நிரூஜா இராசரத்தினம்
"மரபுரீதியான அரங்கிற்கு வருபவர்கள் தாமாகவே தம்மை வெளிப்படுத்துகின்றனர். பொதுவாக ஆடல் பாடல்கள் என்பது பண்டைய சமூக மக்களிடையே நிலவி வந்தது. இவர்களை ஆடல், பாடல்கள், செய்கைகள் என்பன வெளிப்படுத்தவும் குணப்படுத்தவும் செய்தது. மனிதன் ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் போது உடல் ரீதியாக தன்னை குணப்படுத்திக் கொண்டு தன் பிணிகளை போக்க முடியும்."
சூரன் போர் சடங்கரங்கானது தற்காலத்திலே இடைவினைத் தொடர்புகள் தர்க்கப்பட்டுப் போன நிலையில் இதன் சமகாலப்போக்கின் பங்குகொள் நிலையினுடாகவே இதனை ஆராய வேண்டியுள்ளது. இன்று எம் கைகளில் மிஞ்சியிருக்கும் இக்கலை மரபினை மேலும் ஊக்குவித்து பேண் நிலையின் முக்கியத்துவத்தினை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. அரங்கின் மீது சாதாரண மக்களுக்கு தீராத மோகம் காணப்பட்டாலும் இன்றைய அரங்கின் கல்வி முறைகளும் கோட்பாடுகளும் அவர்களை அன்னியப்படுத்தி விட்டதை உணர்கின்றோம். எத்தனை கலைஞர்கள் தம் கலைகளை இன்று வெளிக்காட்டத் தயங்குகின்றனர். எனவேதான் உள்ளிருக்கும் மக்களை வெளிக் கொண்டுவருவதற்கான அரங்கு எமக்குத் தேவையாக இருக்கின்றது.
இவ் அரங்கானது வெளிவரும் மக்களின் சுதந்திரமான செய்கைகளையும், சுதந்திரமான பேச்சுக்களையும் வெளிப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். நம்மிடையே உள்ள சடங்கு அரங்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களை தன்பால் கொண்டு இன்னும் இயங்குகின்றது. மக்களிடம் சென்று தாக்கம் செலுத்தி அவர்களை ஈர்த்து அன்று தொடக்கம் இன்று வரை தன்னகப்படுத்தியுள்ளது. எனவே அன்னியப்பட்ட மக்களின் அரங்கத்தேடலில் அவர்களின் சுயாதீனத்தையும், கலைகளையும் முன் நிறுத்துவதற்கு நாம் சடங்கு அரங்கிற்குள் மீளத்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. சடங்களில் காணப்படும் நல்ல இயல்புகளை கொண்டும், தற்கால அரங்கில் இயல்புகள் சிதையாமலும் நாம் இவ் அரங்கை கொண்டாடலாம்.
இவ்வாறான ஒரு அரங்கத்தேடலில் சூரன் போர் சடங்கை முன்னிறுத்துவது முக்கியமானதாகும். முருகன் சூரனை சங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் சூரன் போர்' என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம். பார்வையாளரும் பங்காளராக மாறி சூரன்போர் சடங்கினை நிகழ்த்துவர். கோயில் வெளி முழுவதுமாக ஆற்றுகை இடம்பெறும். களம் முழுவதும் அங்குமிங்கும் திரிந்து ஆற்றுகையினைப் பார்ப்பார்கள். நிகழ்த்துவேருக்கும், பார்வையாளர்களுக்கும் களம் ரீதியான கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் தம் விருப்பப்படி பார்வையாளராகவும் பங்காளராகவும் காணப்படுவர்.
