Skærmbillede 229- குழந்தை ம.சண்முகலிங்கம் -

அறிவூட்டி மகிழ்வைத் தருதல் கல்வியின் பணி, மகிழ்வூட்டி அறிவைத் தருதல் அரங்கின் பணி. கல்விக்கும் அரங்குக்குமிடையே காணப்படும் ஒற்றுமையும் வேற்றுமையும் இதுவே. இதன் காரணமாகவே கல்விச்செயற்பாடுகளில் அரங்கச்செயற்பாடுகளின் அவசியம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

செய்து கற்றல், செய்து, பிழை விட்டுத் திரும்பச் செய்து கற்றல், கூடிக் கற்றல்; கலந்துரையாடிக்கற்றல் ,  சவால்களை எதிர் கொண்டு பிரச்சினைகளை விடுவிக்கவும் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும் கற்றல்,  தலைமைக்குப் பணியக் கற்றுத் தலைமை தாங்கக் கற்றுக் கொள்ளுதல்,  பொது நலனுக்காகக் கூடி உழைக்கும் போது சுயநலத்தை முன்னிறுத்தாதிருக்கக் கற்றல், என இவையாவும் கல்வியினதும் அரங்கச் செய்வினைகளதும் விளைபயன்களாகும்.

 

மாணவராக இருந்து கல்வியைப் பெறும் வாய்ப்பு உலகில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதுண்டு. ஆசிரியராக இருந்து கல்வியை ஊட்டி அறிவினைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புச் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். ஆசிரியராகவும் இருந்து கொண்டு நாடக அரங்கச் செயற்பாடு களிலும் ஈடுபடும் வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டுவதுண்டு.

அத்தகைய வாய்ப்பு எமது பிரதேசத்தில் நீண்ட நெடுங்காலமாகவே ஒரு சில ஆசிரியர்களுக்கு இருந்து வந்துள்ளது. அவர்கள் தாம் வாழ்ந்த காலத்துக் கல்வி மற்றும் நாடக அரங்கு பற்றிய எண்ணக்கருக்களுக்கும் கோட்பாடுகளுக்கு மேற்பக் கல்விக்கூடங்களில் நாடக அரங்க நடவடிக்கை களை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பெறுபேறாகக் 'கல்வியியல் அரங்கு ' என்ற சிந்தனை எம்மத்தியில் முகிழ்க்கத் தொடங்கியது எனலாம்.

இச்சிந்தனை என்பது எண்ணிக்கருதித் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது என்று நாம் சொல்லிக் கொள்ள முற்படத் தேவையில்லை. இருப்பினும், ஒன்றை நாம் உறுதியாகக் கூறிக்கொள்ள முடியும். நாடக அரங்கக்கல்வி, அதாவது நாடகம், அரங்கம் பற்றிய அறிவினை முறையான கல்வி மூலம் பெற்றுக் கொள்ளுதல் என்பது, நாம் வாழ்ந்த பிரதேசத்தைப் பொறுத்த வரையில் ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளின் கடைக்கூற்றில் தான் கருக்கொண்டது. அந்த நாடக அரங்கக் கல்வியின் ஒரு பெறுபேறாகவே முதலில் 'சிறுவர் அரங்கு ' , 'சிறுவர் நாடகம் ' என்ற சிந்தனையும் செயற்பாடும் எழுந்தது. இதற்கு முன்னர் சிறுவர் ஆடிய நாடகங்கள் கல்விக்கூடங்களில் இடம் பெறவில்லை என்பது இதன் பொருளாகாது. அவை சிறுவர் அரங்கு என்ற எண்ணக்கருவைச் சரியாகப் புரிந்து கொண்டு நிகழ்த்தப்பட்டவையாகப் பெரும்பாலும் இருக்கவில்லை.

சில சந்தர்ப்பங்களில் அவை 'சிறுவர் அரங்க' வரம்புக்குள் நின்ற போதிலும், பெரும்பாலும் முதியவருக்கான அரங்கைச் சிறுவர் ஆடுவதாகவே அமைந்தன.

