரங்க வரலாற்றில் உள்ளடக்கம், உருவம், அளிக்கை, அடிப்படைச் சிந்தனை என்ற அனைத்திலும் முக்கியமான பண்புகளையும் தாக்கங்களையும் கொண்ட நாடகச் சிந்தனைகளையும் செயற்திறன்களையும் ஆற்றுகைகளையும் வெளிக்கொணர்ந்த காலப்பகுதியாக அமைந்திருந்தது. இலங்கைத் தமிழ் அரங்க வரலாற்றில் காலத்துக்குக் காலம் முனைப்புப்பெற்ற போக்குகள், பொதுமைகள் யாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு, இந்தக் காலகட்டம், தனது சிந்தாந்தக் கோட்பாடுகளை நாதசுருதியாகக் கொண்டு, எதிர்கால அரங்குக்குக் காத்திரமானதொரு அடித்தளத்தை அமைத்தது. இந்தக் காலகட்டத்தின் முனைப்பை முன்னின்று உந்தியவர்கள் இலங்கை அரங்கில் வெவ்வேறு மரபுகளின் அனுபவத்தைப் பெற்று ஒன்று சேர்ந்தவர்களாக இருந்தனர். கிராமத்தின் சமூக அரங்கு, வரலாற்று நாடக அரங்கு, கூத்தரங்கு , ஆங்கில அரங்கு , சிங்கள அரங்கு என்பவற்றின் பகிர்வுப் பரிச்சயம் பெற்றவர்களாக இருந்ததோடு, இவர்களுள் கூத்தர்களும், பாடகர்களும், நடிகர்களும், நெறியாளர்களும், கவிஞர்களும் , வழிகாட்டிகளும் இருந்தனர். பொதுவுடைமைவாத சமுதாயவாத சிந்தாந்தமே இவர்களைப் பெருமளவில் நின்று வழிநடத்தியது.

மேற்கண்டவர்களது சங்கமத்தின் விளைபயனாக இலங்கைத் தமிழ் அரங்கு புதிய தரிசனங்களையும் புதிய படைப்புக்ளையும் புதிய அரங்க நெறிமுறைகளையும் தந்து நின்றது. அதன் தொடர்ச்சியும் தொடர்ச்சியின் தொடர்ச்சியும் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரங்கில் தொடர்கின்றன.

 

ஏற்புடைமை இல்லா இன்றைய முரண்கள் நாளைய பொழுதின் வைதிகங்களாகிவிடுவது தான் உலகின் அனுபவம்.

தமிழ்த் தேசிய அரங்கு 1970 களில் இந்த அரங்கு வர்க்க முரண்பாடுகளைப் பற்றியும் சமூகத்தில் நிலவிய பல ஏற்றத்தாழ்வுகள் பற்றியும்தான் பொதுவாகப் பேசியது. இடதுசாரிச் சிந்தனை இலங்கைத் தமிழ் அரங்கின் காத்திரமான வளர்ச்சிக்கும் உதவியதை இங்கு நாம் கருத்திற் கொள்வது அவசியம். இவர்கள் அனைவருமே இலங்கைத் தேசியம் பற்றிய கருத்தினையே ஆணித்தரமாகக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களில் சிலர், இலங்கை அரசியலில் ஏற்பட்ட பல தவிர்க்கக்கூடிய விபத்துக்கள் காரணமாகத் தமிழ்த் தேசியத்தின்பால் பரிவு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாற்றப்பட முடியாத கருத்துக்கள் கூடக் காலத்தின் கெடுகோலங்களால் மாறிவிடுவதற்கான சான்றுகளாக இவை அமைகின்றன.