பெருவாரியான கூட்டத்தின் மத்தியில் ஆற்றுகை நிகழ்த்துவதற்கு களம் (வெளி) மிகவும் அவசியம். தொன்றுதொட்டு மனிதன் சடங்கில் பங்குகொண்டு சடங்கை நிகழ்த்தி அதனோடு இணைந்து ஆடிப்பாடி தன்னை வெளிப்படுத்த இந்த வெட்ட வெளியான களங்களே உதவின. மேலும் வெட்ட வெளியான களங்களில் வெளிப்பாடும் செய்கையும் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இங்கே வெளிகளிலே தம்மை மறந்த மனிதர்கள் கூச்சலிட்டு கத்தி ஆர்ப்பரித்து ஆடிப்பாடினர். செய்கைகள் யாவும் அவர்களின் மனங்களை தூய்மைப்படுத்தி அமைதியடையச் செய்தது. இதன் மூலம் அவன் தானாகவே குணமடையலானான்.
சூரன் போர் (கந்த சஷ்டி)
இவ்விழாவின் ஆறாம் நாள் 'சூரன் போர்' நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம். இங்கு சூரர்களின் உற்பத்தி நிகழ்ச்சி கூறப்படுகின்றது. மாயையும் காசிபரும் சந்தித்தல், சூரர்கள் பிறத்தல், சூரர்கள் சிவபெருமானை நோக்கித் தவம் இருத்தல், சிவபெருமான் வரம் தருதல் ஆகிய நிகழ்ச்சிகள். சூரன் திக்கு விசயம் மேற்கொண்டு தேவர்களை அடிமையாக்கிய நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு தேவன், குபேரன், ஈசானன், பிரம்மா, சூரியன், சந்திரன், விஷ்ணு ஆகியோர் அடிமை கொள்கின்றான் சூரன் தேவர்களைச் சிறையிலிட ஆணையிடுகிறான். பானுகோபன் அவர்களை சிறையிலிட தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சூரன் தொல்லையை பொறுக்க முடியாமல் சிவனிடம் முறையிட சிவபெருமான் முருகனையும் நவ வீரர்களையும் சூரனைக் கொல்ல அனுப்புகின்றனர். வழியில் தாரகனையும் அவனது மழையையும் அழிக்கின்றார் முருகன்.
தாரகன் மகன் அசுரேந்திரன் சூரனிடம் தன் தந்தை மரணம் பற்றி குறிப்பிடுகின்றான். வீரவாகு சூரன் அவையை அடைந்து தர்க்கம் நடத்துகின்றார். முடிவில் வீரவாகு வச்சிரவாகுவைக் கொன்று நகரை அழித்து முருகனை அடைகின்றார். இப்பகுதியில் அழிந்த நகர் பிரம்மாவால் மீண்டும் சரி செய்யப்படுகின்றது. சிங்கமுகன் சூரனுக்கு அறிவுரை கூறுகின்றான். அதனை ஏற்காத சூரன் பானுகோபனைப் போருக்கு அனுப்புகிறான். பானுகோபனுக்கும் வீரவாகு தேவருக்கும் சண்டை நடைபெறுகின்றது. இறுதியில் பானுகோபன் கொல்லப்படுகிறான். பானுகோபன் மாண்டது அறிந்த சூரன் புலம்புகின்றான். சிங்கமுகன் போருக்குப் புறப்படுகிறான். வீரபாகு தேவருக்கும் சிங்கமுகனுக்கும் கடும் சண்டை நடைபெறுகிறது. சிங்கமுகன் வீரவாகுவதையும், பூதரையும் மாயையால் கட்டி உதயகிரிக்கு அப்பால் தள்ளி விடுகின்றான். அதன் பின்னர் முருகன் சிங்க முகனோடு போரிட்டு அவனை கொள்கின்றார். சிங்கமுகன் இறந்ததை கேட்டுச் சூரன் புலம்புகின்றார். பின்னர் சேனைகள் புடைசூழ யுத்த களத்திற்கு விரைகிறான். இதேபோல் நாரதர் மூலம் செய்தியறிந்த முருகன் நவவீரர்கள், பூதகணங்கள் புடைசூழ போருக்குப் புறப்படுகின்றார்.