நவீன உலகின் பல சிந்தனைகளது பரவலாக்கம் போலவே, சிறுவர் நாடகம்,  சிறுவர் அரங்கம்,  என்ற சிந்தனையும் மேலைப் புலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்த போதிலும், எம்மைப் பொறுத்தவரையில், சிறுவர் அரங்க ஆற்றுகை முறைமை அல்லது மோடி என்பது எமது கலைவழி சார்ந்த பண்பாட்டுமயமாக்கலுக்கு உட்படுத்தப் பட்டது.

கீழைத்தேயப் பாரம்பரிய அரங்கின் மரபுத் தொடர்ச்சிக்கமைய எமது அரங்கப் பாரம்பரியமும் ஆடல், பாடல், என்பவற்றையும், அவற்றின் பயனாக வரும் , விளையாட்டுப் பாங்கான செய்து காட்டல் முறைமை யையும், கதை சொல்லும் முறைமையினையும் கொண்டதாக இருந்து வருகிறது. இந்த ஆற்றுகை, கலை, அழகியல் மரபு உள்ளடக்கத்தை நாம் எமது சிறுவர் அரங்கத் தயாரிப்புக்களில் சேர்த்துக் கொள்ளத் தவற வில்லை. இவற்றை அறிவு பூர்வமாகக் கருத்திற் கொண்டே நாம் சிறுவர் அரங்கின் பிரதான பண்புகளாக ஆடுதல், பாடுதல், விளையாடுதல், கதை சொல்லுதல் என்பவற்றையும் வலியுறுத்தி வந்தோம். சிறுவர்தம் சுபாவத் தோடு மிகவும் நெருக்கமுடையனவாக மேற்கண்ட நான்கும் இருப்பதையும் எவரும் மறுக்கமாட்டார்.

மேலே கண்ட நான்கினையும் விட, எமது பாரம்பரிய அரங்கம் பார்வையாளரோடு நேரடியாகவே தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் மரபு முறைமைகளையும் கொண்டிருந்தது. கீழைத்தேய அரங்குகள் யாவற்றிலும் இப்பண்பும் இருந்து வந்துள்ளது.

ஆசிய மரபரங்கின் மேற்கண்ட பண்புகள் யாவற்றையும் யதார்த்தவாத அரங்கில் சலிப்புற்று, மக்களை விழிப்படையச் செய்யவும், விழிப்போடிருந்து அனைத்தையும் நடுநிலை நோக்கில் ஆராயவும், அறிவுபூர்வமாக அனைத்தையும் அணுகவும் தூண்டக்கூடிய ஒரு ஆற்றுகை முறைமையைக் கண்டறியக் காத்து நின்ற - பேர்ட்டோல்ட் பிறெஃட் போன்ற பல மேலைத்தேய நாடகவியலாளர்கள், கண்டதும் கைக்கொள்ளத் தலைப்பட்டனர். அவர்தம் அரங்கினை ஆய்வாளர்கள் 'போதனை அரங்கு'' எனவும் பெயரிட்டனர். காரணம், பார்வையாளருக்குத் தெளிவான அறிவினை சரியான முறையில் வழங்குவது அவ்வரங்குகளின் இலக்காக இருந்தது.

மேற்கண்ட அடிப்படையான கருத்து நிலைகளை அடியாகக் கொண்டே எமது பிராந்தியத்தில் சிறுவர் அரங்க முயற்சிகளை மேற்கொண்ட வர்கள், மகிழ்வோடும் குதூகலத்தோடும் இறுக்கமற்ற தளர்வு நிலையில் நின்றும், வாழ்க்கைக்கான கல்வியைப் பெற்றுக் கொள்ள எமது சிறுவர்களுக்கு உகந்த ஒரு அறிவூட்டல் சாதனமாக, எமது மரவுவழி வந்த அரங்க மூலகங்களையும் பண்புகளையும் உள்ளடக்கிய சிறுவர் அரங்க, ஆற்றுகைகளை அறிமுகப்படுத்தினர்.