1970 களில் இந்த அரங்கத்தார் இலங்கைத் தமிழ் அரங்கின் ஆற்றுகை முறைமையில் இரு புதுமைகளைப் புகுத்தினர். (1) மீளுருவாக்கம் செய்யப்பட்ட பாரம்பரியக் கூத்தின் அனுபவத்தைக் கொண்டு (அ) ஒரு கூத்து மோடியின் வடிவத்தைத் தெரிந்தெடுத்து, அதனுள் சமகால அரசியல், சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கமாகப் புகுத்தியும், (ஆ) பல பாரம்பரிய மோடிகளின் ஆற்றுகை மூலகங்களைத் தெரிவு செய்து இணைத்து, அதனுள் சமகாலப்பிரச்சினைகளைப் புகுத்தியும் நாடக ஆற்றுகைகளைத் தயாரித்தனர். (2) அதே வேளையில் இவர்களில் சிலர் முற்றுமுழுதான இயல்பு நெறிவாதத்திலிருந்து விடுபட்டு மோடிமைப் படுத்தப்பட்ட , அல்லது மாற்றியமைக்கப்பட்ட யதார்த்தவாத முறைமையில் நாடகங்களைத் தயாரித்தனர். (3) மேலும் இவர்களில் கவிஞர்களாக இருந்தவர்கள், கவிதையை, நாடகத்தின் சொல்சார்ந்த தொடர்பாடல் ஊடகமாக மீண்டும் வலுவானதொரு முறைமையில் கொணர்ந்து நிலைநிறுத்தினர். (4) இவற்றோடு , யதார்த்தம் சாராத மேலைத்தேய அரங்கு மோடிகளும் பண்பாட்டு மயமாக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட்டன. (5) அத்தோடு மொழி பெயர்ப்புத் தயாரிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன. (இலங்கைத் தமிழ் அரங்கில் மொழிபெயர்ப்பு நாடகங்களுக்கும் நீண்ட வரலாறும் முக்கிய பங்கும் இருந்து வருகிறது)

இந்தவாறு 1970களின் பிரதான நீரோட்டமாக இருந்து வந்த இவ்வரங்க முயற்சிகள், இலங்கைத்தமிழ் அரங்கை அழகுபடுத்தியதோடு செழுமைப்படுத்தியும் நின்றது.

இந்தக் காலகட்டத்திலும், தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் நாடக,

அரங்க நடவடிக்கைகள் தமிழ்ப் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தத் தேசத்தில் தமிழர் சகல உரிமைகளோடும் வாழவேண்டும் என்பதை அவை வலியுறுத்தி வந்தன. அந்த, தேசிய மயப்பட்ட யதார்த்தவாத சமூக நாடகங்களும், வரலாற்று நாடகங்களும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டி வந்தன. ஒரு இனத்தின் மத்தியில் இன உணர்வை ஊட்டி வளர்ப்பது எந்த வகையிலும் குற்றமாகாது. இனத்துவேஷத்தை ஊட்டி தன் இன உணர்வை வளர்ப்பதுதான் மாபெருந்தவறாகும். அந்தத் தவறு இந்தத் தேசத்தில் நடந்தது; நடந்து கொண்டும் இருக்கிறது. இனியாவது அது நடக்காமல் இருக்க நாம் அனைவரும் முயற்சிக்க முடியுமா? முடிந்தால் நல்லது, முடியாவிட்டால் எல்லாமே முடிந்து போய்விடும்.

அரங்கு உத்வேகம் பெற்ற காலம்

1980 கள் இலங்கையின் வரலாற்றில் யுத்தத்தின் நாட்களைப் பிரசவித்த துர்ப்பாக்கியம் நிறைந்த காலகட்டமாக உள்ளது. 1983ல் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் தமிழ்ப்ப பிரதேசத்தில், முக்கியமாக தமிழ் இளைஞர் மீதும், அரச காவல் துறையினர் மீதும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் இன்றுவரை எத்தனை கொலைகள், கொள்ளைகள், அவலங்கள், இழப்புக்கள் என்பவற்றை இலங்கை தரிசித்து வருகிறது.

இந்தக் காலகட்டத்தை இலங்கையின் வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழ்ந்த பலர், வடக்குக் கிழக்கின் இருண்ட காலம் என்கின்றனர். கலை இலக்கிய முயற்சிகள் எதுவே இடம் பெறாத ஒரு காலகட்டம் என இதை அவர்கள் கருதிக் கொள்கின்றனர். ஆயினும் உண்மை அதுவல்ல. இந்தக் காலகட்டத்தில் இங்கு நிறையவே கலை இலக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த் தேசியத்தை ஆதரிப்போரும் கூட இக்காலகட்டத்தில் தமது கலை இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தனர்.