முதலில் வீரவாகுத் தேவருக்கும் சூரனுக்கும் போர் நடைபெறுகின்றது. இதில் சூரன் வீரவாகுவை அறைந்து வீசி விடுகின்றான். இதற்குப் பின்னர் முருகனுக்கும், சூரனுக்கும் நேரடிப் போர் நடைபெறுகின்றது. இறுதியில் சூரசம்காரம் நிகழ்கின்றது.
சூரசம்காரம் முடிவில் முருகன், மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும் சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்த புராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும் சூரனை அழித்த முருகப்பெருமானின் விரதம் முருகன் சூரனை சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விழாவாகும்.
நிகழ்த்துகையும், ஆட்டமுறைமையும்
சூரன்
சூரன் போரிலே சக்கரத்தில் நிறுத்திய சூரன், சக்கரத்தில் நிறுத்தாத சூரன் என இரண்டுவகையுண்டு. சக்கரத்தில் நிறுத்திய சூரன் இங்கு ஆட்டத்திற்கு உகந்ததாக காணப்பட்டது. இந்த சூரனை ஆட்டும்போது கம்பீரம் தோன்றும். அதுவே மற்றயதைக் காட்டிலும் கலைத்துவமாக மக்களை ஈர்த்துவைக்கக் கூடியது. சூரனனின் ஒரு கை மடித்து சக்கரமேந்தும், மறுகை ஆயுதம் ஏந்தும் அதுவே போருக்குரியது. இவ் ஆட்டக்கலையிலே பங்கு கொள்வோர் உடல் வலிமையானோர்களாக இருத்தல் வேண்டும். கொம்புகளை (காவாங்கு , திருவாத்தி) கைகளினால் பிடித்து ஆட்டுவதினால் கைகளுக்கு சிறப்பான பங்கு இங்குண்டு.
ஆட்டமுறை
சூரனை ஆட்டும்போது சூரனுடைய புயபராக்கிரமம் அவனுடைய மாயா சக்தி முதலியன புலப்படக் கூடியதாக ஆட்டங்களை நெறிப்படுத்தி ஆடிவந்தனர். சூரன் ஆட்டத்திலே இரண்டு விதமான ஆட்டங்கள் உண்டு. ஒன்று பொதுவான ஆட்டம், இன்னொன்று சிறப்பாட்டம். சூரன் தலைகளைப் பொறுத்து ஆட்டங்கள் அமையும். பொது ஆட்டங்கள் எல்லாத் தலைகளுக்கும் பொதுவாகத் தலைகளை மாற்றியவுடன் ஆட்டப்படும். இவ் ஆட்டங்கள் வழமை போலவே காணப்படும். இவ்வாட்டங்களின் போது வாள், வில், கதாயுதம், என்பன மாற்றப்படுகின்றன. சக்கராயுதம் தடுப்பாயுதம் ஆகும். இது மாற்றப்படுவதில்லை . மறுகையிலே இருக்கும் ஆயுதங்கள் தான் மாற்றப்படுகின்றன. தலைகள் வீழ்த்தப்படும் நேரங்களில் ஆட்டம் விறுவிறுப்படையும். சிறப்பாட்டங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு தலைக்குரிய ஆட்டங்களாகவும் அமைகின்றன.
இந்நிகழ்விலே முதலிலே கஜமுக சூரன் ஆட்டத்தைத் தொடருவான். இங்கு சூரனைக் காவுவோர் சூரனை வலம், இடம் என கைளிலே தாங்கி சரித்துப்பிடித்தவண்ணம் முருகனை வலம் வருவர். சூரன் பாசாங்கு செய்வதைப்போல இவர்கள் காவாங்குகளோடு கூடிய சூரனை தோழிலே சுமந்து பாசாங்கு செய்வர். கைகளால் தூக்கி எறிந்து, பிடித்தும், சரித்தும், நிமித்தியும் பல கோணங்களில் வித்தைகளை செய்வார்கள். கஜமுக சூரனை முதலிலே கொண்டு வந்து ஆட்டும் போது யானைக்குரிய இயல்புத்தன்மைகளைக் கொண்டு அவ்வாட்டங்கள் ஆடப்படுகின்றன. நேரே ஓடுதல், அசைந்து அசைந்து ஓடுதல் போன்ற ஆட்டங்களை வகுத்து ஆடி வந்தனர். அடுத்ததாக சிங்கமுகன் தலையைப் போட்டு ஆடும் போது சிங்கத்தின் வேகமும், ஆவேசமும், பாய்ச்சலும் ஆட்டுவோரின் செய்கையிலேயும் காணப்பட்டது. இங்கு ஆட்டம் வீரம் மிகுந்தாகவும் ஆவேசம் விறுவிறுப்பு உடையதாகவும் காணப்பட்டது. சில ஆட்டமுறைகள் ஆட்டப்படும் தன்மையினைக் கொண்டும் வகுக்கப்பட்டுள்ளது.