சிறுவர் அரங்கத் தயாரிப்புக்களில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அக்கறை ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தவர்கள்தான் இன்று நாடக அரங்கக் கல்வியோடு சம்பந்தப்பட்டவர் களாகவும், கல்வியியல் நோக்கில் அரங்கினை முன்னெடுத்துச் செல்பவர் களாகவும், சமுதாய அரங்கு, கலந்துரையாடல் அரங்கு , திடீர் அரங்கு, கண்ணுக்குப் புலனாகாஅரங்கு , சடங்கரங்கு எனப் பல்வேறு வகையாக அமையும் பிரயோக அரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரங்கச் செயற்பாட்டாளர்களாக உள்ளனர். அவர்தம் அரங்க நடவடிக்கைகள் எத்தகையனவாகவும் எவ்வகையினவாகவும் இருப்பினும், அரங்கினூடே மக்களின் அறிவோடு கலந்த செயல் முனைப்புக்களை விருத்தி செய்வதே அவர்களது குறியிலக்காக இருந்து வருகிறது.

இதனிடையே, சிறுவர் அரங்கு பற்றியதொரு துர்ப்பாக்கியத்தையும் நாம் கருத்திற்கொண்டு, அதைப்போக்க ஆவன செய்வதும் அவசிய மாகின்றது. சிறுவர் அரங்கினை மட்டுமே தமது வாழ்நாள் பணியாகக் கொள்ளும் துணிவும் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் இதுவரை எம்மத்தியில் உருவாகவில்லை . அடுத்ததுக்குத் தாவுவதற்கு உதவுகின்ற ஒரு அடிக்கல்லாகவே நாம் அனைவரும் சிறுவர் அரங்கைக் கருதிக் கொள்கிறோம். நாடக அரங்க அறிவினைக் கற்றும் பயின்றும் அறிந்து அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் பலர் இருக்கும் இன்று எம்மில் ஓரிருவரேனும் "சிறுவர் அரங்கை" யே தொடர்ந்து கருத்திற் கொள்பவர் களாக இருப்பது நல்லது. பல்தொழில் புரிவதில் பயனில்லை; ஏதேனுமொன்றில் விற்பன்னராக இருப்பதே விரும்பத்தக்கது.

சிறுவர் அரங்கு வீரியம் மிக்கது; விவேகம் மிக்கதொரு மாணவர் சமுதாயத்தை உருவாக்க உதவுவது; ஆரம்பப்பாடசாலைக் கல்வியை அர்த்தமுள்ளதாகவும், ஆனந்தம் நிறைந்ததாகவும் ஆக்கத்துணைபுரிவது; ஆளுமை மிக்கதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பக் கூடியது. முளை யிலே கவனம் செலுத்தாது முற்றிய பின் கவனிப்பதில் பலன் அதிகம் வராது. சிறுவர் அரங்கில் அரசியல்' இல்லை . அதனால்தான் நாம் அதில் நிலைத்து நின்று பணிபுரிய விரும்புவதில்லை போலும்.

''எழுத்துரு வடிவம் பெறாத ஆற்றுகை வார்த்தைகள் " என்பது ஒரு பின்நவீனத்துவகால அரங்கச் சிந்தனை எனப் பலர் எண்ணிக்கொள்கின்றனர். ஆயினும் உலக அரங்க வரலாற்றில் புத்தளிப்புச் செய்யப்படும் நாடக ஆற்றுகைகளும் முக்கியமானதொரு இடத்தினைப் பெற்று வந்துள்ளன. எமது தமிழ் அரங்கிலும் எழுத்துருவாக்கம் பெறாத நாடக ஆற்றுகை மரபொன்று அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.