நாடக, அரங்க நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் இக்கால கட்டம் அதற்கு மிகுந்த உத்வேகத்தை அளிப்பதாகவே இருந்து வந்தது. யுத்த சூழலும் யுத்த அவலங்களும் இல்லாது போயிருப்பின், இலங்கைத் தமிழ் அரங்கு வறுமைப்பட்டுப் போய் இருக்கும் என்று உறுதிபடக் கூறமுடியும். ஆதிமுதல் அன்றுவரை சந்ததிக் கையளிப்புச் செய்யப்பட்டு வந்த இலங்கைத் தமிழ் அரங்கப் பண்புகளும் பாரம்பரியங்களும் 1980துகளில் ஏற்பட்ட புதிய சூழலுக்கும் எதிர்பார்ப்புகளுக்கு மேற்பத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டு புதிய ஆற்றுகைகளை மக்களுக்கு அளித்தன.

இந்தத் தசாப்பத்தின் தமிழ் அரங்கம், இதுவரை பேசாப்பொருளாக இருந்தவை உட்பட அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசமுற்பட்டன. அவை சின்னஞ்சிறிய சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவைப்படும் அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசின. கல்வி, பெண்ணியம், இனவிடுதலை, அகமுரண்பாடுகள், வர்க்கபேதம், போர் எனப் பலவற்றையும் பேசின.

நடிகர் அல்லாதோர் கூடித் தமது பிரச்சினைகளைத் தாமே அரங்கச் செயலாக்கி விளக்கம் பெறும் இன்றைய ஒரு அரங்க முறைமையின் தூரத்து முன்னோடியாக இக்காலத்தின் சில முக்கிய அரங்க ஆற்றுகைகள் அமைந்தன. ஆற்றுகைகளில் கல்வி பற்றி மாணவர்களே பேசிக் கொண்டனர். பெண்களது பிரச்சினைகள் பற்றி மாணவியரும் பெண்களும் பேசினர். பேராட்டம், இன விடுதலை என்பன பற்றி இளைஞர், யுவதிகள், வளர்ந்தவர், முதியவர் எனச் சமூகத்தின் சகல சந்ததியினரும் பேசிக் கொண்டனர். இந்தவாறு, மக்களால் மக்களின் அரங்கு என்ற இலக்கின் ஆரம்பப் புள்ளியாக இவ்வாற்றுகைகள் அமைந்திருந்தன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களிலிருந்து இவ்வரங்குகள் தமது ஆற்றுகை மூலகங்களையும் அரங்க மொழிகளையும் பெற்றுக் கொண்டன. உலக அரங்குகளின் அனுபவத் தேட்டங்களும் தமிழ்ப் பண்பாட்டு மயமாக்கப்பட்டுக் கையாளப்பட்டன.

ஊரடங்கு கால அரங்கு

யுத்தம் தமிழ்ப் பிரதேசங்களில் ஒரு நாளை 12 மணித்தியாலங்களுக்குள் குறுக்கிவிட்டது. ஊரடங்குச் சட்டத்தால் மாலை ஆறு மணி முதல் காலை ஆறுமணி வரை ஊர் வீடுகளுக்குள் அடங்கி உறங்கிக் கிடக்கும். நாடகங்களை இரவில் நடிப்பது சாத்தியமற்ற ஒன்றானது. பகற்பொழுதுக்குள் செய்யும் எதையும் செய்து முடித்துவிட வேண்டும். 1980 முதல் இன்று வரை எழுதப்பட்ட எமது தமிழ்நாடக எழுத்துருக்களில் ஒளிவிதானிப்புப் பற்றிய எந்தவொரு குறிப்பும் இருப்பதில்லை. காரணம், அதற்குத் தேவை இருக்கவில்லை.