வள்ள ஆட்டம்
கடலிலே வள்ளம் எப்படி ஆடுமோ அதைப்போலவே சூரனை இடம் வலமாக ஆட்டிவரும் முறையாகும். கைகளைப் பதித்து கைகளிலே சூரனை ஏந்தி தாலாட்டுவதைப் போலவும், கால்களை அங்கும் இங்குமாக வைத்து தாமும் வள்ளத்தினைப் போல ஆடி வருவர்.
ஓட்டக ஆட்டம்
இவ் ஆட்டமானது சிறப்பு ஆட்டவகைகளுக்குள் அடங்கும் ஒரு ஆட்டவகையாகும். "இவ் ஆட்டத்தை ஒருவர் தோழ் மீது ஒருவர் அமர்ந்தவாறோ அல்லது ஒருவரது தோளின் மீது ஒருவர் நின்றவாறு சூரனை அதற்கு மேலே வைத்து ஆடும் முறை இதுவாகும். இவ்வாட்டத்தினை எட்டுபேர் மட்டுமே நிகழ்த்துவர் இவ் அட்டத்திற்கு கூடிய மனித வலு தேவைப்படுகின்றது.
தனி ஆட்டம்
தனி ஆட்டம் என்பது நான்கு பேர் மட்டும் ஆடும் ஆட்டமாகும். சூரனை நான்கு பேர் மட்டும் தோளிலே காவி ஆடிவருவர். தமது உடல் நிலைக்கு ஏற்றவாறு தாளத்திற்கேற்ப ஆடலையும் நிகழ்த்துவார்கள்.
வட்டம் போடுதல்
முன் தலை கொம்பை ஒரு சாரார் நிலத்திலே பதித்து ஊன்றி பிடிக்க பின் பக்க கொம்பினைப் பிடிப்பவர்கள் உயர்த்தி சூரனை சுற்றுவதன் ஊடாக நிலத்தில் வட்டம் கீறுதல் இது பின் தலைக்கொம்பிற்கும் இடம்பெறும். பார்ப்பதற்கு சுவாரஸ்யமான முறையிலே காணப்படும்.
சரிவாட்டம்
ஒரு பக்கத்தில் நிற்போர் கைகளிலே பதித்து தாங்க மறுபக்கத்தில் இருப்போர் தண்டை உயர்த்தி தலைக்கு மேலே பிடிக்க சூரன் சரிந்த வண்ணம் முருகப்பெருமானை சுற்றி வருதல் இவ் ஆட்டமாகும்.
நேராட்டம்
முருகனுக்கு நேரே சூரனைக் கொண்டு ஓடிச் சென்று திரும்பி பின்தலைக் கொம்பு பக்கமாக திருப்பி ஓடுவார்கள். இவ் ஆட்டம் அனைத்து தலைகளுக்கும் ஆட்டப்படும் பொதுவான ஒரு ஆட்டமாக காணப்படுதல்.
வளைவாட்டம்
வளைந்து நெளிந்து முருகனை சுற்றி ஆடும் ஆட்டம் இதுவாகும். முதலில் முன்பக்கத்தாலும் பிறகு பின்பக்கத்தாலும் வளைப்பதன் ஊடாக இதனை நிகழ்த்துவர். கொம்பு பிடிப்போர் இதனை நெறிப்படுத்தி வலம் இடம் என ஏனையோரை திரும்ப வைப்பர்.