அவ்வாற்றுகை முறைமை இரண்டு முறைமைகளில் மேற் கொள்ளப்படும். கருவையும் பேசப்படவேண்டிய விஷயங்களையும் ஓரளவுக்குத் தமக்குள் கலந்துரையாடிவிட்டு நடிகர்குழு மேடையேறி, முற்றிலும் புத்தளிப்பு முறைமையில் அமைந்ததொரு நாடக ஆற்றுகையை நிகழ்த்தி முடிப்பர் இது ஒரு வகையாக அமைந்தது. இரண்டாவது முறைமையைப் பொறுத்த வரையில், முன்னையதைப் போலவே கதை, கதைப்பொருள், பாத்திரங்கள், நிகழ்வுகள் என்பன கலந்துரையாடல் மூலம் தீர்மானிக்கப்பட்டு பின்னர் புத்தளிப்பு முறைமையில் வார்த்தைகள், செயல்கள், அசைவுகள், பாத்திரப் படைப்பு என்பவற்றையும் பல ஒத்திகைகள் மூலம் வளர்த்தெடுப்பர். ஒவ்வொரு பகுதியும் புத்தளிப்புச் செய்யப்பட்டுப் பின்னர் அது பற்றித் தம்முள் கலந்துரையாடி, மீண்டும் செய்து பார்த்துப் பின்னரும் கலந்துரையாடி என்ற படிமுறையில் ஆற்றுகை பாடத்தை உருவாக்கிக்கொள்வர். இதற்கான ஒத்திகைகள் ஏறக்குறைய ஒரு மாதம் வரை மேற்கொள்ளப் படும்.

இத்தகைய நாடகங்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையே பேசும், அவற்றின் தொனி மகிழ்நெறிப்பாங்கானதாகவே பெரும்பாலும் இருக்கும். காத்திரமான விஷயங்களை விளையாட்டு விநோதப்பாங்கான தொனியில் நிகழ்த்துதல் என்பது இதன் ஆற்றுகைப் பண்பாக அமையும்.

மேற்கண்ட ஆற்றுகை முறைமையில் (குறிப்பாக இரண்டாவது வகை ஆற்றுகையில்) இருபத்தைந்து முப்பது வருட அனுபவம் பெற்றவர்கள் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் பாடசாலை அரங்கில் (இடை நிலைப்பாடசாலை ) அக்கறை செலுத்த முற்பட்ட போது ஆற்றுகை யில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் கலந்துரையாடல் மூலம் ஆற்று கைக்கான எழுத்துருவை ஆக்கிக்கொள்ளும் முறைமையை ஏற்படுத்திக் கொண்டனர்.

பாடசாலை அரங்க முயற்சியில் ஈடுபட முற்பட்ட ஆரம்பகாலங்களில் நாடக அரங்கச் செயற்பாட்டில் ஆர்வமுள்ள பாடசாலை ஆசிரியர்களுடன், ஆற்றுகை செய்யப்பட வேண்டிய நாடகத்தின் கரு பற்றியும் அக்கருபற்றி அவர்கள் கொண்டுள்ள கருத்துக்கள் பற்றியும் கலந்துரையாடி அவர்களது விருப்பங்களுக்கமையவே நாடகக் கருப் பொருளைத் தெரிவு செய்வதும், கதைப் பொருள்களைக் கூறுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே இருந்து நாடகத் தயாரிப்பை மேற்கொள்ளச் செல்பவர்களுக்கும், நாடகத்துக்குப் பொறுப்பாக உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்குமிடையில் கருத்தொற்றுமையும் நாடக ஆற்றுகையில் ஆர்வமும் பிறந்தது.