இராணுவக் கெடுபிடிகளால் ஊர்களில் நாடகம் மேடையேற்ற முடியவில்லை. இதனால் ஆற்றுகைகளை நிகழ்த்தக் கூடிய பாதுகாப்பான இடங்களாகவும், பகலில் நாடகம் நிகழ்த்தக்கூடிய இடங்களாகவும் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் அமைந்தன. இதன் பயனாக சிறுவர் நாடகங்களும், பாடசாலை நாடகங்களும், பல்கலைக்கழக நாடகங்களும் முக்கியத்துவம் பெற்றன.

கிராமங்கள் பட்டணங்களில் நாடகம் மேடையேற்றுவதென்பது முற்றற அற்றுப்போனது என்றும் கூறிவிட முடியாது. பல்கலைக்கழக மாணவரும், போராளிக்குழுக்களைச் சேர்ந்த சிலரும், கிராமத்து இளைஞர் மன்றங்கள் சிலவும் ஊர்களில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்திவரத் தவறவில்லை . பலவித இடர்களை எதிர்நோக்கியே அவர்கள் தமது பணியினைச் செய்ய முடிந்தது.

தெருவெளி அரங்கு

இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் கவிதா நிகழ்வு என்றதொரு புதிய ஆற்றுகை முறைமையும், தெருவெளி அரங்கச் செயற்பாடுகளும் இடம் பெற ஆரம்பித்தன. இவை மக்களது அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும் யுத்தம், விடுதலை என்பன பற்றியும் பேசின. இவற்றின் செயற்பாடுகள், போராட்டக் குழுக்களில் இளைஞர் சென்று சேர்ந்து கொள்வதற்கும் வழிவகுத்தன என்பதும் உண்மையாகும்.

ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தினரின் அரங்க ஆற்றுகைப் போக்கில் ஏற்பட்ட பண்பு மாற்றங்களை வரையறுத்துக் கொள்வது தவறு என்ற போதிலும், நேரக்குறுக்கம் காரணமாகவும், தேசத்தின் வரலாற்று நிகழ்வுகளோடும் இணைத்து அரங்க நடவடிக்கைகளை நோக்க வேண்டும் என்பதாலும் இங்கு ஆண்டுகளும் தசாப்பதங்களும் ஓரளவு குறிப்பிடப்படுகிறது.

1980 களின் அரங்கப்போக்கு 1990 களின் நடுப்பகுதிவரையிலும் சிற்சில அகநிலைப்பட்ட மாற்றங்களையும் புறநிலைப்பட்ட மாற்றங்களையும் பெற்று வந்தது. 1985ஐச் சூழவுள்ள காலப்பகுதி தேசிய விடுதலைப் போராட்டத்தை அரங்க வடிவில் அங்கீகரித்ததோடு , மக்கள் யாவரும் இது பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்றும், மக்கள் யாவரும் இணைந்த ஒரு நடவடிக்கையாகவே அது இருக்கவேண்டும் என்றும், எமக்குள் ஒத்த கருத்தும் ஒற்றுமையும் இருக்கவேண்டும் என்றும் கூறியது. நல்லதைக் கூறவேண்டியது அரங்கின் பணி.

போராட்ட அரங்கு

இந்தக் காலகட்டத்தில் படிப்படியாகப் போராட்டக் குழுக்களும் தமது உறுப்பினரையும் ஆதரவாளர்களையும் கொண்டு போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், போராட்டத்துக்கு அணிதிரட்டும் ஆள்சேர்க்கும் நாடகங்களையும் தெருவெளி அரங்க ஆற்றுகைகளையும் நிகழ்த்தி வந்தன. தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை, விடுதலை என்ற கருத்துக்களே இவை அனைத்தினதும் பாடுபொருட்களாக இருந்தன. போரின் கொடுமையும் உக்கிரமும் இலங்கைத் தேசியம் பற்றிச் சிந்திக்கக் கூடிய மனநிலையைத் தரவில்லை .