சிறப்பாட்டம்
சிறப்பாட்டத்தின் உள்ளே சூரனின் கொம்புகளை கையிலே பதித்து ஏந்தி எண்ணிக்கை வைத்து சூரனை எறிந்து பிடித்தல் இவ்ஆட்டமாகும். முதலிலே எத்தனை தரம் எறிந்து பிடித்தல் என்பதை தீர்மானித்துவிடுவார்கள் அதற்கு ஏற்ப கொம்புகளை எரிந்து கைகளில் சூரனை ஏந்துவார்கள்.
தோப்புக்கரணம் போடுதல்
சூரனை கைகளில் ஏந்திக் கொண்டு அவர்கள் தாம் தீர்மானித்த எண்ணிக்கையை கொண்டு எண்களை உச்சரித்தவாறு நிலத்திலே இருந்து தோப்புக்கரணம் போடுவதை போல எழுவார்கள். இத்தோப்புகரணம் ஒன்றிலிருந்து நூறு தடவை கூட இடம்பெறும்.
ஆற்றுகையை வழிநடத்துவோர்.
இவ்வாறான ஆட்டங்களின் போது காவுதடியின் முன், பின் புறங்களில் இருவர் வழிநடத்துபவர்களாகக் காணப்படுவர். அவர்கள் தான் ஆட்டத்தை எங்கு நிறுத்துவது, எங்கு தொடருவது எந்த திசையில் நகர்த்துவது என ஏனையோருக்கு அறிவுறுத்துபவர்களாக காணப்படுவர். ஆட்டத்தினை மாற்றும் போதும், அடுத்து என்ன செய்யப் போகின்றோம். எந்த எந்த ஆட்டங்களை நிகழ்த்தப் போகின்றோம் என்பதையும் கூடித்திட்டமிடுவர். கொண்டு வழிநடத்த குழுவிலே சிலர் காணப்படுவர். விறுவிறுப்பு, வேகம் என்பவற்றைக் கூட்ட அடுத்தடுத்து ஆட்டங்களை மாற்றும் போது அவர்கள் தொடர்ந்து வழிநடத்துவோரின் வழிகாட்டலில் செயற்படுவார்கள்.
சூரன் ஆட்டக்காரர்கள்
"இங்கு சூரனைக் காவுவோர் தம்மை அறியாமலே சூரர்களாக வெறி கொண்டு நிகழ்த்துவர்" சூரன் போருக்கான ஆட்டங்கள் தற்பொழுது வகுக்கப்பட்டவை அல்ல. அவை முன்னர் தொட்டு நிகழ்த்தப்படுகின்றது. தற்காலத்தில் இளைஞர்கள் தமது விருப்பத்திற்காகவும், தமது பலத்தைக் கொண்டும் சிலசில ஆட்டங்களை வகுக்கின்றனர். சூரன் ஆட்டத்திற்கு ஆட்பலம் மிகவும் தேவை இதில் பதினெண்மர் தேவைப்படுகின்றனர். இருவர் தீவட்டி பிடிக்கின்றனர். ஆட்டத்திற்கு ஏற்ப அங்கும் இங்கும் தீவட்டி பந்தங்களைக் கொண்டு கீழும் மேலும் பந்தங்களை அசைத்து சூரனின் உடம்பினை மின்னலிடச் செய்வர். சக்கரத்தின் பின் சூரன் பிடத்தில் நின்றாட்ட ஒருவர் இவர் எந்த நிலையினையும் சுதாகரிக்கக் கூடிய சுயம் உடையவராக இருத்தல் வேண்டும். ஆட்டத்தின் போது தன்னை நிலைநிறுத்தக் கூடியவராக இருத்தல் வேண்டும். கால்களை உறுதியாக பிடத்தின் மேல் பதித்து நிலைகொள்ளச் செய்திருப்பார். ஆட்டங்களுக்கு ஏற்ப இவர் தனது உடலையும் சுதாகரித்துக் கொள்வார். இருந்தும், குனிந்தும், நின்றும், சரிந்தும் சூரனை இறுகப் பிடித்துக் கொண்டு மறுகையால் சூரனின் தலையினை அசைப்பார். சக்கரத்தை அசைத்துக் கொண்டேயிருப்பார். இது பார்ப்போருக்கு தனி கவர்ச்சியை வழங்கும் ஆட்டத்தின் போது இவரிடத்தே காணப்படும் துணிவானது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும். பக்கவாட்டில் சூரன் சரியும்போது முன்பக்கமும், பின்பக்கமும் மாறி மாறி தாழ்த்தி உயர்த்தப்படும் போதும் இவரின் அசைவுகள் உடலசைவுகள் பார்க்கும்போக்தே எமக்கே மெய் சிலிர்க்கும்.