மேடையேற்றத்துக்கான ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும் போது மாணவர்களோடும் நாடகத்தின் கரு பற்றியும் அதோடு சம்பந்தப்பட்ட ஏனைய விஷயங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடும் வழமை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. அரங்க விளையாட்டுக்கள், களப்பயிற்சிகள், கலந்துரையாடல்கள் என்ற வகையில் மாணவர்களது சுதந்திரமான சிந்தனையோடும் செயற்பாடுகளோடும் தான் ஒத்திகைகளும், நாடகத் நயாரிப்பின் ஏனைய அம்சங்களான வேட உடுப்பு, காட்சி அமைப்பு , ஒப்பனை, இசை என்பனவும் தீர்மானித்துக் கொள்ளப்பட்டன.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக உயர்வகுப்பு மாணவர்களோடு கலந்துரையாடி நாடகத்தின் கருவும் கதைப்பொருள்களும் முடிவு செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் முதலில் தம்முள் உரையாடிக் கருவினைத் தெரிவு செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடுவர். அடுத்து தெரிவு செய்யப்பட்ட கரு சம்பந்தமாகப் பேசப்படவேண்டிய விஷயங்கள் பற்றி மாணவர்கள், ஏனைய மாணவர்களோடும், வேறு ஆசிரியர் களோடும், சமூகத்திலுள்ள பலதரப்பட்டவர்களோடும் கலந்துரையாடிக் கருத்துக்கள் சேகரிப்பர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட கருத்துக்களோடு மாணவர்களும் ஆசிரியர்களும், நாடகத்தை எழுதப் போகின்றவரையும், நாடகத் தயாரிப்பில் உதவப் போகின்றவர்களையும் சந்திப்பர். இத்தகைய சந்திப்புக்கள் பல இடம் பெறும். அவற்றில் மாணவர் சேகரித்துள்ள விஷயங்கள் பற்றிய விவாதங்களும் கருத்துப் பரிமாறல்களும் இடம் பெறும். இந்தவாறு திரட்டிக் கொள்ளப்படும் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு நாடகம் ஒருவரால் எழுதப்படும். அந்நாடகம் ஒருவரால் எழுதப்பட்ட போதிலும், அது பேசுகின்ற விஷயம் பலராலும் பேசித் தீர்மானிக்கப்பட்டதொரு விஷயமா கவே இருக்கும்.

இவ்வாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட மாணவர்களே நடிப்பிலும் நாடகத்தயாரிப்பிலும் ஈடுபடுவதால் அவர்களது பங்கு கொள்ளலும் ஆர்வமும் மிகவும் உச்ச நிலையில் இருக்கும். மேலும், தாம் நடிக்கும், மேடையேற்றும் நாடகமானது வெறுமனே கற்பனையில் உதித்த ஒன்றல்ல, அது தம்மால் இனங்கண்டறியப்பட்ட சமூகப்பிரச்சினைகளில் ஒன்று என்பதை மாணவர் உணர்ந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்றனர்.

மேற்கண்ட முறைமை பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கைக்கொள்ளப்பட்டு வந்தமையால், இது மாணவர்களாலும் ஆசிரியர்க ளாலும் விரும்பப்பட்ட ஒரு நடவடிக்கையாக அமைந்தது. அடுத்த ஆண்டின் நாடகத்துக்காக அவ்வாண்டுக்குரிய மாணவர் ஆவலோடு காந்நிருக்கும் நிலை ஏற்பட்டது. இந்தவாறு நாடக ஆற்றுகையானது பாடசாலைச் சமூகத்தினதும், பெற்றோரினதும் ஏனைய பார்வையாளரினதும், நாடக ஆர்வலர்களினதும் ஆவலோடு கூடிய எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது.