போரின் உக்கிரம் அதிகரிக்க அதிகரிக்க அரங்க ஆற்றுகைகளின் அகப்புறப் பண்புகளும் மாற்றங்கண்டன. ஆற்றுகைகளை உருவாக்கும் முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. கலந்துரையாடிப் பின் எழுதி நடிக்கப்பட்ட முறைமை , இப்போது களப்பயிற்சிகளில் கலந்துரையாடிக் கலந்துரையாடி, செய்து பார்த்துச் செய்து பார்த்து, நடிகரல்லா ஆற்றுவோர் நிகழ்த்திக் காட்டும் ஒரு நடவடிக்கையாக உருப்பெற்றது. இவற்றில் உணர்ச்சி உள்ளடக்கம் என்பது படிப்படியாக உயர்ந்து வந்தது. ஒரே அரங்கக் குழுவினர் மேடை அரங்க ஆற்றுகைகளையும் தெருவெளி ஆற்றுகைகளயுைம் நிகழ்த்தி வந்தனர். பேருருவங்களும் பெருங்காட்சிப் பண்பும் இக்காலத்துச் சில அரங்க ஆற்றுகைகளில் முக்கியத்துவம் பெற்றன.

1995 வரையிலான காலப்பகுதி வரை மேற்கண்ட நாடக ஆற்றுகைகள் முக்கியத்துவம் பெற்றன. இவற்றோடு, விடுதலைப் போருக்கான நியாயப்பாட்டைப் பிரசாரம் செய்யும் நாடகங்களும் இடம்பெற்றுவந்தன. இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமது இல்லிடங்களை விட்டு வெறுங்கையோடு அகதிமுகாம்களில் வாழநேர்ந்த அவல நிலையும் ஏற்பட்டது. இதனால் மக்களது - குறிப்பாக அகதி முகாம்களில் வாழும் மக்களது - ஆரோக்கியம், சுகாதாரம், சுத்தம் என்பன பற்றிய, கலந்துரையாடற்பாங்கிலமைந்த தெரு வெளி அரங்க நடவடிக்கைகள், அகதிமுகாம்களில் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு விடுதலை, தளைநீக்கம், பற்றிய தெருவெளி அரங்க ஆற்றுகைகளும் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டன.

இவற்றோடு, கலந்துரையாடி எழுத்துரு எழுதி, சம்பந்தப்பட்டவர்கள் நடித்து மேடைகளில் ஆற்றுகை செய்யப்படும் சில நாடகங்கள், போரால் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி இக்காலத்தில் பேச முற்பட்டன.

குடும்பங்களின் சிதைவு , முதியோர் தனிமை, உளநலம் பாதிப்பு, பாலியல் வல்லுறவு, வீட்டைப்பிரியும் அவலம், புலம்பெயர்வு எனப் போரின் காரணமாக மக்கள் எதிர்நோக்கிய அவலங்களை வெளிப்படுத்தின. போர் தொடரினும் போரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு உரிய ஆறுதலும் பரிகாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இவ்வரங்க ஆற்றுகைகளது உட்பொருளாக அமைந்தது.

மேலும், இக்காலத்தின் சில ஆற்றுகைகள் ஊமப்பாங்கான முறைமையைத் தழுவி உரையாடல்கள் இல்லாது இசையினதும் அபிநய அசைவுகளினதும் துணையோடு போரின் கொடுமை பற்றியும் அமைதியின் அவசியம் பற்றியும் பேசின. இத்தகைய நாடகங்களும், கூத்துப்பாங்கான நாடகங்களும், கூத்துக்களும், ஏனைய சமூகநாடகங்களும் வடக்கு கிழக்குக்கு அப்பாலும் நிகழ்த்தப்பட்டு வந்தன.