சூரனை எண்ணிக்கை சொல்லி தூக்கி எறிந்து ஏந்துவார்கள் ஏந்தும் போது பீடத்தில் நிற்பவரும் சூரனுடன் சேர்ந்து போய் வருவார். கீழ் இருப்போர் காட்டும் வித்தைகள் அனைத்திற்கும் ஈடுகொடுக்கக் கூடியவாராகவே பிடத்தில் நிற்பவர் மனமும் உடலும் இருக்கும். இங்கு உடல்மொழி முக்கியமாகும்.
கொம்பு பிடிப்பவர்கள், இவர்கள் இருவர் முன்கொம்பு பிடிப்பவர், பின்கொம்பு பிடிப்பவர் ஆட்டத்தின் போது சூரன் சுழண்டு வருவதன் காரணமாக முன்கொம்பு, பின் கொம்பி பிடிப்பவர்கள் தான் பார்வையாளரை நுணித்தறிய வேண்டிய நிலை இருக்கும். கட்டளை இடுபவரே முன்கொம்பு பிடிப்பவராக இருப்பார். முன்கொம்புக்கு உரியவரே தலைவராக இருப்பார். இவரது கட்டளைக்கு ஏற்பத்தான் ஏனையோர் செயல்படுவதும் ஆட்டம் அரங்கேறுவதும் இடம்பெறும். மக்களால் புரிந்த கொள்ள முடியாத பதங்களையே இங்கு பயன்படுத்துகின்றனர். வழக்கமாக சூரன் ஆட்டத்தினை நிகழ்த்தும் இளைஞர்கள் அணியே பங்குபற்றுவதன் காரணமாக அவர்களுக்குள் சில சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கேற்ப கட்டளைகள் பரிமாறப்படும். இதனால் சூரன் ஆட்டுபவர்கள் தொடர்ந்து அடுத்ததாக என்ன செய்யப்போகின்றனர் என்பது மக்களுக்கு தெரியாமலே இருக்கும். தலைக்கொம்பை பிடிப்பவர், தலைக்கொம்பை மாத்திரம் பிடித்துக்கொண்டு செயல்படுவராக மட்டும் அல்லாமல் மாறாக ஏனையோருக்கு அறிவுறுத்துதல், ஆட்டத்தை மாற்றுதல் என ஏனைய பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் வலிமையுடையவராக இருப்பார். பின் தலைக்கொம்பியை பிடிப்பவர் கட்டளைக்கு ஏற்ப பின் பக்கத்திலே நிற்பவர்களை வழிநடத்திச் செல்வர்.