இந்தவாறு, மாணவர்களது கூடுதலான ஈடுபாட்டோடும் ஒத்துழைப் போடும் நாடக எழுத்துருவாக்கமும் மேடையேற்றமும் இடம் பெற்று வந்தமையால், மாணவர்கள் தமது பிரச்சினைகளையும், குடும்பங்களின் பிரச்சினைகளையும், சமூகத்தின் பிரச்சினைகளையும், தெளிவாக அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை இனங்கண்டு அறிந்து கொள்ளவும் கற்றுக் கொண்டதோடு, தமது பிரச்சினைகள் எவ்வாறு நாடகம் என்ற வடிவில் உருப்பெறுகிறது என்பதையும் அறிந்து கொண்டனர். இந்தவாறு சில மாணவர்ளும் ஆசிரியர்களும் நாடகம் எழுதவும் ஆரம்பித்தனர். நாடக நடவடிக்கையில் ஈடுபடும் யாவரும் நாடகம் எழுத முடியும் என்ற துணிவினை, இத்தகைய அரங்கத் தயாரிப்புக்களே பல இளம் நாடக ஆர்வலர்களுக்கு வழங்கின என்பது மறுக்க முடியாத உண்மையாகும். நாடக வடிவமும் இதற்குத் துணைபுரிந்தது.

மேற்கண்ட சிறுவர் நாடகங்கள் மற்றும் இடைநிலைப் பாடசாலை அரங்கத் தயாரிப்புக்கள் என்பவற்றைப் பார்த்த மாணவர்கள் மனமகிழ்வையும், புதிய அறிவையும், அழகியல் நயப்பில் அனுபவத்தையும், தாமும் இத்தகைய அரங்க நிகழ்வுகளில் பங்குகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும், மேலும் நாடக நிகழ்வுகளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் பெற்று வந்தமையை நாம் அவதானிக்க முடிந்தது. மேலும், சிறுவர் நாடக ஆற்றுகைகளைப் பொறுத்தவரையில் காலப்போக்கில் அத்தகைய ஆற்றுகைளில் பார்வையாளர்களாக வரும் மாணவர்தம் பங்குகொள்ளல் என்பது வரவர அதிகரித்தே வந்துள்ளது.

பாடசாலைகள் சிறுவர் நாடகம் மற்றும் இடைநிலைப்பாடசாலை அரங்க ஆற்றுகைகள் என்பவற்றில் பங்கு கொண்ட மாணவர், அதன்பின்னர் முன்பைவிடக் கல்வியிலும், பாடசாலையின் ஏனைய கருமங்களிலும் கூடியளவு ஆர்வத்தோடு ஈடுபட ஆரம்பித்ததை எங்கும் காணமுடிந்தது. முன்னர் படிப்பிலும், பாடசாலை நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டாதிருந்த பல பிள்ளைகள் இரண்டிலுமே ஆர்வம் கொள்ளத் தொடங்கியதைப் பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் அவதானித்தனர். அரங்க அனுபவம் அவர்களுக்குத் தன்னெடுப்பூக்கத்தைத் தந்துள்ளது.

அரங்க ஆற்றுகைகளின் தயாரிப்புப் படிமுறையின் போது அதில் பங்கு கொள்ளும் பல மாணவர்களில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிந்தது. கூச்ச சுபாவமுள்ளவர் அதிலிருந்து விடுபட்டனர்; கதைப்பதற்குப் பின்னின்றவர்கள் சரளமாகக் கதைக்க முற்பட்டனர்; ஆடப்பாட அஞ்சியவர் ஆடினர், பாடினர், எதிலுமே தன்னையே முன்னிலைப்படுத்தி நின்ற பலர் ஏனையோருக்கும் விட்டுக் கொடுக்கும் கட்டுப்பாட்டொழுங்கு நிலைக்கு வந்தனர்.

கல்வியியல் அரங்கிலும், ஏனைய சமுதாய அரங்கிலும் ஈடுபட்டு வந்த சில இளைஞர்கள், இதற்கு முன்னர் தமது படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, என்ன செய்வதென்று தெரியாது சும்மா இருந்து வந்தவர்களாக இருந்தனர். அவர்களில் பலர், இத்தகைய அரங்க நடவடிக்கைளில் ஈடுபட்ட பின்னர், தன்னம்பிக்கை பெற்று, நாடக அரங்கக் கல்வியைப் பெறுவதில் ஆர்வங்கொண்டு பல்கலைக்கழகத்துள் பிரவேசம் பெற்று அத்துறையில் பட்டம் பெற்று ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் இருப்பதோடு அரங்கச் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டும் வருகின்றனர்.