இடப்பெயர்வுகால அரங்கு

யுத்த நாட்கள் முழுவதுமே அவலம் நிறைந்த நாட்களாக இருந்து வந்த போதிலும், அவலம் முள்முடிதரித்த ஆண்டாக 1995 அமைந்தது. ஒரே நாளில் இலட்சக்கணக்கான மக்கள், மாடுமனை மக்கள் சுற்றம் விட்டுக், கால்நடையாக இடம் பெயரநேர்ந்தது. இத்தகைய இடப்பெயர்வு, யுத்தத்தின் பின் பலருக்குப் பலதடவை ஏற்பட்டுள்ளது. இந்த இடப்பெயர்வுகள் ஒவ் வொன்றும், ஒவ் வொரு கிராமத்தினதும் முகங்களைத் துடைத்தழித்துவிட்டது. முகமழிந்த கிராமங்களில், பல புதுமுகங்களின் மத்தியில் இரண்டொரு பழைய முகங்கள் திரும்பச் சென்று, தமது சூழலில் அந்நியர் போல் வாழ்கின்றனர். சுற்றம் புதிது, சூழல் புதிது, உறவு புதிது, நட்புப் புதிது, அயல் புதிது, புடை புதிது, ஆயினும் இடையில் வந்த படைமட்டும் உரிமையோடு எங்களுடன் இருக்கிறது. அதுவும் பாவம், எம்மைப்போலத்தான் பாவம். வாழ்வுக்காக , ஏவிவிட தன் இடம் பெயர்ந்து எங்கள் மத்தியில் வந்து விழுந்து கிடக்கிறது. காலம் வர அது தன் இடம் போகும், நாம் எம் இடம் போவோம். படை என்றால் என்ன பிசாசா? இயக்கம் என்றால் என்ன பேயா? இரண்டுமே அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்துள்ள இந்தக் தேசத்து மக்களின் மகன்களும் மகள்களும் தானே. இனிவரப் போகும் மைந்தரின் அம்மை அப்பர் அவரல்லவா? இதை நாம் உணர்ந்துகொண்டால், உணரவைத்தால், காலம் கனியும்.

இந்த இடர்மிகுகாலத்திலும் தமிழரங்கு உறங்கிக் கிடக்கவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மத்தியில், முகாம்களில், முகாம்களை ஒத்த சேரிக்குடியிருப்புக்களில், மக்களுக்கு நம்பிக்கையூட்டி, உள்ளத்தையும் உடலையும் பாதுகாத்துக் கொள்ள, ஊர்வலம், விளையாட்டு, ஆடல், பாடல், வினைத்திறன் மிக்க செயல் என யாவும் கலந்ததொரு தெருவெளி ஆற்றுகை முறைமையை நடைமுறைப்படுத்தி வந்தது.

1995க்குப் பிற்பட்ட காலப் பகுதியில் சிறுவர் நாடகங்கள், போராட்டப் பரப்புரை நாடகங்கள், அரசியல் விழிப்புணர்வு நாடகங்கள், பாடசாலை நாடகங்கள், எனப் பலவும் மேடை ஆற்றுகைகளாகவும், தெருவெளி அரங்க ஆற்றுகைகளாகவும், கலந்துரையாடல் அரங்க ஆற்றுகைகளாகவும், வெளித்தெரியா அரங்க ஆற்றுகைகளாகவும் வடிவெடுத்து நின்று செயற்பட்டன. இவை பேராட்டப் பிரசாரம், கல்வி, வறுமை, நோய் நொடிபரவுதல், வறட்சி, இயற்கை சுறண்டல்படுத்தல், மேலைக் கலாசாரத்தின் தாக்கம், எமது ஆற்றல் வீண் போதல், தேசியத்தை விட்டுத் தமிழ்த் தேசியத்தைப் பேசுவதற்கான நியாயம், ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கம், ஏமாந்து வந்த தமிழ்த்தலைமைகள், கண்ணிவெடி மிதிவெடி பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கை, சிறைகளில் வாடும் தமிழ்க் கைதிகள், அரசுகள் பயன்படுத்திக் கொள்ளும் பொலிசும், இராணுவமும், குடியேற்றப்படும் அப்பாவிச் சிங்கள மக்கள், போரால் துன்புறும் மக்கள் எனப் பலப்பல அரங்க ஆற்றுகைகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன - இருக்கின்றன.

