கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வரலாற்று சின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் திகழ்கின்றது. ‘கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலம்’ ஆக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேசத்துக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இவ்வாலயம் வீர சைவ மரபைப் பின்பற்றியது. ஏராளமான இந்து மக்கள்
இவ்வாலயத்தில் வழிபாடியற்றி வருவதுடன் பெருமளவில் சமூக ஒன்றிணைவுக்கான இடமாகவும் இக் கோயில் விளங்குகிறது. தேரோட்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதும் தான்தோன்றீஸ்வரம் என்று குறிப்பிடப்படுவதும் கொக்கட்டிச்சோலை பதியேயாகும்.
தேரோட்டத்துக்கு போகுறோம் என்றே மட்டக்களப்பு மக்கள் கூறுவர். ஆவணி மாதம் தமிழுக்கு 1ஆம் திகதி வளர்பக்க பிரதமையில் கொடியேறி 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று பூரணையை அடுத்த நாள் தேரோட்டம் நடைபெற்று தீர்த்தோற்சவம், கொடியிறக்குவதுடன் முடிவடையும்.
பண்டைய சிறப்புப் பெற்ற இத்தலம் கி.பி 3ம், 4ம் நூற்றாண்டளவில் கொக்கட்டிச்சோலையையும் உள்ளடக்கிய மண்முனை இராச்சியத்துடன் தொடர்புடையது. மேகவர்ணன் (கி.பி 301 – 382) ஆட்சியின் போது ஒரிசா தேசத்து குகசேனனுடைய மகள் உலகநாச்சி கௌதமபுத்தரின் தசனத்தை, கைலயங்கிரியில் குக வம்சத்தினரின் வைத்திருந்த சிவலிங்கத்தையும் ஒளித்துக் கொண்டு வந்து மேகவர்ணனிடம் தசனத்தைக் கொடுத்தாள். அப்போது மட்டக்களப்பு மன்னன் குணசிங்கன் என மட்டக்களப்பு மான்மியம் கூறும் மேகவர்ணன் மண்முனை காட்டு பிரதேசத்தை இவளுக்கு பரிசாக கொடுத்தான். (மட்டக்களப்பு மான்மியம், எவ்.எக்ஸ்.ஸி. நடராசா, 1952ஆம் பக்கம் 43,68) இதனை மகாவம்சமும் உறுதி செய்கின்றது. உலகநாச்சி தான் கொண்டு வந்த காசிலிங்கத்தை (படிகலிங்கம்) பிரதிஷ்டை செய்து கட்டிய ஆலயம் ஆரையம்பதியிள் எல்லையிலுள்ள கோயில் குளமாகும். இதே போல கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலையும் கட்டி முடித்தாள்.
திடகன் எனும் வேடன் காடு திருத்தும் போது கொக்கட்டி மரத்தை வெட்ட உதிரம் (இரத்தம்) பாய்ந்தது. இதை திடகன் உலகநாச்சியிடம் சொல்ல அவள் வந்து பார்த்து லிங்கம் இருப்பதைக் கண்டு கோயில் அமைத்து வட நாட்டில் இருந்து பட்டர் மூவரை அழைத்து பூசை செய்யும்படி கட்டளை இட்டாள். இவளது வழியில் வந்தவர்கள் உலகநாச்சி குடி (உலகிப்போடி குடி) எனவும் இவளால் குடியேற்றப்பட்ட படைப்பினர் படையாட்சி குடி எனவும் கலிங்கத்தில் இருந்து இவளுடன் வந்தவர்கள் கலிங்ககுடி எனவும் வழங்கப்பட்டனர். உலகநாச்சி என்னும் மண்முனை அரசி பல நிர்வாக கட்டமைப்புக்களை வகுத்து கோயில் பணியினை சிறப்பாக முன்னெடுத்தாள். ஒரிசாவிலிருந்து தருவிக்கப்பட்ட 30 சிறைக் குடிகள் கொக்கட்டிச்சோலை ஆலயத்திலும் தொண்டூழியம் செய்தனர்.
இதே நடைமுறைகள் பின்னர் கலிங்க மாகோன் குளக்கோட்டன் காலத்தில் மேலும் பிரிவுகள் வகுக்கப்பட்டு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பாக வந்தது. மாகோன் ஆலய நிர்வாக நடைமுறைகளை வகுத்தான். மாகோன் வகுத்த வன்னிமை இன்று வரை நடைமுறையில் உள்ளது. ஆலயத் தொழும்புகள் திருப்படைப் பத்ததியில் கூறியபடியே நடைபெறுகின்றன. தேசத்து வயல் சேகரிக்கும் வழக்கம் கூட இன்றுமுள்ளது.
மாகோன் அரன் ஊழியம் வகுத்தல் என்ற கல்வெட்டு சிவன் கோயிலுக்கு செய்யும் தொண்டுகள் யார் யார் செய்வதெனக் கூறுகின்றது. சொல்லரிய விளக்கேற்றல், பூவெடுத்தல், தூசகற்றல், சாணமிடல், அணிவிளக்கல் எனத் தொடர்கிறது. இதிலே சுவாமி சூகரவேட்டைக்கு செல்லுதல், கஞ்சி முட்டி கூறுதல் போன்றவையும் வகுக்கப்பட்டுள்ளன. தேசம், வன்னிமை, குடி என்ற அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது. தேசம் என்பது தேசத்துக்குரிய மக்கள் வன்னிமை கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர். இதனாலேயே தேசத்துக் கோயில் எனப்பட்டது. பங்கு கூறும்
கல்வெட்டு இந் நடைமுறைகளைக் கூறுகின்றது. நன்மைக்கும் தீமைக்கும் கும்ப வரிசை கல்வெட்டு இத் தேசத்தவருக்குரிய மதிப்பு மரியாதை பற்றி கூறும்.