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறுகளிலிருந்து கல்வியியல் அரங்கு என்பது பல்வேறு புதிய பாதைகளிலும் செல்ல ஆரம்பித்தது. நாடகக்காரர், ஆசிரியர், மாணவர் என்ற கூட்டு முயற்சி விரிவடைந்து, மேற் கண்ட மூன்று சாராரோடு காட்சியமைப்பில், ஒப்பனையில் வேட உடுப்பு விதானிப்பில் உதவக்கூடிய ஓவியக்கலைஞர்கள், இசையமைப்பில் வல்ல இசைக்கலைஞர், நடன அமைப்புக்களில் வல்ல நடனக்கலைஞர் என்போரும் கூட்டுச் சேர்ந்து தயாரிப்பில் ஈடுபடும் சில ஆற்றுகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அத்தகைய ஒத்துழைப்புக்கள் எல்லாத் தயாரிப்புக்களிலும் தொடர்ந்து இடம் பெற்றன எனக் கூறமுடியாது. மனித இணக்கமே இதற்குக் காரணம் என்று மட்டுமே கூறமுடியும்.

இனமோதல், உள்நாட்டுயுத்தம் என வளர்ச்சியுற்றதன் பேறாகப் பல அவலங்கள் மலியத்தொடங்கின. யுத்தத்தால் விளைந்த அவலங்களை அனுபவித்து வந்த பலருக்கு அறிவினையும், நம்பிக்கையையும், விழிப்பினையும் ஊட்டவேண்டிய பொறுப்பு அரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் தம் கடமையாகவும் அமைந்தன. அகதி முகாம்களில் சுகாதாரம், ஒழுக்கம், கல்வி வளர்ச்சி, தன்னம்பிக்கை என்பவற்றை ஏற்படுத்தவும், யுத்த வடுக்கள் எனவரும் உளப்பாதிப்புக்கள் பற்றிய அறிவினை ஏற்படுத்து வதற்கும், புதிய சூழல்களில் எழும் பிரச்சினைகளையும் அப்பிரச்சினை களைப் புதிய முறையில் அணுகுவதற்குத் தடையாக இருக்கும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் இனங்கண்டு நல்லதைச் செய்வதற்கான வழிமுறைகளைத் தேடுவதற்கும் உதவும் ஆற்றுகைகளும், களப் பயிற்சிகளும், பாகமாடுதல்களும் மற்றும் அரங்கச் செயற்பாடுகளும் பல்கிப் பெருகி வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றோடு, இன்று யுத்தம் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் உயிராபத்தையும், ஊனத்தையும் ஏற்படுத்தக்கூடிய மிதி வெடிகள் பற்றிய விழிப்புணர்வுகளும் அரங்க ஆற்றுகைகள் மூலம் பரவலாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மேலும், நெருக்கீடுகளின் மத்தியில் வாழும் சின்னஞ் சிறுவர் மத்தியில், சிறுவர் பெருமளவில் பங்கு கொள்ளக் கூடிய முறையில் அமையும் சிறுவர் அரங்க நடவடிக்கைகளின் அவசியம் மேலும் உணரப்பட்டுள்ளது.

பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சமுதாய மட்டத்தில் பல்வேறு நிலைகளிலும் கல்வியியலாக அரங்கு பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் எவரும் ஏதாவதொன்றில் விசேட கவனம் செலுத்தும் நிலை இன்னமும் இங்கு ஏற்படவில்லை. சிறுவர் அரங்கை மட்டும் செய்து வருவோரென்று எவரும் இல்லை. எல்லோரும் எல்லாவகை அரங்கு களிலும் ஈடுபட்டுவருவதால் எவையும் ஒழுங்காக வளர்ச்சிகாணும் நிலையில் இல்லை. அரங்கு தொழில் முறை அரங்காகவும் வளரவில்லை .