வெளித்தெரியா அரங்கு (Invisible Theatre)

இக்காலகட்டத்தில் வெளித்தெரியா அரங்க நிகழ்வொன்று 45-50 தடவைகள் படைக்கட்டுப்பாட்டிலில்லாத தமிழ்ப் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. அது பல சுய விமர்சனங்களையும், யுத்தத்தின் நிர்ப்பந்தத்தையும், இரு இன மக்களினதும் நற்பண்புகளையும், காலம் எம்மைக் கொடுமைப்படுத்தியதையும், யுத்தம் தொடரமுடியாது என்பதையும் மக்களோடு மக்களாக மாறுவேடத்தில் நின்று பேசியது. மக்களும் மனந்திறந்து பேசினர். பேச அஞ்சியோர் எழுந்தும் சென்றனர். இருந்து பேசியோர் அடித்தும் பேசினர்.

போர்க் காலத்தில் எழுந்த சில நாடகங்கள் திரும்பத்திரும்ப எங்கள் வரலாற்றைக் கூறுவனவாக அமைந்தன. அவற்றை எழுதியோர், வரலாற்றைத் தாம் நினைப்பதைக் கூறுவதற்கான முறையில் எழுதிக் கொண்டனர். இந்த விஷயத்தில் இரு இனத்தவரும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. வரலாறு என்பது உண்மை . உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டுமேயல்லாமல் உண்மைகளை உருவாக்கக் கூடாது.

 

உளவளத்துணை அரங்கு

அண்மைக்காலத்து நாடகங்கள் சில, இடர்பாட்டு இன்னலுக்குள்ளாகி இருக்கும் மக்களிடம் களப்பயிற்சி, கலந்துரையாடல் என்ற முறைகளை ஊடகமாகக் கொண்டு சென்று, அவர்களது நம்பிக்கையைப் பெற்று, அதன் அடித்தளத்தில் அவர்களது மனங்களைத் திறக்கச் செய்து, உள்ளத்தின் உள்ளே உள்ளவற்றைக் கொட்டச்செய்து ஒரு வகையிலமைந்த உளவளத்துணை என நிற்கின்றன. இவ்வாற்றுகை யாவும் மிகுந்த உச்சநிலையில் ஒவ்வொருவரும் தமது மன உணர்ச்சிகளை வெளிக்கொட்ட வைக்கின்றன. இவை ஒரு சந்நதப் பரவச நிலைக்கு இட்டுச் சென்று, அதனூடே மனச்சாந்தி காணும் நிலையை நோக்கியவாறு பயணிக்கின்றன. இம்முறையில் பரிச்சயமானவர்களைப் பின்னர் ஆற்றுவோராகக் கொண்டு மேடையில் நின்று பரவசம் காட்ட முற்படும் வேளையில் பார்வையாளர் இரண்டுபடுகின்றனர். அவர்களில் ஒரு சாரார் உள்ளத்தில் ஒட்டாத உடற்சந்தங்காட்டி, கூடிச் செய்ததன் நோக்கினைக் கொச்சைப்படுத்துகின்றனர். பார்வையாளரில் பெரும்பாலானவர்கள் பற்றற்ற நிலையில் நின்று விடுப்புப் பார்க்கின்றனர். உள்ளார்ந்த உணர்வுகளை, நம்பிக்கைக்குரிய சூழலிலும், நெருக்கமான தொரு உறவுச் சூழலிலும் வைத்து, வெளிக்கொணர்ந்து கொட்டிப் பரஸ்பரம் ஆறுதலடையப் பயன்படுத்தப்பட்ட ஒன்றைப், பரவெளியில் பல்லாயிரக் கணக்கானவர் மத்தியில் ஒரு உத்தியாகப் பயன்படுத்த முற்படும்போது, உண்மை சோரம் போகிறது. உணர்வு சிதறிப் போகிறது. எந்த அரங்க வடிவமானாலும், தீவிரபிரசாரத்துக் கெனப் புறப்பட்டு விட்டால், அது தன்னாமம் கெட்டுத் தன்னைச் சார்ந்த வரையும் கெடுத்து விடும்.