கட்டளைச் சொற்கள் பெரும்பாலும் மேலே நின்று சூரனின் தலையினை ஆட்டுபவருக்கும் இரு பக்க கொம்புகளைப் பிடிப்பவருக்கும் உதவுவதைக் காணலாம். கட்டளை பிறப்பிக்கப்பட்டவுடன் கொம்பு பிடிப்பவர்கள் யாவரும் தமது தோழிலே இருந்த கொம்பினை தமது கைகளில் பதித்துப் பிடிப்பார்கள். சூரனின் பிடத்தின் மேல் நின்றுகொண்டிருப்பவர் உடனே சூரனின் கையிலே காணப்படும் ஆயுதத்தை ஆயுதமேந்தும் ஒருவனிடம் விசுவார். அதே நேரம் ஆயுதம் வழங்குபர் சூரன் ஆட்டுபவரிடம் பிறிதோர் ஆயதத்தை விசுவார். அவ் ஆயுதத்தை பிடித்து சூரனின் கரத்திலே மாட்டிவிடுவார். இதனை தொடர்ந்து "அப்" என்ற கட்டளைவர கொம்பு பிடிப்போர் கொம்பினை தமது தோள்களுக்க எடுப்பர். இவற்றுக்கு எல்லாம் இங்கு உடல்மொழியே பயன்படுத்தப்படுகின்றது. கொம்புகள் தமது தோள்களுக்கு வந்தவுடன் விரதக்களையுடனும் அவர்கள் பலம் பெறுகிறார்கள் என்றே கூறவேண்டும். இவை அனைத்தும் நொடிப்பொழுதிலான செயற்பாடுகளாகவே காணப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்களைக் கொண்டுள்ளனர். இதற்கேற்பவே ஆட்டங்களும் நிகழ்த்தப்படுகின்றது.
மக்களும் நம்பிக்கையும்
பண்டைய சடங்குகளை போல சூரன்போரிலே வெறி கொண்டு சூரனை அவர்கள் ஆட்டும் போது தமது தீய குணங்கள் யாவும் விலகுவதாக கருதுகின்றனர். சூரன் என்னும் தீமையை முருகன் வதம் செய்வதானது தம் ஊரிலே உள்ள ஒட்டுமொத்த தீமைகளையும் சேர்த்து வதம் செய்வதாக தமக்கு தோன்றுவதாக கூறினர். இன்னொருவர் கூறுமிடத்து முருகன் தனது அசுரத்தன்மையினை நீக்கி தன்னை சுகப்படுத்துவதாக கூறினார். தாம் கேட்டதை எல்லாம் தருபவன், என மக்கள் அனைவரும் முருகனை தமது அன்னியேன்னிய உறவாகவும் அவன், இவன் என அழைத்தமையை காணக்கூடியதாக இருந்தது. அனைவரும் கூடி பங்கு கொண்டு தம்மை வெளிப்படுத்துவதில் அவர்கள் அதிகம் இங்கு குணமடைகின்றனர்.
முடிவுரை
இவ்வாறு தனித்தன்மைகளோடு கூடி தன்னுள் ஏராளமான பார்வையாளர்களைக் கொண்ட சடங்கு அரங்காக சூரன் போர் சடங்கு திகழ்கின்றது. உண்மையில் அரங்கு தன் தோற்றத்தில் மக்கள் சுதந்திரமாக திறந்தவெளியில் ஆடிப்பாடும் ஒரு கலையாக இருந்ததாக அரங்க மானுடவியலாளர்கள் கூறுவர். 'கார்சியா லோர்க்கா' கூறுகையில், "ஒரு நாட்டின் நாடகம் அதன் நிலவொளி மற்றும் அதன் மக்களுடைய மெய்யான வண்ணத்தை வசப்படுத்த கூடியதாக அரங்கு இருத்தல் வேண்டும்" என்கின்றார். காத்திரமான ஜனரஞ்சகமான வடிவங்கள் கெண்ட அரங்கு மக்களுக்கு தேவைப்படுகின்றது. அரங்கு தற்போது பல்வேறு வடிவங்களில் மாறிவிட்டது. பார்வையாளன் எவ்வளவு தூரம் திருப்திப் படுத்தப்படுகின்றான். தற்போதுள்ள அரங்குகள் எவ்வளவு தூரம் நோய் தீர்க்கும் பண்பை கொண்டிருக்கின்றன. என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. ஜனரஞ்சகமான அரங்கு எம்மிடம் காணப்பட்டால் எப்படி இருக்கும். நம்மிடையே