சடங்கு, சன்னதம், உளவியல் எனநின்று அவ்வெல்லைக்குள் மட்டும் செயலாற்ற முற்படுபவர்களும், அத்துறையில் ஆழமான அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முற்படாதும் அத்துறை சார்ந்த நிபுணர்களது அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ள முற்படாமலும் தமது கருமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இரு சாரார் மத்தியிலும் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்வரங்கக் கருமங்களில் இணைந்து செயற்படுவர்கள் இரண்டொரு வருடங்களில் விரக்தி கொண்டு வெளியேறி விடுகின்றனர். அவர்களது இடத்துக்குப் புதியவர்கள் வருகின்றனர். அவர்களும் முன்னையவர்களைப் போலவே விரைவில் சலிப்படைந்து விடுகின்றனர். இதைப்போலவே, இவர்கள் தமது கருமங் களை எங்கெங்கு சென்று மேற்கொள்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு தெளிவற்ற குழப்பநிலை எழுவதைக் காணமுடிகிறது. சூழலின் யதார்த்த நிலைமையைக் கருத்திற் கொள்ளாது விதேசியச் சூழல்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவங்களை இங்கு புகுத்த முற்படுவதாலேயே இந்த நிலைமை எழுகிறது. பிள்ளைகளைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்து விடுகிறோம் எனக் கருதிக்கொண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு விடுவித்துவிட்டு அவர்கள் சமூகத்தோடு ஒட்டமுடியாத அளவுக்கு "விடுதலை"யாகி விடுவதால் மக்கள் மத்தியில் புதிய சிக்கல்கள் எழுகின்றன.

இன்று உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களே மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்காகச் சிந்திக்கின்ற பொறுப்பினை ஏற்றுள்ளன. திட்டங்கள் தயாரிப்பதும் அவற்றுக்கான பெருநிதிகளைப் பெற்றுக் கொள்வதும் ஒரு கலையாக வளர்ந்து விட்டது. இதனால் பலரது சுயசிந்தனையும் கொள்கைப்பிடிப்பும் பணத்துக்கு விலைபோய் விடுகின்றன. அதிகாரமும் மிதமிஞ்சிய அதிகாரமும் மட்டுமல்ல, பணமும் மிதமிஞ்சிய பணமும் மனிதரைக் கெடுக்கும், மிதமிஞ்சிக் கெடுக்கும். கல்வியியல் அரங்க முயற்சிகள் பலவும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

கல்வியியல் அரங்கு என்பது மிகப் பரந்ததொரு பரப்பினுள் கிளை விரித்து விழுது விட்டு நிற்கும் ஒரு ஆலமரம் போன்றது. அது பல வடிவங்களிலும் பல முறைமைகளிலும் பல மோடிகளிலும் மேற்கொள்ளப் படுகிறது. அவை அனைத்துமே மேற்கொள்ளப்பட வேண்டியவைதான் - சில வேண்டத்தகாத தீவிரங்களைத் தவிர . ஆனால் அரங்கு ஒரு கலை வடிவம், கலைச்சாதனை என்ற வகையில் நின்று நிலைத்து வளர்வதும் மிக அவசியமான ஒன்றாகும். அரங்க அழகியலை நயக்கும் வாய்ப்பினையும், அந்த நயப்பின் மூலம் வரும் அனுபவத்தைப் பெறும் உரிமையினையும் நாம் அனைவருக்கும் தொடர்ந்து வழங்கிவரவேண்டும். அப்பொழுதுதான் அழகிய மனங்களைக் கொண்டதொரு மக்கள் சமூகம் வளரும்.

Skærmbillede 229

படம்:- நன்றி இணையம்

 

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click