இன்றைய நிலைமை

இன்று தமிழ் நாடகங்களில் சில போரின் மீதான வெறுப்பை வெளிக்காட்ட முற்பட்டுள்ளன. வேறுசில நாடகங்கள் சமாதானத்தின் அவசியத்தைப் பேசுகின்றன. இன்னும் சில காணாமல் போனோர், கண்ணிவெடி, மிதிவெடி, அபாயம் பற்றிப் பேசுகின்றன. பெண்ணியம் பற்றிப் பேசுகின்ற ஆற்றுகைகள் பலவும் உள்ளன. சிலர், ஆண்டுத் திவசம் போல ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப் படுத்தப்பட்ட திகதிகளில் விழாவெடுத்து நாடகம் போட்டு மகிழ்கின்றனர். உள்ளத்து உணர்ச்சி போய்விட்டால் எதுவுமே பழஞ்சலிப்பாகத்தான் போய்விடும்.

இறுதியாக ஒன்றுமட்டும் கூறலாம். எங்கள் நாட்டில் கடைசியாகச் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்குப் பெயர் புரிந்துணர்வு உடன்படிக்கை , இது புரிந்துணர்வு ஏற்பட்டபின் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையா? அல்லது புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்காகச் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையா?

எது என்னவானாலும் யுத்தம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் மீண்டும் யுத்தம் வருவதை விரும்பவில்லை. எனவே சமாதானம் பற்றிப் பேசும் காலமல்ல இது. யுத்தமில்லா நிலையல்ல சமாதானம். யுத்தம் நின்று விட்டால் சமாதானம் வந்து விட்டது என்று அர்த்தமல்ல. யுத்தம் ஏன்வந்தது? அது வந்ததற்கான காரணம் எதுவோ , அந்தக்காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது.

எதற்கும் காரணகாரியம் என்ற ஒன்றிருக்கும். இந்தத் தேசத்தைப் பொறுத்தவரையில், அடிப்படை மனித உரிமை' என்பதுதான் யுத்தம் என்ற காரியம் விளையக் காரணமாக இருந்தது. அந்த அடிப்படை மனித உரிமை என்பதைப் பகிர்ந்து கொள்ள முடியாது. பிறப்பால் ஒவ்வொரு மனிதனுக்கும் உரித்துடையதாவது அது. அதைப் பிரிக்கவோ, பகிரவோ, பிடுங்கி எடுக்கவோ எவருக்கும் உரிமையில்லை. அதைக் கொடுக்கவும் எவருக்கும் உரிமையில்லை. கொடுக்கப் பெற்றுக்கொள்ளப்படுவதல்ல அது. ஒருவரது பிறப்போடு வந்து அவரது இறப்போடு போவது அது. உலகில் ஒரு மனிதன் இருக்கும் வரை அதுவும் இருக்கும். அதற்கு முட்டுக்கட்டைகள் முழுமூச்சுடன் போடப்படும் போது விளைவது தான் போர் . முட்டுக் கட்டைகள் நீங்க போர் வராது. எனவே, இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு மகனும் மகளும் உரிமையோடு - அடிப்படை மனித உரிமையோடு வாழும் நிலை வந்து விட, சமாதானம் தன்பாட்டில் வந்து விடும்.

சமாதானமல்லப் பிரச்சினை. அதுவல்ல அடிப்படைப் பிரச்சினை. அடிப்படை மனித உரிமை. அதுவேதான் அடிப்படைப் பிரச்சினை. அந்தப் பிரச்சினையைத் தீர்த்தால், இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஆம் இப்போதைக்கு மாற்றம் என்பது இயற்கையின் நியதியல்லவா?

ஆகவே இப்போதைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

2003 அக்டோபர் 29-30 திகதிகளில் கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் நடை பெற்ற சிங்கள் - தமிழ் கலைக் கூடல் நிகழ்வில் அளிக்கை செய்ய எழுதப்பட்ட கட்டுரை.

 

 

 

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click