நாடகம் போடுதல் என்பதற்கும், அரங்கு , அரங்கச்செயற்பாடுகள் என்பதற்கும் வேறுபாடு இருக்குன்றது. நாடகம் நிகழ்த்துதல் , அதன் அழகியல், ரசனை , வெளிப்பாடு ஒரு வகை. ஆனால் அரங்கு என்பதும் அதன் இயங்கு நிலையும், அழகியல், ரசனை, வெளிப்பாடு முறமையிலும் இன்னொரு வகை அதாவது சடங்கை ஒரு அரங்கு என்கின்றோம் அங்கு பூசாரியும், கடவுளும், பக்தர்களும் இருப்பார்கள் பக்திதான் அதற்குஅடிப்படை. இதன் தர்க்கபூர்வமான அல்லது விஞ்ஞான பூர்வமான ஒரு வளர்ச்சியே அரங்கு. இங்கு அரங்காடியும், பங்குபற்றுபவர்களும், காண்பியங்களும் இருக்கும். நம்பிக்கைதான் இதற்கு அடிப்படை. எமது பண்பாட்டுவேர்களில் இருந்தே அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு புத்துயிர் பெறுகின்றது.
இயற்கை அனர்தத்தினால் அல்லது போரினால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் அரங்க எண்ணக்கருக்களை செயற்படுத்துவதன் மூலம் அவர்களுடைய உடல், மன இறுக்கங்களில் இருந்து விடுவித்து, மகிழ்வித்து , பாதிப்பில் இருந்து மீண்டு எழுவதற்கான வழிகாட்டும் அரங்கே அவலநீக்க ஆற்றுப்படை அரங்கு என்கின்றோம்.
போரினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு கரையோரமக்களிடையே 2004/12 /26 ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இன்னும் பலமான பாதிப்புக்ளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், கோயில்களிலும், இன்னும் பலபொது இடங்களிலும் தஞ்சமடைந்து இருந்தார்கள். அவர்களுக்கு உடனடி உளவளத்துணை தேவைப்பட்டது அதனைக் கருத்தில் கொண்டு அம்மக்ளிடத்திலேயே அவலநீக்க ஆற்றுப்படை அரங்க செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
கலாநிதி க. சிதம்பரநாதனின் வழிகாட்டலில் யாழ்பல்கலைக்கழக நாடகமும் அரங்கியல் துறை மாணவர்களால் யாழ்ப்பாணத்தின் பொலிகண்டி முதல் குடத்தனை வரையிலும். முல்லைத்தீவு அரங்க செயற்பாடுக்குழுவினர் திரு . இளங்கோ அவர்களின் வழிகாட்டலில் கிளிநொச்சி, முல்லை வலய ஆசிரியர்களும் இணைந்து செம்பியன்பற்று முதல் செம்மலை வரையிலும். அரங்க செயற்பாட்டுக்குழுவின் திரு விந்தன் தலமையிலான அணியினர் திருகோணமலை , மட்டக்களப்புபகுதிகளிலும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
பெரும் பொருள் இழப்புக்கள், உயிர்இழப்புக்களை சந்தித்து தம்மளவில் உறைந்து, மனதளவில் சலிப்படைந்து , சோர்ந்து, பயந்து காணப்பட்ட இவர்களிடத்தில் அரங்கச்செயற்பாடுகள் ஒரு தளர்வை , கலகலப்பை, மகிழ்ச்சியை, ஏற்படுத்தியது.அத்தளர்வு நிலையில் இருக்கும் மக்களோடு இலகுவாக் கதைக்கவும், கதைகேட்கவும், பிரச்சனைகளைக்கண்டறியவும், பிரச்சனைகளில் இருந்து மீண்டெழுவதற்கான தீர்வுகளை அவர்களால் சிந்திக்கவும் முடிந்தது. இவ் அரங்கினை நகர்த்திச்செல்வோராக அரங்காடியும், பங்குபற்றுபவர்களும் காணப்படுவார்கள்.