தேரோட்டம் முக்கியமான நிகழ்வாக இங்கு இடம்பெறுகிறது. திருவிழாக்கள் முடிவில் தேரோட்ட நிகழ்வு இடம்பெறும். கலிங்க மாகோன் காலமிருந்து தேரோட்ட நிகழ்வு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தருமசிங்கன் எனும் மட்டக்களப்பு மன்னன் சோழ சிப்பிகளை தருவித்து மூன்று தேர்கள் செய்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. ஆனால் இங்கு நடைபெறும் தேரோட்ட நிகழ்வானது ஒரிசா பூரி ஜகந்தாதர் கோயில் தேரோட்ட முறைப்படியே அமைந்துள்ளது.
கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கள் காலத்தே ஜகந்-நாதர் ஆலய தேரோட்டம் தொடங்கியது. கலிங்க மாகோனும் அனந்தவர் மனும் சம காலத்து கலிங்க மன்னர்கள், ஜகந்நாதர் ஆலயத்திலேயே பலராமன், ஜகந்நாதர், சுபத்திரை தேர்களும் இங்கு சித்திரத்தேர் (சிவனுக்குரியது) பிள்ளையார் தேர் (முருகன், பிள்ளையார்) அமைந்துள்ளது. இவர்கள் இத் தேர்களில் உலாவருவர். இங்கும் மூன்று தேர்கள் இருந்தன என்பதும் குற்றம் பொறுக்காமல் ஒரு தேர் ஆற்றில் மூழ்கியது என்பதும் மக்களிடையே நிலவும் கதையாகும்.
கால் புதையும் மணலிலே இத் தேர்கள் ஓடுவதே ஓர் அபூர்வமாகும். தேரோட்டம் முடிவுற விடிவதற்கு ஆறு நாழிகைக்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் இடபரூபராய் சிவன் கோயிலுக்கு வடக்கே உள்ள வீரபத்திரர் கோயிலுக்கு செல்வார். அங்கு திருவேட்டை எனப்படும் சூகர வேட்டை நடைபெறும். சூகரம் என்பது பன்றி. இது ஆணவ மலமாகிய பன்றியை வேட்டையாடி ஆன்ம ஈடேற்றத்திற்கு
எம்பெருமான் வழிகாட்டுதலைக் குறிக்கும். சூகர வேட்டைத் திருவிழா முடிவுற்றதும் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலிலே சுவாமி இளைப்பாறி வீற்றிருப்பார்.
குடுக்கை கூறும் நிகழ்வு இடம் பெறும். இதை கஞ்சி முட்டி கூறும் வரிசை என்பர். தேசத்தில் வாழும் பல்வேறு வகுப்பினரும், குடி வழி மரபினரும் பதினெண் சிறைளாக வகுக்கப்பட்டு தொண்டூழியம் புரிபவர்களும் வரையறுக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குடுக்கை கூறும் நிகழ்வு மூலம் அவரவர் மரபுக்கேற்ப கௌவிரக்கப்படுவர். இது பற்றிய விபரம் பங்கு கூறும் விதம், சீர் வரிசை என்பன பற்றிய விளக்கம் திருப்படைக் களஞ்சியம் என்ற கல்வெட்டில் உள்ளது. இன்று கஞ்சி முட்டி கூறும் நிகழ்வுகள் நடைபெறுவதில்லை வழக்கொழிந்து விட்டது.
இதேமுறையிலான மகாபிரசாதம் எனப்படும் சோறுகறி முட்டியில் வழங்கும் நிகழ்வு பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது. பங்கு கூறும் நிகழ்வு முடிந்ததும் சுவாமி தீர்த்தமாடச் செல்வார். பண்டு சுவாமி தீர்த்தமாகும் இடம் தீர்த்தமாடுகின்ற வில்லு என்ற பரந்த குளமாக இருந்தது. இன்று கஞ்சி முட்டி கூறும் இடம் சுவாமி தீர்த்தமாடும் குளம் எல்லாம் வயல்களாகிவிட்டன. தீர்த்தமாடல் நிகழ்வு இன்று கோயில் கிணற்றிலே இடம் பெறுகின்றது. தீர்த்தமாடல் நிகழ்வு முடிந்ததும் வழமை போல மதிய பூசை நடைபெறும். நேர்த்திக் கடனுக்கு வந்த உயிருள்ள பொருட்கள் விற்கப்படும், அன்றிரவு கொடி இறக்கப்படும். அரசி உலகநாச்சியால் நிர்மாணிக்கப்பட்ட இவ் ஆலயம் மட்டக்களப்பு மன்னன் தருமசிங்கன், கலிங்கமாகன், குளக் கோட்டன் கண்டிக் காலத்தில் கண்டி மன்னன் இராஜ சிங்கன், ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் போன்றோரது மானியங்களும் கிடைக்கப்பெற் றன. தேரோட்ட நிகழ்வு என்பதன் விசேடத்தை நோக்கினால் ஈழத்தில் தேரோடும் எல்லா ஆலயங்களையும் விட தான்தோன்றீஸ்வரத்தின் தேரோட்ட சிறப்பு விசேடமானது.