காணப்படும் அரங்கானது தன்பால் குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர் கூட்டத்திலேயே திருப்திப்படுத்தும் முகமாக உருவாக்கப்படுகின்றது. நமது அரங்கினை பார்ப்பதற்கு எத்தனை பேர் முன் வருகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தொன்றுதொட்டு வழங்கிய பழமையான அரங்கு இசைக்கருவிகள், தன்னியக்கம், செய்கை, வெளிப்பாடு , பாடல், ஆடல் காரணமாக பார்வையாளனை வெளிக்கொண்டுவருது மட்மல்லாது அவர்களின் உள்ளக் கிடக்கைகளை எழவைத்து கைகால்களை எறிந்து ஆட வைத்து அவனை பங்காளனாக மாற்றி விடுகின்றது. அரங்கிலே கலை இணைப்பு எனும் போது அதிகமாக அத்தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. இன்று மனிதன் தனது செயலில் வளர்ச்சி கண்டு உலகமயமாக்கல் நாகரீக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனாலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பனவற்றோடு மாறாமல் பயணப்பட்டுக் கொண்டே வருகின்றான். எனவே மனிதன் செயல்கள் சடங்கில் மெய்நிலைப்பட்டதாகவும், வாழ்வியல் தேவைகளை நிறைவு செய்வதாகவும், அவனது கூட்டத்திலே உயர்ந்தான் பற்றிய நம்பிக்கையை கொண்டிருப்பதாலும், அவனை சுகப்படுத்துவதாகவும் அவனது பிணிகளை நீக்கி குணப்படுத்தச் செய்வதாகவும், ஜனரஞ்சக தன்மையுடன் காணப்படுவதாலும் மரபுகள் அவனோடு பயணப்பட்டு வருகின்றன.
மரபுரீதியான அரங்கிற்கு வருபவர்கள் தாமாகவே தம்மை வெளிப்படுத்துகின்றனர். பொதுவாக ஆடல் பாடல்கள் என்பது பண்டைய சமூக மக்களிடையே நிலவி வந்தது. இவர்களை ஆடல், பாடல்கள், செய்கைகள் என்பன வெளிப்படுத்தவும் குணப்படுத்தவும் செய்தது. மனிதன் ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் போது உடல் ரீதியாக தன்னை குணப்படுத்திக் கொண்டு தன் பிணிகளை போக்க முடியும். இவ்வாறான பிணி போக்கும் அரங்கு நமக்கு தேவையாக இருக்கின்றது. அவ் அரங்கில் ஜனரஞ்சக தன்மை, எல்லோரையும் ஒன்றிணைக்கும் தன்மை என்பவற்றை நாம் நிறுவ வேண்டும். எனவே நாம் மரபு ரீதியான அரங்குக்குள் மீளத்திரும்பாது விட்டாலும், மரபின் அம்சங்களை புகுத்தி அரங்கினை அளிக்கை செய்வதன் ஊடாக நாம் சமூகமாற்றத்துக்கான அரங்கத்தேடலை வளர்த்தெடுக்க முடியும்.
உசாத்துணை நூல்கள்.
1. சிவத்தம்பி . கா , " யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை " குமரன் புத்தக இல்லம், கெழும்பு, 2008
2. சிதம்பரநாதன். கா, "சமூக மாற்றத்திற்கான அரங்கு " சூர்யா அச்சகம், மெட்ராஸ், 1995
3. மதுசூதனன். தெ. ஜீவாகரன். ச, "அரங்கின் பரிமானங்கள் " விபரி மாற்று கலாசார
மையம், இராயகிரிய, 1997
4. வானமாலை. நா, "தமிழர் பண்பாடும் தனித்துவமும் " அலைகள் வெளியீட்டகம், சென்னை 2008
5. நாடகச் சிறபிதழ் , "ஓலை" கொழும்பு தமிழ் சங்கம், இதழ் 48 – 49 ஆடி-ஆவணி, இலங்கை, 2008