இங்கு தான் நாடகம் போடுதல் என்பதற்கும், அரங்கு , அரங்கச்செயற்பாடுகள் என்பதற்கும் வேறுபாடு இருக்கின்றது. நாடகம் நிகழ்த்துதல் , அதன் அழகியல், ரசனை , வெளிப்பாடு ஒரு வகை. ஆனால் அரங்கு என்பதும் அதன் இயங்கு நிலையும், அழகியல், ரசனை, வெளிப்பாடு முறமையிலும் இன்னொருவகை அதாவது சடங்கை ஒரு அரங்கு என்கின்றோம் அங்கு பூசாரியும், கடவுளும், பக்தர்களும் இருப்பார்கள் பக்திதான் அதற்குஅடிப்படை. இதன் தர்க்கபூர்வமான அல்லது விஞ்ஞான பூர்வமான ஒரு வளர்ச்சியே அரங்கு. இங்கு அரங்காடியும், பங்குபற்றுபவர்களும், காண்பியங்களும் இருக்கும். நம்பிக்கைதான் இதற்கு அடிப்படை. எமது பண்பாட்டுவேர்களில் இருந்தே அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு புத்துயிர் பெறுகின்றது. இங்குதான் கலாநிதி கா. சிதம்பரநாதன் அவர்களின் அரங்கு பற்றிய சிந்தனைகள் , மற்றும் சமூகமாற்றத்திற்கான , தழைநீக்கத்திற்கான அரங்க செயற்பாடுகள் உயிர்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (கலாநிதி கா. சிதம்பரநாதன் அவர்களின்அரங்க கோட்பாடுகள், சிந்தனைகள் பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையிரையில் ஆராய்வோம்)
இவ்அரங்கின் மூலக்கூறுகள்
•அரங்காடி
•பங்குபற்றுவோர்
•அரங்க விளையாட்டுக்கள்
•நம்பிக்கை
•கதையாடல்/ கதைகேட்டல்
•போலச்செய்தல்/ பாத்திரம் ஏற்று நடித்துக்காட்டல்.
•சேர்ந்து செயற்படுதல்
• பறை முழக்கம்
அரங்காடி..
அரங்காடி என்னும் போது அரங்கில் ஆடுபவனாகவும் , பங்குபெறுபவர்களின் தூண்டல் துலங்கல்களுக்கு ஏற்ப அரங்கை நகர்த்திச் செல்வோனாகவும் காணப்படுவான். துறைசார் அறிவும், சமூக அறிவும் அவனுக்கு / அவளுக்கு அடிப்படை.
பங்குபற்றுவோர்...
எந்த தேவையைக் கருத்தில் கொண்டு எங்கு அரங்கை செயற்படுத்துகின்றோமோ அவர்களே இவ்வரங்கின்பங்குபற்றுவோர்கள்.
அரங்கவிளையாட்டுக்கள்...
மக்களை அரங்கச்செயற்பாட்டிற்குள் உள்ளீர்க்க, அவர்களை தயார்படுத்தவும், தளச்சிப்படுத்தவும் அரங்கவிளையாட்டுக்கள் அடிப்படை.
கதையாடல்/ கதைகேட்டல்
அரங்கின் உயிர்நாடியே இதுவாகும். ஆற்றிகையின்போது, ஆற்றிகையின் பின்பும் பிரச்சனை பற்றி கரந்துரையாடலும், கதைகேட்டலும் அவசியமாகும்.
நம்பிக்கை..
அரங்காடிக்கும், பங்குபற்றுவோருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை அல்லது தொடர்பு இவ்வரங்கிற்கு அடிப்படையாகின்றது.
போலச்செய்தல்/ பாத்திரம் ஏற்று நடித்துக்காட்டுதல்...
கதையாடல்/ கதைகேட்டல் ஊடக பங்குபற்றுவோர் வெளிப்படுத்தும் படிமங்களை செய்துகாட்டுதல் அல்லது நடித்துக்காட்டுதல் இங்கு முக்கியமாகும்.
சேர்ந்து செயற்படுதல்..
இனங்காணப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பங்குபற்றுவோருடன் அரங்காடிகளும், அரங்காடிகளுடன் பங்குபற்றுவோர்களும் சேர்ந்து செயற்படுதல் அவசியம்.
பறைமுழக்கம்...
பறைதான் எம் இசை. எம் நாடி நரம்புகளை இயக்கவும், எம்மை ஆற்றுப்படுத்வும் வல்லமை உண்டு இவ்இசைக்கு.
இனி யாழ்பல்கலைக்கழக நாடகமும் அரங்கியல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அவல நீக்க ஆற்றுப்படை அரங்க அனுபவங்கள் பற்றி நோக்குவோம். நாடகமும் அரங்கியலும் செயற்திட்டத்திற்காக இதனை நாம் ஆரம்பித்தாலும் இறுதியில் இது ஒரு சமூக வேலைத்தட்டமாகவே நடைபெற்று முடிந்தது.
இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சிறுவர்களிடமே எமது செயற்பாட்டை ஆரம்பித்தோம். ஆங்காங்கே நிற்கும் சிறுவர்களை அழைத்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தபோது சத்தம் கேட்டு இன்னும் பலசிறுவர்கள் வந்து விளையாட்டில் இணைந்தார்கள் அவர்களோடு விளையாடி, பாட்டுப்பாடி, கைதட்டி, அவர்களைத் தயார்படுத்திக்கொண்டு “சுக்கு பக்பகு”.., என்ற ரயில் பாடலுடன் முகாமைச் சுற்றி வருவோம். உள்ளே இருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளின் சத்தம் கேட்டு வெளியே வருவார்கள் ஒரு சிலர் ரயில்வண்டியில் இணைந்து கொள்வார்கள், இன்னும் பலர் எம்மை பின்தொடர்ந்து அரங்கச்செயற்பாடுகள் நடைபெறும்இடத்திற்கு வருவார்கள். எல்லோரும் இணைந்து கைகளைத் தட்டி பாடல்களைப் பாடுவோம். இதனிடையே பாத்திரங்கள் அரங்கில் தோன்றி செயற்படும் மக்களுடன் உரையாடும். அரங்கில் அரங்கடிக்கும்( பாத்திரங்கள்) பங்குபற்றுவோருக்பகும் (மக்கள்) இடையிலான தூட்டல் துலங்கலுக்கு ஏற்ப அரங்கு வளர்ந்து செல்லும். இச்செயற்பாட்டில் பங்கெடுத்தவர்கள் ச. தேவமுகுந்தன்(ஆசிரியர் நீர்கொழும்பு ) த.அருள்குமரன் (ஆரிரியர்மானிப்பாய் இந்துக் கல்லூரி) ச. சுதாகரன் ( ஆசிரியர் இணுவில் மத்திய கல்லூரி) த.தர்மலிங்கம்( விரிவுரையாளர் விபுலானந்தா இசை, நாடகப் பயிலகம்) ப. உதயசீலன் ( சமூகசெயற்பாட்டாளர்) பொ. சுரேந்திரன் ( யேர்மனி) என எல்லோரும் இணைந்து செயற்பட்டோம். சுனாமியால் பாதிக்கப்பட்டுபாடசாலைகளில் தங்கியிருந்த மக்களிடையே ஆரம்பித்த எமது செயற்திட்டம் அவர்களின் தற்காலிககுடியருப்புக்கள் வரை நீண்டு சென்றது. ஏறத்தாழ ஒருவருட காலமாக வாரநாட்களில் பல்கலைக்கழகத்தில்கற்பதும் , வாரவிடுமுறை நாட்களில் பாதிக்கப்பட்வர்களிடத்தில் சென்று அரங்கச்செயற்பாடுகளை செயற்படுத்தினோம்.
பொலிகண்டி, சக்கோட்டை, முனை, புனிதநகர், மணற்காடு, குடத்தனை என ஆறு கிராமங்களைத்தேர்வு செய்து அங்குள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் அரங்கிற்கு கொண்டுவந்தோம். அவர்களுக்கும் ,எங்களுக்கும் இடையே ஓர் நம்பிக்கை, உறவு மலர்ந்தது. தொடர்ச்சியான செயற்பாடுகள்ஊடாக அக்கிராமத்து இளஞ்ஞர்கள் எம்மோடு இணைந்து செயற்பட்டார்கள். எந்தக்கடல் சீற்றம் கொண்டு தங்கள் உடமைகளை , உறவுகளை அழித்ததோ அந்தக் கடலில் அலைமேல் ஏறி ஆழ்கடல் தேடி முத்தெடுப்போம் என சபதம் கொண்டனர்.
இவ்இளைஞர்கள் எல்லோரையும் ஒன்றினயணைத்து அரங்காலயம் என்ற கூட்டு அரங்கச்செயற்பாடு ஒன்று முனை பாடசாலையில் நடாத்தினோம். தம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் கட்டுமரத்தற்கு மதிப்பளித்துமீண்டும் கடலாழுவோம் என்று உறுதி பூண்டார்கள்.
நாடகமும் அரங்கியலும் என்பது தான் எமது கற்கைநெறி. நாம் நாடகம் படிக்கின்றோம், நாடகம் போடுவோம் என்ற நிலையில் மட்டும் நின்று விடாமல் அரங்கவியலைப் பயிலவும், பயிறுவிக்கவும், பயன்படுத்தவும் தயாராகவேண்டும். ஏனெனில் அரங்கு எம்மையும் உயிர்ப்பிக்கும், எம்சமூகத்தையும் உயிர்ப்பிக்கும் வல்லமைபடைத்தது.
செல்ரன் & முகுந்தன்